புரட்டாசி முதல் சனிக்கிழமை: கஷ்டங்கள் தீர பெருமாள் வழிபாடு!

32

புரட்டாசி முதல் சனிக்கிழமை: கஷ்டங்கள் தீர பெருமாள் வழிபாடு!

விஷ்ணு பகவானுக்குரிய புரட்டாசி மாதத்தில் வரும் முதல் சனிக்கிழமையில் விரதமிருந்து பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பு.

முழு விரதம் மாதம்:

ஒவ்வொரு ஆண்டும், சில மாதங்களில் விரத நாட்கள் வரும். ஆனால், புரட்டாசி மாதத்தில் மட்டும் மாதம் முழுவதுமே விரத நாளாக அமைகிறது. புரட்டாசி வெள்ளி, புரட்டாசி முதல் சனி, சனி விரதம், நவராத்திரி விரதம், சித்தி விநாயக விரதம், சஷ்டி விரதம், அனந்த விரதம், அமுக்தாபரண விரதம், ஜேஷ்டா விரதம், மஹாலட்சுமி விரதம், மகாளயப் பட்சம், மகாளய அமாவாசை என்று திருவிழாவாக அமைகிறது.

பெருமாளுக்கு உகந்த சனி:

பொதுவாக சனிக்கிழமைகளில் பெருமாளை தரிசிப்பது விசேஷமானது. அதிலும் புரட்டாசி மாத சனிக்கிழமை (முதல் சனி, 2ஆவது சனி, 3ஆவது சனி, 4ஆவது சனி) என்று அனைத்து சனிக்கிழமைகளிலும் பெருமாளை வணங்கி வழிபட்டு வர எல்லா விதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்க்கை கிடைக்கப் பெறுவீர்கள்.

புதன் கிரகத்திற்குரிய மாதம்:

ஜோதிடத்தில் வரும் 6ஆவது ராசியான கன்னி ராசியின் மாதம் புரட்டாசி. இந்த மாதத்தின் அதிபதி புதன் பகவான். மகா விஷ்ணுவின் சொரூபம் புதன். அதாவது, புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம். அதனால் புரட்டாசி மாத விரதமும், வழிபாடும் மகாவிஷ்ணுவின் அருளை பெற்று தரும்.

புதனின் வீடு கன்னி ராசியாகவும், அது பெருமாளின் அம்சமாகவும் கருதப்படுகிறது. இந்த புரட்டாசி மாதத்தில் தான் கன்னி ராசியில் சூரியன் அமர்கிறார். ஆதலால், இந்த மாதத்தில் பெருமாளுக்கு பூஜை, புனஷ்காரங்கள், வழிபாடுகள் செய்யப்படுகிறது. சனி பகவானும், புதனும் நட்பு கிரகங்கள் என்பதால், புரட்டாசி மாதங்களில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் விசேஷமானதாக பார்க்கப்படுகிறது.

புரட்டாசி மாதம் எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் கூறுகிறது. இதனால் இந்த மாதத்தில் நாம் பெருமாளை வழிபாடு செய்வதால் எமபயம் நீங்கி, நல் வாழ்க்கையை பெறலாம் என்பது ஐதீகம்.

புரட்டாசி மாத விரதம்:

ஒவ்வொரு சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை வணங்குவது நல்லது. அப்படி விரதத்தை மேற்கொள்ள முடியாதவர்கள் புரட்டசியில் வரும் சனிக்கிழமைகளில் முடிந்த அளவிற்கு அன்னதானம் செய்தால் பெருமாளின் அருள் கிட்டும் என்பது ஐதீகம்.

சனிக்கிழமை விரதத்தின் முக்கியத்துவம் என்ன:

பொதுவாகவே சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது மிகவும் சிறப்பானது. அதிலும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை என்றாலே சொல்லவே வேணாம். அந்தளவிற்கு சிறப்பு வாய்ந்த து. ஏனென்றால், சனிக்கிழமை தோறும் பெருமாளையும், ஆஞ்சநேயரையும் வழிபட்டு வருவோம். அப்படியிருக்கும் போது விஷ்ணு பகவானுக்குரிய புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை என்றால் சொல்லவா வேண்டும்.

பெருமாளுக்குரிய கோயில்களில் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் சிறப்பு வாய்ந்தது. இங்கு, பீமன் என்ற குயவன் வாழ்ந்து வந்தான். அவன், பெருமாளின் தீவிரமான பக்தன். சனிக்கிழமைகளில் விரதம் இருக்க சங்கல்பம் எடுத்துக் கொண்டான். ஆனால், ஏழ்மையில் வாடிய பீமன் விரதம் என்பதற்காக கோயிலுக்கு செல்லக் கூடிய சூழல் இல்லாமல் பானை போன்ற மண்பாண்ட பொருட்களை செய்து வந்தான்.

கோயிலுக்கு சென்றாலும் கூட அவனுக்கு, பூஜை செய்ய தெரியாது. ஒரு நாள் கோயிலுக்கு சென்று சாமியை பார்த்து நீ எல்லாம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வந்தார். கோயிலுக்கு செல்ல முடியாத நிலையில்,  பெருமாளையே இங்கு அழைத்துவிட்டால் என்ன என்று பீமன் எண்ணினான். அதனால், அவர் களிமண்ணால் ஒரு பெருமாள் சிலையை செய்தான். அதற்கு பூஜை செய்ய பூக்கள் வாங்க காசு இல்லை. அதனால், மண்பாண்டங்கள் செய்யும் போது மீதமாகும் களிமண்ணை வைத்து பூக்கள் செய்து அதனை மாலையாக பெருமாளுக்கு சாற்றினான்.

அந்த நாட்டை ஆண்ட மன்னன் தொண்டைமான் என்பவரும் பெருமாளின் தீவிர பக்தர். அவர், சனிக்கிழமை தோறும் பெருமாளுக்கு தங்கப்பூ மாலையை சாற்றி வழிபட்டு வந்தார். தொடர்ந்து தங்கப்பூ கொண்டு மாலை சாற்றி வழிபட்டு வந்த போது ஒரு நாள் தங்கப்பூ மாலைப் பதிலாக களிமண்ணால் செய்யப்பட்ட மாலை தான் பெருமாள் கழுத்தில் இருந்தது.

இதைப் பார்த்த கோயில் அர்ச்சகர்கள், பராமரிப்பு செய்பவர்கள் மீது சந்தேகமடைந்து அவர்களை விசாரித்தனர். அப்போது மன்னன் கனவில் தோன்றிய பெருமாள், குயவன் பீமனின் பக்தியால் அவனது களிமண் மாலையை தான் ஏற்றுக் கொண்டதாகவும், குயவனுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறும் கூறினார். இதையடுத்து, குயவன் இருக்கும் இடத்திற்கு சென்ற அரசன் அவரை கௌரவித்து அவருக்கு வேண்டிய உதவிகளை செய்தார்.

குயவன் பீமனின் பக்தியை கௌரவிக்கும் வகையில், தற்போது கூட திருப்பதியில் மண் சட்டியில் தான் நைவேத்தியம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

சனி கெடுதல்களிலிருந்து காக்கும் பெருமாள்:

புரட்டாசி மாதத்தில் வரும் திருவோணம் திதியில் திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்தி கொண்ட நாளாக கருதப்படுகிறது. அதே போன்று சனிக்கிழமையில் சனி பகவான் அவதரித்து புரட்டாசி மாதத்திற்கு சிறப்பைக் கொடுத்தார். இதன் காரணமாக புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டு வந்தால், சனியின் கெடுதல்களிலிருந்து நம்மை பாதுகாப்பார்.