முக்தி கிடைக்க மாசிலாமணீஸ்வரர் வழிபாடு!

105

முக்தி கிடைக்க மாசிலாமணீஸ்வரர் வழிபாடு!

சென்னை மாவட்டம், வடதிருமுல்லைவாயில் உள்ளது மாசிலாமணீஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் மூலவராக மாசிலாமணீஸ்வரர் (நிர்மல மணீஸ்வரர்) காட்சி தருகிறார். தாயார் கொடியிடை நாயகி லதாமத்யாம்பாள் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள்.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இந்தக் கோயிலில் உள்ள சுயம்புலிங்கம் தலையில் வெட்டுபட்ட தடத்துடன் காட்சி தருகிறார். வெட்டுபட்ட காயத்தை குளிர்விக்கும் வகையில் ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். வருடம் முழுவதும் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சி தரும் சிவபெருமான் சித்திரை மாதம் வரும் சதய நட்சத்திரத்தில் 2 நாட்கள் மட்டும் சந்தனக்காப்பு இல்லாமல் வெறும் திருமேனியுடன் காட்சி தருகிறார்.

அந்த நேரத்தில் சிவபெருமானை வழிபட பாவங்கள் நீங்கப் பெற்று முக்தி பெறலாம் என்பது நம்பிக்கை. அபிஷேகப் பிரியரான சிவபெருமானுக்கு அபிஷேகம் இல்லாததால் ஒரு பாதரசலிங்கத்தை தனிச்சன்னதியில் வைத்து பூஜிக்கிறார்கள். இந்தக் கோயிலில் உள்ள விநாயகர் வலம்புரி விநாயகர் என்ற திருநாமத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

அமாவாசை, கிருத்திகை, பௌர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்கள் தவிர்த்து, மற்ற நாட்களில் இந்தக் கோயிலில் உள்ள நந்திக்கு மாலை சாற்றி பூஜை செய்து, சாற்றிய மாலையை அணிந்து கொண்டால் திருமணத் தடை, புத்திர தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

தல பெருமை:

இந்தக் கோயிலில் உள்ள நந்தி அசுரர்களை அழிப்பதற்காக மன்னருக்கு துணையாக சென்றதால், இங்கு நந்தி பகவான் சுவாமியை பார்த்தவாறு இல்லாமல் சுவாமிக்கு எதிர்த்திசையை பார்த்தவாறு திரும்பியுள்ளது. இங்கு மாசிலாமணீஸ்வரரே பிரதானம் என்பதால், இந்தக் கோயிலில் நவக்கிரக சன்னதி இல்லை. ஆனால், சூரியனுக்கு மட்டும் இங்கு தனியாக சன்னதி உள்ளது. அம்பாள் கொடி போன்ற அழகிய இடையுடன் இருப்பதால், கொடியிடை நாயகி என்று அழைக்கப்படுகிறாள்.

வெள்ளிக்கிழமை பௌர்ணமி நாளில் அம்பாளை வழிபட பாவ விமோட்சனம் கிடைக்கும். இந்தக் கோயில் வரலாற்றை கேட்டால் முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தல வரலாறு:

பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி வனமாக காட்சி தந்தது. அப்போது இந்தப் பகுதியில் தங்கியிருந்த வாணன் மற்றும் ஓணன் என்ற இரு அசுரர்கள் முனிவர்களை தொடர்ந்து துன்புறுத்தி வந்தனர். அவர்களை விரட்டவே தொண்டைமான் மன்னன் வந்து அசுரர்களுடன் போரிட்டான். ஆனால், மன்னனால் அவர்களை வெல்ல முடியவில்லை. இதையடுத்து திரும்பி தனது நாட்டிற்கு சென்றான். அப்போது பட்டத்து யானையின் கால் ஒரு முல்லைக் கொடியில் சிக்கிக் கொண்டது.

மன்னன் யானை மீது இருந்தபடியே அந்த முல்லைக்கொடிகளை வெட்டினான். ஆனால், வெட்டப்பட்ட இடத்திலிருந்து ரத்தம் வந்தது. இதையடுத்து பயந்து போன மன்னன் யானையிலிருந்து கீழே இறங்கி பார்த்தான். அப்போது மண்ணிற்கு அடியில் சிவலிங்கம் இருந்தது. அந்த லிங்கத்தின் மீது இருந்து இரத்தம் வழிந்ததைக் கண்டான். சிவனின் வடிவமாக திகழும் லிங்கத்தை வெட்டியதால் மன வேதனை அடைந்த மன்னன் தனது உயிரை மாய்க்கச் சென்றான்.

மன்னனின் உயிரை காக்கவே சிவபெருமான் தனியாக காட்சி கொடுத்தார். வெட்டுபட்டதற்காக வருந்த வேண்டாம். வெட்டுபட்டாலும் மாசு இல்லாத தூய மணியாகவே திகழ்வோம் என்று சிவபெருமான் அருள் புரிந்தார். அதன் பிறகு இங்கு வந்த அம்பாள் சிவனுக்கு வலது புறத்தில் எழுந்தருளினாள்.

இறுதியாக சிவபெருமான், மன்னனுடன் நந்தியை அனுப்பி வைத்து அசுர்ர்களை வெல்லும்படி செய்தார். அதன் பிறகு அசுரர்கள் வைத்திருந்த இரு வெள்ளெருக்கம் தூண்களை எடுத்து வந்த மன்னன் இந்த இடத்தில் வைத்து மாசிலாமணீஸ்வர்ருக்கு கோயில் கட்டினான்.