மயானக் கொள்ளை திருவிழா வழிபாடு!

95

மயானக் கொள்ளை திருவிழா வழிபாடு!

ஆண்டுதோறும் மாசி மாத அமாவாசை தினத்தன்று தமிழகத்தில் அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயானக் கொள்ளை திருவிழா கொண்டாடப்படுகிறது. ஆனால், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயிலில் கொண்டாடப்படும் மயானக் கொள்ளை மிகவும் சிறப்பு வாய்ந்தது. அங்காள பரமேஸ்வரி மீனவர்கள் வணங்கும் தெய்வமாக விளங்கிறது. ஆகையால், மீனவர்கள் தான் இந்த திருவிழாவை அதிகளவில் கொண்டாடுகின்றனர். இந்த விழாவின் அடிப்படை – சிவபெருமான் பிரம்மதேவனின் சிரம் கொய்த நிகழ்வுதான்.

சிவனுக்கும், பிரம்மாவுக்கு ஐந்து தலைகள் இருந்தன. எனவே, தனக்கு 5 தலைகள் இருக்கும் போது ஏன் சிவனை வணங்க வேண்டும் என்று பிரம்மா ஆணவம் கொண்டார். அவரது ஆணவத்தை அழிக்கவே, பிரம்மாவின் ஒரு தலையை சிவபெருமான் கொய்துவிட்டார். அதன் காரணமாக சிவனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டதுடன், கொய்யப்பட்ட பிரம்மனின் தலை சிவபெருமானின் கரத்தில் வந்து அமர்ந்தது.

அதை அவர் கீழே போட்டாலும் மீண்டும் அவர் கரத்துக்கே வந்தது. இவ்வாறு 99 முறை நடந்த நிலையில், “அதைக் கீழே போடாமல் சிறிது நேரம் கையிலேயே வைத்திருங்கள்’ என்று பார்வதி தேவி சிவனிடம் கூறினாள். அவர் அவ்வாறே செய்ய, பிரம்மாவின் தலை கபாலமாக மாறி அவர் கரத்திலேயே ஒட்டிக் கொண்டது. அதையே பிச்சைப் பாத்திரமாக ஏந்தி ஈசன் பிச்சையெடுக்கும் நிலை ஏற்பட்டது. போடப்படும் உணவையெல்லாம் கபாலமே விழுங்கிவிட்டதால், உலகுக்கே படியளக்கும் ஈசனுக்கே உணவு கிடைக்கவில்லை.

இந்த நிலையில், பிரம்மாவின் தலை கொய்யப்பட்ட வேதனையில் இருந்த சரஸ்வதி தேவி, அது கபாலமாக மாறி சிவன் கையில் ஒட்டிக்கொள்ளுமாறு உபாயம் கூறிய பார்வதி மீது சினம் கொண்டு, “கொடிய உருவத்துடன் பூவுலகில் திரிக! என சாபமிட்டாள். அதன்படி பார்வதி தேவி பூவுலகில் பல தலங்களில் அலைந்து, முடிவில் மலையனூர் வந்தாள். அங்கே அங்காள பரமேஸ்வரியாகக் கோயில் கொண்டாள்.

அந்த சமயத்தில் சிவபெருமானும் மலையனூர் வர, அங்காள பரமேஸ்வரி சிவன் கையிலிருந்த கபாலத்தில் சுவையான உணவை இட்டாள். எல்லாவற்றையும் கபாலம் விழுங்கிவிட, அங்கு வந்த மகாலட்சுமி பரமேஸ்வரிக்கு ஒரு உபாயம் கூறினாள். அதன்படி பரமேஸ்வரி இரண்டு கவளம் உணவை கபாலத்தில் இட்டாள். அதை கபாலம் உண்டுவிட்டது. மூன்றாவது கவளத்தைக் கைதவறியதுபோல கீழே போட்டாள். உணவின் சுவையால் கவரப்பட்ட கபாலம், அதை உண்ண சிவனின் கரத்தைவிட்டு நீங்கி கீழே போனது.

அப்போது அங்காள பரமேஸ்வரி விஸ்வ ரூபமெடுத்து, பிரம்ம கபாலம் மீண்டும் ஈசனின் கரத்தை அடைய முடியாதபடி அதைத் தன் காலால் மிதித்து பூமியில் ஆழ்த்திவிட்டாள். ஈசனைப் பற்றிய பிரம்மஹத்தி தோஷமும் அகன்றது. இதன் காரணமாக, மயானக் கொள்ளை எனும் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மேல்மலையனூரில் அங்காள பரமேஸ்வரி கோயிலில் சித்திரை மாத திருவிழாவில் சக்தி கிரகம் கோயிலை சுற்றி வருகிறது. அங்காள பரமேஸ்வரிக்கு சக்தி கிரகம் எடுக்க, ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பருவதராஜ குல மீனவர் இனத்தில் பிறந்த ஒரு பூசாரியை தேர்வு செய்து அந்த பூசாரி மீது அங்காளம்மன்னுடைய அருளை இறக்குவார்கள்.

அக்னி குளக்கரையில் சக்தி கிரகம் எடுத்து, அதனை பூசாரி தனது தலையில் சுமந்து மேல்மலையனூரை சுற்று ஆடி வருவார். பிறகு மயானத்திற்கு சென்று அங்கு படையலாக வைக்கப்பட்டிருக்கும் சுண்டல், கொழுக்கட்டை, தான்யம் ஆகியவற்றை கொண்டு அம்மனுக்கு பூஜை செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.