பெருமாள் தர்ப்பணம் செய்த கோயில்!

79

பெருமாள் தர்ப்பணம் செய்த கோயில்!

சாதாரணமாக முன்னோர்களுக்கு வருடா வருடம் அவர்கள் மறைந்த தினத்தில் திதி கொடுப்பது என்பது நம் மரபில் வேரூன்றிய விஷயம். ஆனால், தெய்வமே கருணையோடு இறங்கி வந்து மனிதர்களுக்காக திதி கொடுக்கும் அற்புதத் தலம் ஒன்று உள்ளது என்றால் அதுதான் நென்மேலி.

17ம் நூற்றாண்டில் ஆற்காடு நவாப் செங்கல்பட்டு உள்ளிட்ட பிரதேசத்தை ஆண்டு வந்தான். ஊருக்கு ஊர் திவான்களை நியமித்து அவர்கள் மூலம் வரி வசூல் செய்தான். அவர்களில் ஒருவர் யக்ஞநாராயண சர்மா. அவரது மனைவி, சரசவாணி. குழந்தை பாக்கியம் இல்லாத அவர்களுக்கு ஸ்ரீமந் நாராயணனிடம் அளவு கடந்த பக்தி. அந்த நாராயணனையே தம் மகனாக எண்ணி வாழ்ந்தனர். நென்மேலியில் நாராயணன் கோயிலை நிர்மாணிக்கும் பணியை அந்த தம்பதியர் மேற்கொண்டனர்.

எந்த கட்டத்திலும் போதும் என்று அவர்களால் திருப்தியடைய இயலாததால் மேலும் மேலும் செலவு அதிகரித்துக் கொண்டே போயிற்று. திவானாக இருப்பவர், வரி வசூலிக்கும் அதிகாரம் உள்ளவர், அந்த வசூல் பணத்தில்தானே கோயில் கட்டுமான செலவை சரிகட்டுகிறார் என்ற சந்தேகம் தம்பதியைச் சுற்றிப் படர ஆரம்பித்தது. அதுவே கேள்வியாகக் கேட்கப்பட்டபோது, ‘இவ்வூரையே காத்து பரிபாலிப்பவனுக்குத்தானே செய்தேன்?’ என்று அப்பாவியாகக் கேட்டார்கள் அவர்கள்.

தகவல் அறிந்து மக்களின் வரிப்பணத்தை தன் இஷ்டப்படி கோயிலுக்குச் செலவழிப்பதா என்று கோபமானான் நவாப். சிறிதும் யோசிக்காமல் அவர்களுக்கு மரண தண்டனை அளித்தான். வம்பு பேசிய ஊர்தான் யக்ஞசர்மா தம்பதி மீது அளவற்ற அன்பும் கொண்டிருந்தது. காட்டுத்தீயாக, மரண தண்டனை விஷயம் காஞ்சிபுரம் தாண்டி நென்மேலியை வந்தடைந்தது.

தனக்கான தண்டனையை அறிந்த யக்ஞநாராயணர் தம்பதி, லட்சுமி நாராயண பெருமாள் சந்நதியின் முன்பு கண்களில் நீர் பெருக நின்றனர். மௌனமாக பெருமாளுடன் பேசினர். அவர்கள் மனசுக்குள் திருவிடந்தை ஆதிவராஹரை சுட்டிக் காட்டினார் நாராயணர். உடனிருந்தவர்களிடம், ‘நாங்கள் திருவிடந்தை செல்கிறோம். மரண தண்டனையை அங்கே ஏற்றுக்கொள்ளப் போகிறோம்’ என்றார்கள். அதற்குள் நவாபிற்கு யக்ஞநாராயண சர்மாவின் பக்தி ஈடுபாடு பற்றித் தெரியவந்தது. கோயில் பணி என்பது நவாப் தானாக செய்யவேண்டிய கடமை என்று புரிந்தது. நவாப் கண் கலங்கினார். உடனே நென்மேலியை அடைந்தார்.

அதே சமயம் திருவிடந்தை திருக்குளத்தின் படித்துறையில் கைகள் இரண்டையும் சிரசுக்கு மேல் கூப்பி யக்ஞநாராயண சர்மாவும், சரசவாணியும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். ‘‘முன் ஜென்ம பாவமோ, வினையோ தெரியவில்லை. நாங்கள் இறந்தால் எங்களுக்கு ஈமக்கிரியை செய்ய ஒரு மகன் இல்லை.

ஒரு சொட்டு நீரும், எள்ளும் விடக்கூட வாரிசில்லாமல் இப்படி அனாதைகளாக இறக்கிறோமே என்கிற வேதனை எங்களை வாட்டுகிறது. இறப்பது பற்றி கவலையில்லை. ஆனால், அதற்குப்பின் சாஸ்திரம் சொல்லும் கர்மாக்களை எங்களுக்குச் செய்ய யார் இருக்கிறார்கள்? இறப்புக்குப் பின் பூரணத்வம் பெறாத நிலையில், எங்கள் ஆத்மாக்கள் வேதனையுறத்தான் வேண்டுமா? நாராயணா, எங்களுக்கு நீதான் மகன். உன் மனைவி மகாலட்சுமி, எங்கள் மருமகள். இருவரும் எங்களுக்கு ஈமக்கிரியைகள் செய்யுமாறு வேண்டிக் கொள்கிறோம். நாங்கள் மட்டுமல்ல, எங்கள் நிலையில் யார் இருந்தாலும் உன் சந்நதிக்கு வந்துவிட்டால் அவரவர்களின் முன்னோர்களுக்கு நீயே சிராத்தம் எனும் நீத்தார் கடனை செய்துவிடு’’ என்று உள்ளம் உருகிக் கரைந்தார்கள். பிறகு திருக்குளத்தில் இறங்கி மறைந்தார்கள். நாராயணன் திருவடி சேர்ந்தார்கள்.

நவாப் மாபெரும் தவறு செய்துவிட்டேனே என்று கவலையுற்றார். இதற்கென்ன பிராயசித்தம் என்று லட்சுமி நாராயணப் பெருமாளை நோக்கி கைகூப்பினார். அப்போது லட்சுமி நாராயணர் முன்பு ஒரு பெருஞ்சோதி தோன்றி அசரீரியாகப் பேசியது: ‘‘யக்ஞநாராயண சர்மா தம்பதியைப் பற்றி கவலை வேண்டாம். நானே அவர்களுக்கு மகனாக இருந்து எல்லா ஈமக்கிரியைகளையும் செய்கிறேன். அவர்கள் ஆத்மா சாந்தியடையும். இத்தலத்தில் யார் வந்து, இறந்தோர் ஈமக்கிரியைகளை செய்ய வேண்டினாலும் நானே அவர்களுக்காக அந்தக் கடன்களை நிறைவேற்றுவேன்.’’

ஊர்மக்கள் வியப்பு தாங்காமல் வெகுநேரம் அமைதி காத்தனர். நவாப் கைகள் இரண்டையும் கூப்பித் தொழுதான். அதன்படி இத்தலத்தில் சிராத்தம் எனும் நீத்தார் கடன் நிறைவேற்றும் ‘சிராத்த ஸம்ரக்ஷண பெருமாள்’ எனும் திருநாமத்தோடு நாராயணன் சேவை சாதிக்கிறார். நென்மேலி தென்றல் தாலாட்டும் அழகிய கிராமம். மத்தியில் குடி கொண்டிருக்கிறார் லட்சுமி நாராயணப் பெருமாள். சிறிய கோயிலாக இருந்தாலும் கீர்த்திக்கு குறைவில்லை.

கருவறையில் பிராட்டியை மடியில் அமர்த்திக்கொண்டு தரிசனம் அருள்கிறார். வைகானஸ ஆகம மகான்களால் ஆராதிக்கப்பட்ட இந்த மூர்த்தி. காந்தம் இரும்பைக் கவர்வதுபோல தரிசிப்போரை கருணையால் ஈர்த்துப் பிணைக்கிறார். தாயாருக்கு தனி சந்நதி இல்லை. ஆனால், அபூர்வமாக சாளக்கிராம வடிவில் தாயார் அருள்பாலிக்கிறாள். அருகேயே இந்தத் தலத்தின் சிறப்பு மூர்த்தியான சிராத்த ஸம்ரக்ஷண பெருமாள் உற்சவ மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். இவர்தான் இங்கு நீத்தார் கடன் நிறைவேற்றுகிறார்.

இக்கிராமத்திற்கு புண்டரீக நல்லூர், பிண்டம் வைத்த நல்லூர், அர்க்கிய புஷ்கரணி ஜீயர் குளம், சௌலப்பிய கயா என்றெல்லாமும் பெயர்கள் உண்டு. திவசம், திதி, சிராத்தம் என்று பலவிதமாக அழைக்கப்படும் நீத்தார் கடனை ‘அபர காரியங்கள்’ என்பார்கள். அதாவது, சுபமற்ற காரியங்கள். ஆனால், இக்கோயிலில் அதெல்லாம் சுபமான, நல்ல கிரியைகளாகக் கருதப்படுகின்றன. ஏனெனில், அதைச் செய்பவர் பெருமாளே அல்லவா? அதனால், ‘சுப சிராத்தம்’ என்கிறார்கள். பித்ருவேளை எனும் பிற்பகல் 12 முதல் 1 மணிக்குள் இந்தக் கிரியைகளை பெருமாள் செய்கிறார்.

இந்த ஒரு காலம் மட்டும் பெருமாள் ஆராதனம் ஏற்று விரதமிருந்து செய்கிறாராம். பெருமாள் திதி கொடுக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் 11 மணிக்குள் பெருமாள் சந்நதிக்கு வந்து விடுகிறார்கள். மஞ்சள் அட்சதையைத்தான் இங்கு பயன்படுத்துவர். எனவே, மஞ்சள் அட்சதை, எள், தர்ப்பைப் புல், விரலில் அணிந்துகொள்ளும் பவித்ரம், வெற்றிலை, பாக்கு, பழம் ஆகியவற்றை பெருமாளுக்கு முன்பு வைத்து சங்கல்பம் செய்து கொள்கிறார்கள்.

அதற்குப் பிறகு, கோயிலின் பின்புறத்திலுள்ள விஷ்ணுபாதம் எனும் பெருமாளின் திருவடிக்கருகே சாஸ்திர பண்டிதர் வழிகாட்ட, திதி கொடுக்க வந்தவர்கள் அமர்ந்து தங்கள் மூதாதையருக்காக சங்கல்பம் செய்து கொண்டு சுவாமியிடம் சமர்ப்பிக்கிறார்கள். இவ்வாறு சமர்ப்பிப்பதே சிராத்த ஸம்ரக்ஷணமாகும். மீண்டும் அவர்கள் பெருமாள் சந்நதிக்கு வருகிறார்கள். பெருமாளுக்கு மகாசங்கல்பமும், சகல உபசாரங்களுடன் பூஜைகளும் நிகழ்த்தப்படுகின்றன.

இறுதியில் சம்பிரதாயமான திவச சமையல் போலவே வெண் பொங்கல், தயிர் சாதம், பிரண்டை-எள் துவையல் போன்றவை நைவேத்யம் செய்யப்படுகின்றன. இந்த எளிமையான உணவுகளை ஏற்று நம் மூதாதையர்களின் ஆத்மாக்களை பெருமாள் திருப்தி செய்வதாக ஐதீகம். இன்றும் இத்தலத்தில் தந்தையை இழந்த மகன், வாரிசு இல்லாத அல்லது இழந்த பெற்றோர், விபத்து, தற்கொலை காரணமாக அகால மரணமடைந்தவர்களின் வாரிசுகள், பெற்றோரை நிர்க்கதியாக விட்டுவிட்டு, அவர்கள் மறைவுக்குப் பின் மனம் திருந்தி அவர்களுக்காக திதி கொடுக்க வரும் மகன் என்று விதவிதமாக யார் வந்தாலும் அவர்கள் சார்பில் தானே அவர்கள் ஸ்தானத்தில் நின்று திதி கொடுக்கிறார், சிராத்த ஸம்ரக்ஷண பெருமாள்.

கருணை கடலினும் பெரிது என்பார்கள். ஆனால், இத்தலத்தை பொறுத்தவரையிலும் நாராயணன் கருணைக் கடலாகவே திகழ்கிறார். இத்தலம் காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு-திருக்கழுக்குன்றம் சாலையில் அமைந்துள்ளது. சென்னை தாம்பரத்திலிருந்து பேருந்து வசதிகள் நிறைய உண்டு. செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் சாலையில் நென்மேலி என்ற கிராமத்தில் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

திதி கொடுக்க மறந்தவர்கள், திதி கொடுப்பதே தெரியாமல் இருந்தவர்கள், வாரிசு இல்லாத அல்லது இழந்த பெற்றோர், விபத்து, தற்கொலை காரணமாக அகால மரணமடைந்தவர்களின் வாரிசுகள் என்று யார் இந்த தலத்துக்கு வந்தாலும் அவர்கள் சார்பில் தானே நின்று திதி கொடுக்கிறார் சிரார்த்த சம்ரட்சண பெருமாள்.

இந்த கிராமத்தின் மத்தியில் சிரார்த்த சம்ரட்சண பெருமாள் எனும் பெயரோடு லட்சுமி நாராயணன் சேவை சாதிக்கிறார். பித்ரு வேளை பூஜை எனும் பிற்பகல் 12 மணி முதல் 1 மணிக்குள் இந்த கிரியைகளைப் பெருமாள் ஆராதனம் ஏற்று விரதமிருந்து செய்கிறாராம்.

திதி கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் 11 மணிக்குள் பெருமாள் சந்நிதிக்கு வர வேண்டும்.மஞ்சள், எள், தர்ப்பைப்புல், விரலில் அணிய பவித்ரம், வெற்றிலை பாக்கு, பழம் ஆகியவற்றை பெருமாளிடம் சமர்ப்பித்து, தங்களுடைய பித்ருக்களுக்காக சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். பிறகு கோவிலின் பின் பக்கத்திலுள்ள விஷ்ணு பாதம் எனும் பெருமாளின் திருவடிக்கு அருகில் சாஸ்திரிகள் வழிகாட்ட திதி கொடுப்பவர் தன் முன்னோருக்கு மறுபடியும் ஒரு சங்கல்பம் செய்து கொண்டு சுவாமியிடம் சமர்பிக்க வேண்டும்.

இவ்வாறு சமர்ப்பிப்பதே சிரார்த்த சம்ரட்சணமாகும். மீண்டும் அவர்கள் பெருமாள் சந்நிதிக்கு வந்து பெருமாளுக்கு மகா சங்கல்பமும் சகல உபசாரங்களுடன் பூஜையும் நடத்த வேண்டும். இறுதியில் நம் வீட்டில் செய்யும் சம்பிரதாய திவசச்சமையல் போல வெண்பொங்கல், தயிர் சாதம், பிரண்டையுடன் கலந்து எள் துவையல் எல்லாம் செய்யப்பட்டு நைவேத்தியம் செய்யப்படுகின்றன.

இதை ஏற்று, நம் முன்னோர்களின் ஆத்மாக்களைப் பெருமாள் திருப்திப்படுத்துவதாக ஐதீகம். கயா, காசி, ராமேஸ்வரம் ஆகிய தலங்களில் இல்லாத சிறப்பு இந்த தலத்தில் உண்டு. தலை முறை சாபம் பலவகை படும் (முன்னோர்கள் மாந்தீரிகம் தொழில் செய்ததாலும், அடுத்தவர்களை ஏமாத்தி வாழ்வது, தாய் தந்தைக்கு சாப்பாடு போடாமலும், வாரிசு இல்லாத உறவினருக்கு இறுதி சடங்கு செய்யாமல் இருப்பது, அடுத்தவரின் சாபம் வாங்குவது போன்றவை முக்கியமானவை) இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் நாக தோஷம் இருக்கும்.

ஒரு அடி மேலே சென்றால் பத்து அடி கீழேயே இறங்கும். பித்ருக்களுக்கு செலுத்த வேண்டிய கடமையிலிருந்து தவறியவர்கள் அனைவரும் இதை நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பெண்களும் தங்கள் பெற்றோர்களுக்கும், முன்னோர்களுக்கும் சிரார்த்தம் செய்யலாம்.