பகலில் தூங்கினால் ஆபத்தா?

95

பகலில் தூங்கினால் ஆபத்தா?

தூக்கம் என்பது ஒரு மனிதனுக்கு முக்கியமான ஒன்று. ஒரு நாள் சரியாக தூங்கவில்லை என்றால் அன்றைய தினம் முழுவதும் சோர்வாகவே காணப்படுவோம், அதுமட்டுமல்லாமல் நமது மனநலமும் பாதிக்கப்படுகிறது.

போதுமான தூக்கமில்லாததால் உடலுக்குத் தேவையான சுரப்பிகளும் ஒழுங்காகச் சுரப்பதில்லை. நமக்கு வலியை உணரும் சக்தியை அதிகரிப்பதுடன் அறிவாற்றலைப் பாதிக்கிறது. முடிவெடுக்கும் ஆற்றல், திட்டமிடும் ஆற்றல், நினைவாற்றல், கவனம் ஆகியவைத் தூக்கம் இல்லாத்தால் பாதிக்கப்படுகிறது. ஆகவே ஒரு நாளில் குறையாமல் 5 மணிநேரமாவது இரவு நேரத்தில் தூங்குவது அவசியமானது.

அது இருக்கட்டும் பகலில் தூங்கலாமா? பகலில் தூங்குவது நல்லது தானா என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம். தூக்கத்தை மூன்றாக பிரிக்கின்றனர். மந்தமான தூக்கம், கும்பகர்ணன் தூக்கம் மற்றும் ஆழமான தூக்கம். தூக்கத்தை மூன்று நிலைகளாக பிரித்தாலும் இரவு நேரத்தில் தூங்குவது முறையானது மற்றும் தினமும் 8 மணி நேர தூக்கம் முக்கியமானது. 8 மணி நேரம் நாம் ஓய்வு கொடுப்பதற்கேற்ப நமது மூளையும் சுறுசுறுப்பாக செயல்படும்.  8 மணிநேர தூக்கம் தொடர்ந்து பாதிக்கப்பட்டால் உடலில் குறைபாடுகள் ஏற்படும்.

இந்த நவீன காலத்தில் அதிகப்படியான பணிச்சுமை, மன உளைச்சல் போன்றவை பெரும்பாலோனோருக்கு உள்ளதால் பகல் நேர தூக்கம் தேவையாக உள்ளது. ஆனால் பகலில் தூங்குவதால் உடல் எடை அதிகரித்துவிடும் என்றும், மூளை மந்தமாக இருக்கும் என்றும் கூட கூறுவார்கள்.

ஆனால் இது குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் பகல் தூக்கம் மூளையை மேலும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.  நாள் ஒன்றில் 12 முதல் 14 மணி நேரம் வரை உழைப்பவர்கள் குறிப்பாக மூளைக்கு அதிக வேலை கொடுக்கும் பணி செய்பவர்கள் பகல் நேரத்தில் தூங்கலாம்.

அதிக நேரமாக இல்லாமல் சின்ன தூக்கம் போடுவதன் மூலம் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க முடியும். காலையில் எழுந்ததிலிருந்து மூளைக்கு தொடர்ச்சியாக வேலை கொடுக்கும் போது மூளை சோர்ந்து போகிறது. இந்த நேரத்தில் கொடுக்கும் சிறு இடைவெளியான சின்ன தூக்கம் மூளைக்கு சுறுசுறுப்பை தருகிறது. இது குறித்து பலமுறை ஆய்வுகள் மேற்கொண்ட போதும் இது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இதை நிரூபிக்க கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட நபர்களை ஆய்வுக்கு உட்படுத்தியது. இதில் சிலரை இரவு நேரங்களில் தூங்க வைத்தது. சிலரை இரவு நேரங்களிலும் பகலில் ஒன்றரை மணி நேரமும் தூங்க வைத்தது. ஆய்வின் முடிவில் இரவு நேரம் மட்டும் தூங்கியவர்களை விட பகல் நேரத்தில் தூங்கியவர்களின் மூளையின் செயல்பாட்டுதிறன் வேகமாக இருந்தது.

மேலும் அவர்களின் அறிவுத்திறன் அதிகமானதை கண்டு இந்த பகல்நேர குட்டி தூக்கம் குறித்து ஆய்வு தொடர்ந்து செய்யப்பட்டது. தொடர்ந்து செய்த ஆய்விலும் கூட மூளைக்கு மட்டுமல்ல இதயத்துக்கும் உடலின் உள்ளுறுப்புகளுக்கும் கூட இவை நன்மையே செய்கிறது.

ஆகவே இரவு துங்கினாலும் பகல் முழுவதும் ஓய்வில்லாமல் செய்யும் இந்த வேலைக்கு இடையில் போடும் ஒரு குட்டி தூக்கம் இதயத்துக்கும் சற்று ஓய்வு கிடைப்பதால் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது, இரத்த அழுத்த நோய் உண்டாகும் வாய்ப்பு குறைகிறது. இதனால் மாரடைப்பு பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படுகிறதாம். அதிகப்படியான உடல் உழைப்பு கொண்டிருப்பவர்கள், மூச்சு வாங்க வேலை செய்பவர்கள், சுமை தூக்கும் தொழிலாளிகள், உடலை அதிகப்படியாக வருத்தி வேலை செய்பவர்கள், ஓயாமல் வேலை செய்யும் இல்லத்தரசிகள் கூட பகல் நேரத்தில் ஒரு குட்டி தூக்கம் போடும் போது நாளின் அடுத்த பாதி நாளை உற்சாகமாக கழிக்கலாம்.

பகலில் அதிக நேரம் தூங்கினால் ஆபத்து:

எல்லா ஆய்வுகளும் பகல் நேரத்தில் தூங்குவது ஆரோக்கியமான நன்மைகளை மிகுதியாக கொண்டிருக்கிறது என்று கூறுகிறது. ஆனால் இரவு தூக்கம் போல் பகல் தூக்கம் அதிகப்படியானால் ஆரோக்கியத்துக்கு பதில் ஆபத்தான கோளாறுகளை தான் தரும் அதாவது இரவு பணி செய்பவர்களை தவிர.

பகல் தூக்கம் என்பது குறைந்தது 15 நிமிடங்கள் தொடங்கி அதிகப்படியாக 45 நிமிடங்கள் தான். பணியில் இருப்பவர்கள் கூட ஐந்து நிமிடம் மேஜை மேல் கவிழ்ந்து குட்டி தூக்கம் போடலாம். அடுத்த 5 மணி நேரங்கள் அவர்கள் பணியை உற்சாகமாக செய்ய உதவும்.

ஆனால் இவை இரண்டு மணி நேரத்திற்கு மேல் நீடிக்க வேறு விதமான குறைபாடுகளை கொண்டு வரும். உதாரணமாக நீரிழிவு. அதோடு உடலில் சோம்பேறித்தனத்தையும் அதிகரிக்க செய்யும். அதன் பிறகு எப்போதும் மந்தமாக இருக்கவே முடியும். பகல் நேர தூக்கத்தை சரியான விதத்தில் பயன்படுத்தி கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம்.