முதியவர்கள் மீண்டும் தங்களது பிள்ளைகளுடன் ஒன்று சேர வழிபட வேண்டிய கோயில்!
திருச்சி மாவட்டம் இடையாற்று மங்கலம் பகுதியில் உள்ளது மாங்கல்யேஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் மாங்கல்யேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தாயார் மங்காம்பிகை பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
மாங்கல்யேஸ்வரர் கிழக்கு நோக்கியும், அம்மன் மங்களாம்பிகை தெற்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர். கோயில் பிரகாரத்தில் விநாயகர், மாங்கல்ய மகரிஷி, தட்சிணாமூர்த்தி, பிட்சாடனர், அர்த்தநாரீஸ்வரர், வள்ளி தெய்வானை சமேத முருகன், சண்டிகேஸ்வரர், துர்க்கை, நந்தி, நவக்கிரக சன்னதிகள் உள்ளன.
உத்திரம் நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணம்:
நண்பர்களிடமும், உறவினர்களிடம் எப்போதும் இனிமையாக பேசி பழகுபவர்கள். பிறர் செய்த உதவிகளை நன்றியோடு எண்ணும் பண்பு கொண்டவர்கள். சுகபோகங்களை அனுபவிப்பதில் விருப்பம் இருக்கும். வாக்கு நாணயம் தவறாத குணம் கொண்டவர்கள். அதிக தெய்வ பக்தி கொண்டிருப்பீர்கள்.
பிரார்த்தனை:
உத்திரம் நட்சத்திக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனான மாங்கல்யேஸ்வரரை வழிபாடு செய்கின்றனர். திருமணத்திற்குரிய முக்கிய பிரார்த்தனை தலமாக இந்தக் கோயில் விளங்குகிறது. உடலில் கால்வலி குணமாகவும், குடும்ப ஒற்றுமைக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது. உத்திரத்தில் பிறந்த பெண்கள், தங்கள் கணவர் நீண்ட ஆயுளுடன் சிறப்பாக வாழ இவரை வணங்கி வரலாம். பிள்ளைகளால் விரட்டப்பட்ட முதியவர்கள் மீண்டும் குடும்பத்துடன் ஒன்று சேரவும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.
தல பெருமை:
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ அல்லது தங்களது பிறந்த நட்சத்திர நாளன்றோ வழிபாடு செய்ய வேண்டிய கோயில் இது. கணவன்மார்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கும், பாதங்களில் புரை நோய் உள்ளவர்களும், பிள்ளைகளால் விரட்டப்பட்ட முதியவர்கள் மீண்டும் குடும்பத்துடன் ஒன்று சேரவும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.
தல வரலாறு:
உத்திரம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் மாங்கல்ய மகரிஷி. இவர், அகத்திய முனிவர், பைரவர் மற்றும் வசிஷ்டர் ஆகியோரது திருமணத்தில் மாங்கல்ய தாரண பூஜை நடத்தியுள்ளார். மாலைகளை தாங்கி வானில் பறக்கும் அட்சதை தேவதைகள் மற்றும் மாங்கல்ய தேவதைகளுக்கும் இவர் குருவாக திகழ்கிறார். திருமண பத்திரிக்கைகளில் மாங்கல்யத்துடன் பறக்கும் தேவதைகளை அச்சிடும் பழக்கம் தற்போதும் நடைமுறையில் உள்ளது.
திருமணத்திற்கான சுப முகூர்த்த நேரத்தை அமிர்த நேரம் என்பர். இந்த நேரத்தில் யாருக்கும் தெரியாமல் சூட்சும வடிவில் இத்தலத்து இறைவனான மாங்கல்யேஸ்வரரை வணங்கி, மாங்கல்ய வரம் தரும் சக்தியை அதிகப்படுத்திக் கொள்வதாக ஐதீகம்.
உத்திர நட்சத்திரத்திற்கு மாங்கல்ய மங்கள வரம் நிறைந்திருக்கிறது. ஆதலால், தான் அனைத்து தெய்வ மூர்த்திகளின் திருமண உற்சவ நிகழ்ச்சியானது பங்குனி உத்திர நட்சத்திர நாளில் நடக்கிறது.
நேர்த்திக்கடன்:
திருமணத்தில் தடை உள்ளவர்கள், இங்கு பிரார்த்தனை செய்தவுடன் விரைவில் திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. திருமணம் நிச்சயம் ஆன பிறகு குலதெய்வ கோயிலுக்கு சென்று வந்த பிறகு மாங்கல்ய மகரிஷியிடம் திருமண பத்திரிக்கையை வைத்து கல்யாணம் சிறப்பாக நடைபெற வேண்டிக் கொள்கின்றனர். திருமணமான பின் தம்பதிகள் ஒன்றாக வந்து மாங்கல்ய மகரிஷியை வழிபட்டு தங்களது நன்றிக்கடன் செலுத்துகின்றனர்.