மதம் பிடித்த யானையை அடக்கிய கோழி!

58

மதம் பிடித்த யானையை அடக்கிய கோழி!

சோழ மன்னன் கரிகால்_பெருவளத்தான் தன் பட்டத்து யானை மேல் ஏறி உறையூரை வலம்வந்து கொண்டிருந்தபோது யானைக்கு மதம் பிடித்து எல்லோரையும் துன்புறுத்த ஆரம்பித்தது. யானையை அடக்க முடியாமல் மன்னனின் படை வீரர்கள் கலங்கினர். சிவபெருமான் மீது தீராத பக்தியுள்ள மன்னன் இறைவனை நினைத்து பிரார்த்தனை செய்தான்.

சிவபெருமானும் கருணை கூர்ந்து உறையூர் தெருவிலுள்ள ஒரு கோழியை தன் கடைக்கண்ணால் நோக்க, அந்தக் கோழியும் அசுர பலம் பெற்று பறந்து சென்று யானையின் மத்தகத்தின் மீது அமர்ந்து அதை குத்தித் தாக்கியது. கோழியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் யானை மிரண்டு ஓடி ஒரு வில்வ மரத்தடியின் கீழ் நின்றது. கோழியும் அங்கே வந்தமர்ந்தது.

கோழியின் வீரச் செயலைக் கண்ட மன்னன் உறையூர் தலத்தின் மகிமையை உணர்ந்து தான் வணங்கும் சிவபெருமானுக்கு இத்தலத்தில் ஆலயம் ஒன்று எழுப்பினான். இத்தலம் கோழியூர் என்ற பெயரில் சிறப்புடன் விளங்கியது. இத்தல வரலாற்றை நினைவுப்படுத்தும் வகையில் மூலவர் கருவறை வெளிச் சுவற்றில் வலதுபுறம் யானையின் மதத்தை கோழி அடக்கும் புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இப்போதும் அந்தக் கோயிலுக்கு சென்றால் அந்த சிற்பத்தைக் காணலாம்.