புரட்டாசி கிருத்திகை: முருகனை வழிபட கிடைக்கும் நன்மைகள்!

43

புரட்டாசி கிருத்திகை: முருகனை வழிபட கிடைக்கும் நன்மைகள்!

ஆடி மாதம் எப்படி அம்மனுக்கு முக்கியமோ அதே போன்று தான் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். இந்த மாத த்தில் வரும் ஒவ்வொரு நாளும் முக்கியமான நாளாகவே கருதப்படுகிறது. அதுவும் இந்த மாதம் வரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் திருமாலுக்கு விரதமிருந்து வழிபாடு செய்வது நல்லது.

பெருமாள் தவிர புரட்டாசி மாத த்தில் வரும் சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை, பிரதோஷம் என்று ஒவ்வொரு கடவுளுக்கும் முக்கியமான நாட்கள் வருகிறது. அதன்படி, இன்று புரட்டாசி 2ஆவது சனிக்கிழமை. அதுவும் புரட்டாசி கிருத்திகை நாள். புரட்டாசி கிருத்திகையான இன்று விரதமிருந்து மாலையிக் முருகப் பெருமானை வழிபட வேண்டியவை யாவும் நிறைவேறும் என்பது ஐதீகம்.

திருமணமாகாதவர்களுக்கு உடனடியாக திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு முருகப் பெருமானைப் போன்று குழந்தை பாக்கியம் அமையும். சஷ்டி திதி முருகனுக்கு உகந்தது. 27 நட்சத்திரங்களில் ஒன்றான கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது.

சரவணப் பொய்கையில் தாமரை மலரில் முருகப் பெருமான் மிதந்து வந்த போது அவரை ஆறு கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்தனர். அந்த 6 நட்சத்திரங்களின் தொகுப்பாக, கிருத்திகை நட்சத்திரமாக வானில் இடம் பெற்றதாக ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த 6 கார்த்திகைப் பெண்களையும் சிறப்பிக்கும் வண்ணம் கிருத்திகை கொண்டாடப்படுகிறது.

ஜோதிட ரீதியாக பார்க்கையில், செவ்வாய் பகவானுக்கு அதிகபதி முருகன். ஆகையால், கிருத்திகை நாளில் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுக்கு சென்று செவ்வாய் பகவானின் அருளைப் பெறலாம். இதன் மூலமாக செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷம், புத்திர தோஷம் ஆகியவை நீங்கும்.

மேலும், சொத்துப் பிரச்சனை, கோர்ட் வழக்கு, சகோதரர்கள் பிரச்சனை ஆகியவற்றிற்கு தீர்வு கிடைக்கும். செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்ட ஜாதக் காரர்கள், கார்த்திகை தினத்தன்று முருகப் பெருமானுக்கு விரதமிருந்து வழிபட்டு வந்தால் கவலைகளும், பிரச்சனைகளும் நீங்குவதோடு வாழ்வில் அனைத்து செல்வங்களும் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி உண்டாகும்.

கிருத்திகை நட்சத்திர நாளில் விரதமிருந்து முருகப் பெருமானை வழிபட அறிவுச் செல்வம், நீண்ட ஆயுள், நிறைவான வாழ்க்கை நல்ல குணமுள்ள வாழ்க்கைத் துணை அமையப் பெற்று பிள்ளை பாக்கியமும் கிடைக்கப் பெறும்.

குழந்தைப் பாக்கியம் இல்லாத தம்பதிகள் தை கிருத்திகையில் முருகனை வழிபட அவர்களுக்கு முருகப் பெருமானைப் போன்று அழகிய குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

தை கிருத்திகையில் விரதமிருந்து முருகனை வணங்கினால் வேண்டிய வரங்கள் கிடைக்கும். பழநி மலை முருகன் கோயிலில் பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி உப்பிலா உணவு எடுத்துக் கொள்வார்கள்.

திருமணம் வரம் வேண்டும் பெண்கள் கன்யா மாத த்தில் அதாவது புரட்டாசி ஐப்பசி மாதத்தில் வரும் குமார பௌர்ணமி நாளில் முருகனைப் போன்று கணவன் அமைய விரதம் மேற்கொள்வர். அந்த குமார பௌர்ணமி நாளில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து எந்தவித உணவையும் எடுத்துக் கொள்ளாமல் இருப்பார்கள். மாறாக, பால் மற்றும் பழங்கள் ஆகியவற்றை மட்டுமே உணவாக எடுத்துக் கொள்வர்.

ஒரு நாள் முழுவதும் முருகப் பெருமானுக்கு விரதமிருந்து மாலையில் கோயிலுக்கு சென்று முருகனை வழிபட்டு விரதத்தை நிறைவு செய்வார்கள். இதன் மூலமாக அவர்களுக்கு வேண்டிய வரங்கள் கிடைக்கும்.