மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட வேண்டிய கோயில்!
ராமநாதபுரம் மாவட்டம் குண்டுக்கரை என்ற ஊரில் உள்ள கோயில் சுவாமிநாத சுவாமி கோயில். இந்தக் கோயிலில் சுவாமிநாத சுவாமி மூலவராக காட்சி தருகிறார். இந்தக் கோயிலில் சித்திரை மாதம் முதல் தேதியில் பூச்சொரிதல் விழா கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பது நாளும் துர்க்கைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகிறது.
தைப்பொங்கல் திருநாளில் சாகம்பரி என்ற காய்கறி பழ அலங்காரத்தில் அம்பிகை காட்சி தருவாள். வைகாசி விசாகத்தை ஒட்டி பிரம்மோற்சவம், சூரசம்ஹார விழா 7 நாள், திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய முக்கிய விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூரைத் தொடர்ந்து இந்தக் கோயிலில் தான் சூரசம்ஹார திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்தக் கோயிலில் முருகப் பெருமான் 11 தலை மற்றும் 22 திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். கோயிலுக்குள் 18 திருக்கரத்துடன் கூடிய 7 அடி உயர துர்க்கை சிலையும் உள்ளது. இந்தக் கோயிலில் வந்து வழிபாடு செய்பவர்கள் கல்வி வேள்விகளில் சிறந்து விளங்குவார்கள். மனநலம் (புத்தி சுவாதீனம்) பாதிக்கப்பட்டவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டு தீர்த்தம் சாப்பிட்டால் குணமாகும் என்பது ஐதீகம்.
தங்களது வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் முருகனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாற்றியும் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் தங்களது நிவர்த்திக்கடனை செலுத்துகின்றனர். சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்னதாகவே முருகப் பெருமான் இந்தக் கோயிலுக்கு வந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது முருகனுக்கு 11 தலை மற்றும் 22 திருக்கரங்கள் இருந்ததாக தல வரலாறு கூறுகிறது.
அதே வடிவில் முருகப் பெருமான் விஸ்வரூபம் எடுத்த நிலையில் தரிசனம் தருகிறார். மற்ற கோயில்களில் எல்லாம் முருகன் பிரணவ மந்திரத்திற்கு பொருள் கூற சிவனின் மடியில் அமர்ந்து இருப்பது போல் சிலை இருக்கும்.
ஆனால் இந்த தலத்தில் தகப்பன் சுவாமி போல குன்றின் மீது அமர்ந்து பிரணவ மந்திரத்திற்கு பொருள் சொல்ல சிவன் அதை நின்று கேட்கும் நிலையில் அமைந்துள்ளது. இருவரும் ஒருவரே என்பதற்கேற்ப இங்கு தகப்பன் சுவாமி குன்றின் மீது அமர்ந்து அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும்.
முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரத்தில் வாழ்ந்த பாஸ்கர சேதுபதி தினமும் இந்த கோயிலுக்கு வந்து வழிபாடு செய்வார். ஒருமுறை அவர் சுவாமிமலை சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பி வரும் பொழுது கனவில் முருகன் தோன்றி குண்டுக்கரை முருகன் கோயிலில் உள்ள பழைய முருகன் சிலையை அகற்றி விட்டு புதிய சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால் உனக்கும், உனது மக்களுக்கும் நன்மை உண்டாகும் என்று கூறிவிட்டு மறைந்தார்.
ராமநாதபுரம் வந்த பாஸ்கர சேதுபதியும் கனவில் முருகன் கூறியபடி பழைய முருகன் சிலையை அகற்றி விட்டு புதிதாக சிலையை நிறுவினார். சுவாமிமலை சுவாமிநாதன் என்ற பெயரை சூட்டினார். இங்குள்ள முருகனுக்கு பதினோரு தலை இரண்டு கைகளுடன் அருள் பாலிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.