முக்கோடி ஏகாதசி என்றால் என்ன?

33

முக்கோடி ஏகாதசி என்றால் என்ன?

திருமாலுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது ஏகாதசி விரதம். இதில், ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் வரும் வளர்பிறை வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்தது. மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருந்து வழிபடுவோருக்கு யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம் என்பது திருமாலின் வாக்கு. வைகுண்ட ஏகாதசிக்கு முக்கோடி ஏகாதசி என்ற பெயரும் உண்டு.

அதாவது, இராவணின் கொடுமைகளை தாங்க முடியாத முக்கோடி தேவர்கள் பிரம்ம தேவருடர் இணைந்து வைகுண்டம் சென்று மார்கழி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசியன்று நாராயணனை வணங்கி தங்களது துன்பங்களை கூறியுள்ளனர். இதையடுத்து, அவர்களுக்கு அருள் புரிந்து தேவர்களை காத்தமையால் வைகுண்ட ஏகாதசிக்கு முக்கோடி ஏகாதசி என்ற பெயர் வந்தது.

ஏகாதசி நாளில் பகலில் தூங்குவது, 2 வேளைகள் சாப்பிடுதல், உடலுறவை தவிர்த்து விரதம் மேற்கொண்டு வழிபடுதல் சிறப்பு. ஒரு வருடத்தில் 24 ஏகாதசி வருகின்றன. ஆனால், ஒரு சில வருடங்களில் மட்டும் கூடுதலாக ஒரு ஏகாதசி வருகின்றது. அந்த ஏகாதசி கமலா என்று அழைக்கப்படுகிறது. அன்றைய நாளில் விரதமிருந்து வழிபட்டு வந்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.

ஒரு ஆண்டில் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை என்று எந்த ஏகாதசியாக இருந்தாலும் அந்த நாளில் விரதமிருந்து திருமால் பெருமாளை வழிபட்டு வந்தால் வாழ்வில், செல்வச் செழிப்போடு வாழலாம். வாழ்ந்து முடித்த பிறகு மோட்சத்தையும் அடையலாம் என்பது நம்பிக்கை.

சந்திரனின் இயக்கத்தைக் கொண்டு கணக்கிடப்படும் இந்து கால கணிப்பு முறை. 15 நாட்களுக்கு சுழற்சி முறையில் வரும் ஒரு நாள் தான் ஏகாதசி. பொதுவாக திதி என்றே குறிப்பிடப்படுகின்றன. அதாவது அமாவாசை நாள் மற்றும் பூரண நாள் ஆகியவற்றிற்கு அடுத்து வரும் 11ஆவது நாள் திதி தான் ஏகாதசி. வளர்பிறை காலத்தின் 11ஆவது நாள் மற்றும் தேய்பிறை காலத்தின் 11ஆவது நாள் என்று மாதத்திற்கு இரண்டு முறை ஏகாதசி வரும். அப்படி வரும் போது ஒரு வருட த்திற்கு 24 ஏகாதசிகள் வருகிறது. ஒரு சில வருடங்களில் மட்டும் 25 ஏகாதசிகள் வருகிறது.

24 (25 ஒரு சில வருடம்) வகையான ஏகாதசிகள்:

 1. சித்திரை வளர்பிறை – காமதா – நினைத்த காரியம் நிறைவேறும்.
 2. சித்திரை தேய்பிறை – பாப மோசனிகா – பாபங்கள் அகலும்
 3. வைகாசி வளர்பிறை – மோஹினி – பாவம் நீங்கும்.
 4. வைகாசி தேய்பிறை – வருதினி – ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கும் (சிவன், பிரம்மா தலையை அறுத்த தோஷம் நீங்கிய நாள்)
 5. ஆனி வளர்பிறை – நிர்ஜலா (பீம) – எல்லா ஏகாதசி பலனும் உண்டு (நீர் அருந்தக் கூடாது – பூமியில் நீர் குறைந்து இருக்கும் நாள்)
 6. ஆனி தேய்பிறை – அபார – குரு நிந்தனை, பொய் சாட்சி போன்றவை அகலும்.
 7. ஆடி வளர்பிறை – விஷ்ணு சயன –  தெய்வ சிந்தனை அதிகமாகும் – திரிவிக்கிரமனாய்த் தோன்றி, பின் பாற்கடலில் சயனித்த நாள்.
 8. ஆடி தேய்பிறை – யோகினி – நோய் நீங்கும் (குபேரன் பணியாளன் ஹேமநாதன் விரதம் இருந்து குஷ்ட நோய் நீங்கிய நாள்)
 9. ஆவணி வளர்பிறை – புத்திரதா – புத்திர பாக்கியம் கிடைக்கும்.
 10. ஆவணி தேய்பிறை – காமிகா – விருப்பங்கள் நிறைவேறும்.
 11. புரட்டாசி வளர்பிறை – பரிவர்த்தன – பஞ்சம் நீங்கும்.
 12. புரட்டாசி தேய்பிறை – அஜா – இழந்ததைப் பெறலாம் – அரிச்சந்திரன் விரதம் இருந்த நாள்.
 13. ஐப்பசி – பாபாங்குசா – கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும், பாபங்கள் நீங்கும்.
 14. ஐப்பசி தேய்பிறை – இந்திரா – பித்ருக்கள் நற்கதி பெறுவர்.
 15. கார்த்திகை வளர்பிறை – ப்ரபோதின் – பொதுவாக உயர்ந்த நன்மைகள் உண்டாகும்
 16. கார்த்திகை தேய்பிறை – ரமா – உயர்ந்த பதவி, வைகுண்ட பதவி கிடைக்கும்
 17. மார்கழி வளர்பிறை – வைகுண்ட – மோட்சம் (வைகுண்டம்) கிடைக்கும்
 18. மார்கழி தேய்பிறை – உற்பத்தி – சகல பாக்கியங்களும் கிடைக்கும்.
 19. தை வளர்பிறை – புத்ரதா – புத்ர பாக்கியம் கிடைக்கும் (சுகேதுமான் விரதம் இருந்து பிள்ளைகள் பெற்றான்)
 20. தை தேய்பிறை – ஸபலா – பாப நிவர்த்தி (உலும்பகன் மோட்சம்)
 21. மாசி வளர்பிறை – ஜெய – பேய்க்கும் மோட்சம் உண்டு (மால்யவான் பேயான சாபத்தில் இருந்து விடுதலை)
 22. மாசி தேய்பிறை – ஷட்திலா – அன்ன தானத்திற்கு ஏற்றது
 23. பங்குனி வளர்பிறை – ஆமலதீ – கோதானம் செய்ய ஏற்றது
 24. பங்குனி தேய்பிறை – விஜயா – ராமர் சீதையை மீட்க, பகதாப்யர் எனும் முனிவரின் உபதேசப்படி, விரதம் இருந்த நாள்
 25. கமலா ஏகாதசி – (சில வருடங்களில் மட்டும்) – மகாலட்சுமி அருள் கிடைக்கும்.