மழை வரம் அருளிய முத்து மாரியம்மன்!

47

மழை வரம் அருளிய முத்து மாரியம்மன்!

கோயம்புத்தூர் மாவட்டம் கணேசபுரம் என்ற பகுதியில் உள்ள கோயில் முத்து மாரியம்மன். இந்தக் கோயிலில் முத்து மாரியம்மன் மூலவராக காட்சி தருகிறாள். ஒவ்வொரு ஆண்டும் அமாவாசை, பௌர்ணமி, ஆடி மாத வெள்ளிக்கிழமைகள், ஆடி விளக்கு வழிபாடு, சித்திரை மாத திருவிழா ஆகிய நாட்களில் விழா நடைபெறுகிறது.

பொதுவான அம்சம்:

முழு முதல் கடவுள் விநாயகர், முருகன், சக்தி வேல், கருப்பராயர் சன்னதி, கன்னிமார் சன்னதி, வைஷ்ணவி, விஷ்ணு துர்க்கை, தட்சிணாமூர்த்தி ஆகியவை உண்டு.

வேண்டுதல்:

தொழில் வளர்ச்சி சிறப்படையவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், உடல் நலம் சிறப்பாகவும் இத்தலத்தில் உள்ள முத்து மாரியம்மனை வழிபாடு செய்கின்றனர்.

நிவர்த்திக்கடன்:

பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதும், நிவர்த்திக்கடனாக அழகு குத்துதல், கரகம் எடுத்தல், அம்மனுக்கு புடவை சாற்றுதல், பிரசாதம் வழங்குதல், பூவோடு எடுத்தல் ஆகியவற்றை செய்கின்றனர்.

தல பெருமை:

இந்தப் பகுதிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் எல்லாம் மழை பெய்தாலும், போத்தனூர் ரயில்வே பகுதியை ஒட்டியுள்ள கணேசபுரம் பகுதியில் மட்டும் மழை இல்லாததால் மழை வேண்டி முத்து மாரியம்மன் கோயிலை இந்தப் பகுதி மக்கள் அமைத்துள்ளனர்.

தல வரலாறு:

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பு விவசாய பகுதியாக இருந்த போத்தனூர் கணேசபுரம், பகுதியில் பல ஆண்டுகளாக மழை இல்லை. நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கிணற்றில் தண்ணீர் வற்றியது. இது போன்ற பல பிரச்சனைகள் காரணமாக அந்தப் பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேறத் தொடங்கினர். இதையடுத்து, இந்தப் பகுதி மக்கள் இறைவனை வழிபட தொடங்கினர். இதன் காரணமாக ஒரு மேடை அமைத்து சுயம்பு வடிவில் அம்மனை உருவாக்கி வழிபட தொடங்கினர். இந்தப் பகுதி மக்களின் பக்தியில் உள்ளம் மகிழ்ந்த அம்மன், இந்தப் பகுதியில் மழை பொழியச் செய்தாள் என்று பலரும் கூறுகின்றனர்.

இதையடுத்து, மூலவர் சன்னதி அமைத்து அம்மனுக்கு உருவம் கொடுத்து வழிபட்டனர். முழு முதல் கடவுள் விநாயகர், முருகன், சக்தி வேல், கருப்பராயர் சன்னதி, கன்னிமார் சன்னதி, வைஷ்ணவி, விஷ்ணு துர்க்கை, தட்சிணாமூர்த்தி ஆகியோரது சன்னதிகள் அமைத்து முதல் கும்பாபிஷேக விழாவும் நடந்தது. கடந்த 2005 ஆம் ஆண்டு இந்தக் கோயிலில் 2ஆவது கும்பாபிஷேக விழாவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.