பொங்கு சனி பகவான் கோயில்!

255

பொங்கு சனி பகவான் கோயில்!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம், திருக்கொள்ளிக்காடு என்ற ஊரில் அமைந்துள்ளது அருள்மிகு அக்னீஸ்வரர் கோயில். இந்த கோயிலில் அக்னீஸ்வரர் சுயம்பு லிங்கமாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பொதுவாக நவக்கிரகங்கள் ஒன்றையொன்று பார்க்காமல் தான் அமைந்திருக்கும். ஆனால், இந்தக் கோயிலில் ப வடிவில் அமைந்து ஒன்றையொன்று பார்க்கும் வண்ணம் இருக்கும் என்பது சிறப்பு.

தனுசு சுப்பிரமணியர்:

இந்தக் கோயிலில் முருகன் கையில் வில்லுடன் தனுசு சுப்பிரமணியராக அருள்பாலிக்கிறார். உழைப்பின் பெருமையை பறைசாற்றும் வகையில் சனி பகவான், கலப்பை ஏந்திய நிலையில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

பொதுவான தகவல்:

ராஜகோபுரம் என்பது கிடையாது. கோயிலின் நுழைவாயில் வழியாக சென்றால், பலிபீடம் மற்றும் நந்தி உள்ளது. கொடிமரமும் கிடையாது. கோயில் பிரகாரத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், மகாலட்சுமி, சனி பகவான் மற்றும் பைரவர் சன்னதிகள் உள்ளன. விநாயகப் பெருமான், காசி விஸ்வநாதரை வணங்கி விட்டு கோயிலுக்குள் சென்றால், நேரே மூலவர், தரிசனம். மேற்கு நோக்கி இருக்கிறது. அக்னி வழிபட்டதால், சிவலிங்க திருமேனியானது சற்று சிவப்பு நிறமாக காட்சியளிக்கிறது.

சனி தோஷம்:

சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், மறக்காமல், திருக்கொள்ளிக்காடு வந்து அக்னீஸ்வர்ரை வணங்கி சனி பகவானை வழிபட்டால், சனி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

தல பெருமை:

அக்னி பகவான் தனது தோஷம் நீங்க இத்தல இறைவனை வழிபட்டதால், தோஷமும் நீங்கப் பெற்றுள்ளது. ஆதலால், இத்தல இறைவன், அக்னீஸ்வரர் என்றும், அம்மன், மென்திருவடியம்மன் என்றும் அழைக்கப்படுகின்றனர். பொதுவாக சிவன் கோயில்களில் பைரவர் சன்னதிக்குப் பிறகு தான் சனி பகவான் சந்தி வரும். ஆனால், இந்தக் கோயிலில் பைரவர் சன்னதிக்கு முன்னதாக மகாலட்சுமியின் சன்னதிக்கு அருகில் சனி பகவான் சன்னதி அமைந்திருப்பது தலத்தின் சிறப்பம்சம்.

இந்த தலத்திற்கு வன்னி, ஊமத்தை மற்றும் கொன்றை என்று 3 தல விருட்சங்கள் உள்ளன. இதில், வன்னி மரம் குபேர செல்வத்தை தருகிறது. ஊமத்தை மரம் மனக்கவலையை நீக்குகிறது. கொன்றை மரம் குடும்ப ஒற்றுமையை பலப்படுத்துகிறது.

ஒன்றையொன்று பார்க்கும் நவக்கிரகம்:

பொதுவாக எந்த சிவன் கோயிலை எடுத்துக் கொண்டாலும் நவக்கிரகங்கள் ஒன்றை ஒன்று நேரடியாக பார்க்காதவாறு அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்தக் கோயிலில் ”ப” வடிவில் ஒன்பது கிரகங்களும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு இருக்கின்றனர். நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் அக்னீஸ்வரர் அழித்துவிடுவதால், பாவங்களுக்கு தண்டனை கொடுக்கும் வேலை என்று இந்த நவக்கிரகங்களுக்கு கிடையாது. ஆதலால், இந்த நவக்கிரகங்கள் ப வடிவில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த நவக்கிரகங்கள் என்று எந்த சக்தியும் கிடையாது. ஏனென்றால், இத்தலத்து இறைவன் அக்னீஸ்வரரே அதிக சக்தி படைத்தவர்.

கலப்பை ஏந்திய சனி பகவான்:

உழைப்பின் பெருமையை பறைசாற்றும் வகையில் சனி பகவான், கலப்பை ஏந்திய நிலையில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இவரை, சனிக்கிழமை மட்டுமின்றி வாரத்தின் அனைத்து கிழமைகளிலும் வன்னி இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட்டால் சிறப்பு பலன் கிடைக்கும். சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இத்தல இறைவனை வணங்கி, சனி பகவானை வழிபட்டால் சனி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

தல வரலாறு:

ஏழை, பணக்காரன் என்று பாராபட்சம் பார்க்காதவர் சனி பகவான். இவரது பார்வையில் சரி, தவறு என்பதற்கு மட்டுமே பலன் உண்டு. அவரவர் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப தக்க தண்டனை கொடுப்பதில் இவரை மிஞ்ச எவரும் இல்லை. ஒருவரது பிறந்த நேரத்தின்படி அவருக்கு நன்மை செய்வதாக சனி பகவான் அமைந்திருந்தால், அவர்களுக்கு அளவற்ற நன்மைகளையும், முன்னேற்றத்தையும் கொடுப்பார். ஆனால், அவர் செய்யும் நன்மைகளை விட்டு விட்டு தீயவைக்கு மட்டுமே ஒவ்வொருவரும் பயப்படுவர்.

சனி பகவான் அக்னி வனம் எனப்படும் இத்தலத்தில் வந்து கடும் தவமிருந்தார். சனி பகவானின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அக்னி உருவில் தரிசனம் தந்து சனியை பொங்கு சனியாக மாற்றினார். அதோடு, இந்த தலத்துக்கு வந்து தன்னையுன், பொங்கு சனியையும், வழிபடுவோருக்கு சனி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். எனவே இத்தலம் திருநள்ளாறு சனி பகவான் கோயிலுக்கு பிறகு சிறந்த சனி பகவானின் பரிகார தலமாக அக்னீஸ்வரர் கோயில் விளங்குகிறது.

நளன் என்ற மன்னன் ஏழரை சனியின் தாக்கத்தால் தான் இழந்த பதவி, குடும்பம், நாடு, மக்கள் ஆகியவற்றை இந்த கோயிலில் உள்ள இறைவனை வழிபட்ட பிறகு மீண்டும் பெற்றார் என்று கூறப்படுகிறது. ஜாதகத்தில் சனி பகவானின் ஏழரை சனி, மங்கு சனி, பொங்கு சனி, பாத சனி, அஷ்டம சனி ஆகிய சனி பெயர்ச்சிகளை கொண்டவர்கள் இந்த கோயிலுக்கு வந்து இறைவனுக்கும், நவக்கிரகங்களுக்கும் வழிபாடு செய்வதால், சனி பெயர்ச்சிகளினால் கெடு பலன் ஏற்படாமல் நன்மைகளை மட்டுமே அள்ளி அள்ளி தருவார் என்பது ஐதீகம்.

குறிப்பாக ஜாதகத்தில் பொங்கு சனி திசை நடப்பவர்கள் இந்த கோயிலுக்கு வந்து வழிபடுவதால், சனி பகவானால், கிடைக்க வேண்டிய நற்பலன்கள் பன்மடங்கு அதிகரிக்கும்.