பேய், பிசாசு தொல்லை நீங்க காட்டேறும் பெருமாள் வழிபாடு!

23

பேய், பிசாசு தொல்லை நீங்க காட்டேறும் பெருமாள் வழிபாடு!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் காயாமொழி கிராமம் அமைந்துள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற காரையடி சுடலைமாடன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் சுடலைமாடன், முண்டன்சாமி, பிரம்ம சக்தி, பேச்சியம்மன், குளிக்கரை பேச்சியம்மன், இசக்கியம்மன், செங்கடசாமி, கட்டேரி பெருமாள், வைணப்பெருமாள், ஐயம்பந்தி, சிவனந்த பெருமாள் உள்ளிட்ட தெய்வங்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். இந்தக் கோயிலின் தல விருட்சம் காரை மரமாகும்.

மூலவரான காரையடி சுடலைமாடன், கட்டேரி பெருமாள் (காட்டேறும் பெருமாள்) உள்ளிட்ட தெய்வங்களை மனமுருகி வழிபட்டால் தீராத வினைகள் தீருவதுடன், குழந்தைப்பேறு கட்டாயம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். மேலும் செய்வினை கோளாறு, பேய், பிசாசு தொல்லைகள் நீங்குவதுடன், தொழில் வளமும் பெருகும்.

காரையடி சுடலைமாட சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத முதல் செவ்வாய்க்கிழமை அன்று திருவிழா நடைபெறும். இந்த விழாவை ஒட்டி அருகில் உள்ள பலவேசம் முத்து சாமிக்கு, திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடத்தப்படும். செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் பலவேசம் முத்துகோவிலில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அருஞ்சுனை காத்த அய்யனார் கோயிலுக்கு, பக்தர்கள் மேள தாளங்களுடன் செல்வார்கள்.

பின்னர் அங்குள்ள குளம் மற்றும் கிணற்றில் குளித்துவிட்டு அருஞ்சுனை காத்த அய்யனார் மற்றும் பிற தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபடுவார்கள். அதன் பின்னர் பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து கொண்டு ஊர்வலமாக செல்வார்கள். நண்பகல் 12 மணியளவில் பலவேசம் முத்து கோவிலில் சிறப்பு பூஜை நடைபெறும். அதன் பிறகு சுவாமிக்கு படைக்கப்பட்ட படக்கஞ்சி, பானகாரம் ஆகியவை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படும்.

பலவேச முத்து கோயிலில் இரவு 9 மணியளவில் திருவிளக்கு பூஜை நடைபெறும். அதன் பிறகு முளைப்பாரியை சுற்றி பெண்கள் கும்மி அடித்து பாட்டுப்பாடுவார்கள். அதனைத் தொடர்ந்து மேள தாளத்துடன் சுடலைமாட சுவாமி கோயிலுக்கு முளைப்பாரி ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். பின்னர் அங்குள்ள பேச்சி அம்மன் முன்பு முளைப்பாரி வைக்கப்படும். முன்னதாக சுவாமி வரலாற்றைக் கூறும் விதமாக கணியான் கூத்து நடைபெறும்.

சுடலைமாடன், முண்டன் சாமி, கட்டேரி பெருமாள், பேச்சியம்மன், பிரம்மசக்தி, இசக்கியம்மன் உள்ளிட்ட தெய்வங் களுக்கு ஆளுயர மாலைகளும், எலுமிச்சை மாலை, வாழைத்தார், தேங்காய், பழம், பனியாரம் ஆகியவை படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் ஐயம்பந்தி, செங்கடசாமி, சிவனந்த பெருமாள், வயணப்பெருமாள் ஆகியோருக்கு சிறப்பு பூஜை நடைபெறும். அதன்பிறகு பேச்சியம்மன் உள்ளிட்ட பெண் தெய்வங்களுக்கு செங்கிடா, பன்றி, கோழி ஆகியவை பலியிடப்படும். அதன் பின்னர் சுடலைமாடன், முண்டன் சாமி, கட்டேரி பெருமாள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு தலை வாழை இலையில் ஆடு, பன்றி ஆகியவை பலியிடப்படும். அதன் பிறகு சுவாமி வேட்டைக்கு செல்வார். அப்போது வாணவேடிக்கை நடைபெறும். இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இதையடுத்து பக்தர்களுக்கு சுவாமி அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி நடைபெறும்.