புரட்டாசி பௌர்ணமி: முன் ஜென்ம பாவங்கள் நீங்க சிவன் வழிபாடு!

97

புரட்டாசி பௌர்ணமி: முன் ஜென்ம பாவங்கள் நீங்க சிவன் வழிபாடு!

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். புரட்டாசி மாதம் என்றாலே விசேஷம் தான். அதிலேயும் சனிக்கிழமை புரட்டாசி என்றால் இன்னும் சிறப்பு. வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெற புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமையை தவற விடக்கூடாது. இந்த புரட்டாசி மாதம் முழுவதுமே பெருமாளை நினைத்து வழிபட்டு வர அனைத்து தேவைகளையும் பெருமாள் பூர்த்தி செய்வார் என்பது ஐதீகம்.

புரட்டாசி மாதம் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என்று விசேஷமாக பார்க்கப்படுகிறது. மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள், புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை நாளை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த நாளில் தர்ப்பணம் செய்தால், முன்னோர்களது சாபம் நீங்கும்.

அந்த வகையில், புரட்டாசி மாதம் வரும் பௌர்ணமி நாளும் மிகவும் விசேஷமான நாளாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் யாரை வழிபட வேண்டும்? எப்படி வழிபட வேண்டும்? என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்…

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்றாலும், இந்த மாதம் அரும் பௌர்ணமி நாளில், சிவன் கோயிலுக்கு சென்று வழிபாடு மேற்கொள்பவர்களுக்கு முக்தி கிடைக்கும். இந்த மாதம் வரும் பௌர்ணமியில் அம்பாளின் திருமுகம் பிரகாசமாக ஜொலித்து காணப்படும் என்று கூறப்படுகிறது. ஆதலால், இந்த புரட்டாசி பௌர்ணமியில், அம்பாளை நினைத்து தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் தவமிருந்து அவர்களது தவ வலிமையை அதிகரித்துக் கொள்வார்கள்.

இதன் காரணமாக புரட்டாசி மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் பூஜைகள் செய்வது, தியானம், மந்திரங்கள் சொல்வது ஆகியவற்றை செய்தால் நம் ஆத்ம சக்தி அதிகரிக்கும். அதோடு அம்பாளின் பரிபூரண அருளும் கிடைக்கும். தீய எண்ணங்களிலிருந்து விடுபட்டு இறைவனின் அடையும் அற்புதமான நாளாக இந்த நாள் இருக்கும்.

மேலும் புரட்டாசி மாதம் வரும் பௌர்ணமி நாளில் கிரிவலம் வருவது போன்ற விசேஷ வழிபாடு செய்யப்படுவது உண்டு. இந்த பௌர்ணமி நாளில் சிவ வழிபாடு மேற்கொண்டால் பூர்வ ஜென்ம பாவங்கள் அனைத்தும் நீங்குவதோடு இந்த ஜென்மத்தில் நமக்கு நல்வாழ்வு அமையும்.

பௌர்ணமி நாளான இன்று சிவன் கோயிலுக்கு சென்று நெய் விளக்கேற்றி வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்பவர்களுக்கு அனைத்து தெய்வங்களின் அருள் கிடைக்கும். மேலும் சிவனை வழிபாடு செய்வதோடு, இந்த நாளில் மகாலட்சுமி பூஜை செய்வது கூடுதல் சிறப்பு பலனை கொடுக்கும்.

மகாலட்சுமிக்கு தாமரை மலர் சாற்றி சகஸ்ர நாமம் அர்ச்சனை செய்து குத்து விளக்கேற்றி, குங்குமத்தால் அர்ச்சனை செய்தால் வேண்டிய வரம் கிடைக்கும். மேலும், மகாலட்சுமியை இப்படி வழிபடுவதால் கணவன் – மனைவிக்கிடையிலான ஒற்றுமை மேலோங்கும். குழந்தை இல்லாத தம்பதியினரும் குழந்தை பாக்கியம் வேண்டி மகாலட்சுமியை வழிபாடு செய்யலாம்.