மாமியார் மருமகள் பிரச்சனை தீர வழிபட வேண்டிய கோயில் இது தான்!
தூத்துக்குடி மாவட்டம் ராஜபதி என்ற ஊரில் உள்ள கோயில் கைலாசநாதர் திருக்கோயில். இந்தக் கோயிலில் கைலாசநாதர் மூலவராக காட்சி தருகிறார். சவுந்தரநாயகி அம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.
திருவாதிரை, சிவராத்திரி, பிரதோஷம், கிருத்திகை, சஷ்டி, தேய்பிறை அஷ்டமி, கார்த்திகை சோம வாரம் அன்று 108 சங்காபிஷேகம், ஐப்பசி பௌர்ணமி அன்று அன்னாபிஷேகம் என சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன. அம்பாள் சன்னதியில் நவராத்திரி கொலுவும் சிறப்பாக வைக்கப்படுகிறது.
நவகைலாயங்களில் இது கேது தலமாகும். தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் இந்தக் கோயிலில் கண்ணப்ப நாயக்கர் தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார். மிருகசீரிட நட்சத்திர நாளன்று அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. பொதுவாக சிவன் கோயில்களில் நவக்கிரக சன்னதி இருக்கும். ஆனால், இந்தக் கோயிலில் நவலிங்க சன்னதி உள்ளது. காளஹஸ்திக்கு இணையான தலம் என்பதால், இதனை தென் காளஹஸ்தி என்கின்றனர்.
இத்தலத்திலுள்ள கைலாச நாதர் லிங்கத்தின் 4 புறங்களிலும் நான்கு சக்ர வடிவங்கள் உள்ளன. ஈசனின் வாகனமான நந்தி பிரதான சன்னதியின் முன் பிரதோஷ நந்தி என்ற திருநாமத்தில் அருள்பாலிக்கின்றார். இடது புறத்தில் சவுந்தர நாயகி சன்னதி அமைந்துள்ளது.
மேலும், கோயில் பிரகாரத்தில் 63 நாயன்மார்கள், காளஹஸ்தி விநாயகர், ஆதிகைலாசநாதர் காளத்தீஸ்வரர் ஆகியோரை நால்வம் வணங்கும் கோலம், வள்ளி தெய்வானை சமேத முருகன் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கின்றனர். கோயில் நுழைவு முன் மண்டபத்தில் அதிகார நந்தியும் எதிரே பைரவரும் வீற்றிருக்கின்றனர்.
நவக்கிரகத்தில் எந்த கிரக தோஷம் இருக்கிறதோ அந்த கிரக லிங்கத்திற்கு பக்தர்களே தங்களது கைகளால் அபிஷேகம் பூஜை செய்து தோஷ நிவர்த்தி செய்து கொள்ள தமிழகத்தில் உள்ள ஸ்தலம் இது. குறிப்பாக கேது தோஷம் இருப்பவர்கள் இந்தக் கோயிலில் உள்ள கைலாச நாதரை வேண்ட தோஷம் நிவர்த்தி ஆகின்றது. அரசர்கள் ஆண்ட காலத்தில் கேதுவின் அம்சமான இத்தல ஈசனை வணங்கியே போரில் வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.
மரண பயம், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், குடும்ப சண்டை சச்சரவுகள் ஆகியவற்றிற்கு இத்தலத்தில் வேண்டிக் கொள்ள எல்லா பிரச்சனையும் சரியாகிவிடுவதாக கூறப்படுகிறது. பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்கின்றனர்.
இந்தக் கோயிலில் நித்ய அக்னி எனப்படும் விநாயகர், கைலாச நாதர், அம்பாள் ஆகியோருக்காக மூன்று கலசங்கள் வைத்து தினசரி யாகம் நடத்தி பூஜைகளும், ஆராதனைகளும் நடப்பது சிறப்பாகும். பொதுவாக ஈசனுக்கு முன் தீபாராதனை மட்டும் காட்டுவர். ஆனால், இந்தக் கோயிலில் ஈசனைச் சுற்றிலும் பஞ்ச தீபாராதானை காட்டுகின்றனர்.
ஏனென்றால், ஈசனுக்கு, ஈசானம், தத்புருஷம், வாமதேவம், சத்யோஜாதம், அகோரம் என்று 5 முகங்கள் உண்டு என்பதால் பஞ்ச தீபாராதனை காட்டப்படுகிறது. இந்தக் கோயிலில் நெல்லிமரம் தல விருட்சமாகவும், பாலாவி தீர்த்தமாகவும் விளங்குகிறது.
ஒவ்வொரு வாரமும் ஞாயிறு பகல் 12 மணி முதல் 1.30 மணி வரையிலும் செவ்வாயன்று காலை 9 மணி முதல் 10.30 மணி வரையிலும் நடக்கும் பரிகார பூஜைகளில் பங்கு பெறுவதன் மூலம் கிரக தோஷங்கள் நீங்குகின்றன. கால சர்ப்ப தோஷம், திருமணத் தடை, பிதுர் தோஷம் ஆகியவற்றிற்கு சிறந்த பரிகார தலமாக இந்தக் கோயில் விளங்குகிறது. ஈசனுக்கு ஆஷூதோஷ என்ற திருநாமமும் உண்டு. அதன் பொருள், எதை விரும்பி ஈசனிடம் கேட்கிறோமோ, அதனை முழு மனதுடன் ஆனந்தமாக வழங்கி அருள் புரிவார்.
அகத்திய முனிவரின் முதல் சீடர் உரோமச முனிவர். இவர் முக்தி அடைவதற்காக ஈசனை நோக்கி கடும் தவம் புரிந்தார். அவரது தவத்தால் மெச்சிய சிவபெருமான், அவர் முன் தோன்றி குருவருள் பெற்று உய்க என்று உபதேசித்து அருளினார்.
உடனே தனது குருவான அகத்திய முனிவரை அழைத்து சிவபெருமானின் தரிசனம் குறித்து விளக்கினார். அதற்கு செவி சாய்த்த அகத்திய முனிவர், பொருநையாற்றில் (தாமிரபரணி) 9 தாமரை மலர்களை தாம் மிதக்க விடுவதாகவும், அந்த தாமரை மலர்கள் எங்கெல்லாம் பயணித்து ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் நவக்கிரக வரிசையில் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்ட பின்னர் பொருநையாறு கடலோடு கலக்குமிடத்தில் நீராடி ஜீவன் முக்தி பெறுவீர் என்றார்.
மேலும், உம்மால் நிறுவப்படும் இறைவன் கைலாசநாதர் என்றும், இறைவி சிவகாமி என்றும் அழைக்கப்படுவாள் என்றார். முதல் தாமரை மலரானது பாபநாசத்தில் தொடங்கி சேரன்மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, ஸ்ரீவைகுந்தம், தென்திருப்பேரை, இராஜபதி, சேர்ந்த பூ மங்கலம் என 9 தலத்தில் தாமரை மலர்கள் ஒதுங்கி நின்றன.
அகத்திய முனிவரின் ஆணைப்படி அந்த 9 தலங்களில் சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு, குரு, சனி, புதன், கேது, சுக்கிரன் ஆகிய நவக்கிரக வரிசையில் சிவலிங்கங்களை நிறுவி வழிபட்ட பின் பொருநையாறு கடலோடு கலக்குமிடத்தில் நீராடி ஜீவன் முக்தி அடைந்தார். உரோமசர் நிறுவி வழிபட்ட தலங்கள் நவகைலாயம் என்று அழைக்கப்படுகின்றன.
அப்படி மிதக்க விடப்பட்ட 9 தாமரை மலர்களில் 8ஆவது தாமரை மலர் மதுரை சந்திரகுல பாண்டிய மன்னரின் அரண்மனை இருந்த இப்பகுதியில் ஒதுங்கியது. ராஜாவின் அரண்மனை இந்தப் பகுதியில் இருந்ததால் இந்த ஊர் ராஜபதி என்று அழைக்கப்படுகிறது. அங்கே சிவலிங்கத்தை நிறுவி பூஜை செய்தார். அதன் பிறகு அந்த இடத்தில் சந்திரகுல பாண்டிய மன்னன் கோயில் கட்டியதாக கூற்ப்படுகிறது.
சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் இந்தக் கோயில் அழிந்து போயிற்று. நவகையாலத்தில் இது கேது பகவான் வணங்கி வழிபட்ட தலம். அழிந்த கோயிலைப் பற்றிய தாக்கம் அப்பகுதி சிவனடியார்கள் மனதில் உறுத்திக் கொண்டே இருந்துள்ளது. இதையடுத்து சிவனடியார்கள் ஒன்று கூடி கோயில் இருந்த இடத்திலேயே கோயில் கட்ட முடிவு செய்தனர். அதற்காக ஒரு குழுவையும் அமைத்தனர்.
இதையடுத்து அழிந்து போன இந்தக் கோயிலானது கடந்த 2008 ஆம் ஆண்டு திருப்பணி தொடங்கி அழகிய கட்டமைப்பில் கட்டப்பட்டது. இந்தக் கோயிலுக்கு 7 நிலை கொண்ட ராஜகோபுரமும் சிறப்பாக கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.