முருகனின் கார்த்திகை விரதம் இருப்பதால் ஏற்படும் அற்புதங்கள்!

105

முருகனின் கார்த்திகை விரதம் இருப்பதால் ஏற்படும் அற்புதங்கள்!

சிவன் – பார்வதி தம்பதியினரின் 2ஆவது மகன் முருகன். சிவபெருமான் தனது நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட்ட போது அதனை தாங்கிய வாயு பகவான் சரவணப் பொய்கை ஆற்றில் விடவே, அதிலிருந்து வெளிப்பட்ட தீ பிளம்புகள் ஆறு குழந்தைகளாக கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்தனர்.

அன்னை பார்வதி தேவி ஆறு குழந்தைகளையும் ஒன்றாக அனைக்கும் பொழுது ஆறுமுகனாக முருகப் பெருமான் தோன்றினார். தமிழ் கடவுள் என்றும் போற்றப்படுகிறார். இவருக்கு, கந்தன், கதிர்வேலன், கார்த்திகேயன், ஆறுமுகன், குகன், காங்கேயன், சுப்பிரமணியன், மயில்வாகனன், தண்டாயுதபானி, சண்முகன், சுவாமிநாதன், வேலன், சரவணன், வேந்தன் என்று வேறு பெயர்களும் உண்டு. அப்பனுக்கே பாடம் சொல்லிய மகன் என்ற பெருமையும் முருகப் பெருமானுக்கு உண்டு. அப்படிப்பட்ட முருகப் பெருமானுக்கு உகந்த விரதங்கள் என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் நாம் காண்போம்.

வார விரதம்:

வார விரதம் என்பது செவ்வாய் கிழமைகளில் கடைபிடிப்பது.

நட்சத்திர விரதம்:

நட்சத்திர விரதம் என்பது கார்த்திகை நட்சத்திரத்தில் கடைபிடிப்பது.

திதி விரதம்:

திதி விரதம் என்பது சஷ்டி திதியில் கடைபிடிப்பது.

கார்த்திகை நட்சத்திர விரதம்:

கார்த்திகை நட்சத்திரத்தன்று அனுஷ்டிக்கப்படுவது நட்சத்திர விரதம். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளில் இருந்து தோன்றிய முருகப் பெருமானை சரவணப் பொய்கையில் இருந்து எடுத்து வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்குச் சிறப்பு சேர்க்கும் விதமாக, சிவபெருமான் அவர்களுக்கு ஒரு வரம் அளித்தார். அந்த வரத்தின் படி கார்த்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுபவர்கள், நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் ஆகிய பேறுகளைப் பெற்று சிறப்புற வாழலாம்.

கார்த்திகை விரதம் இருக்கும் முறை:

கார்த்திகை நட்சத்திரத்திற்கு முதல் நாளன்று வரும் பரணி நட்சத்திர நாளன்று இரவில் சாப்பிடாமல் இருந்து, மறுநாள் அதிகாலையிலேயே நீராடி அருகிலுள்ள முருகப் பெருமான் கோயிலுக்கு சென்று முருகனை வழிபட வேண்டும். அன்று முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருந்து முருகப் பெருமானின் ஸ்தோத்திர நூல்களைப் பாராயணம் செய்யவேண்டும்.

தொடர்ந்து அன்று மாலையில் வீட்டிலுள்ள முருகப் பெருமான் திருவுருவப் பட த்தை அலங்கரித்து, தூப தீபம் காட்டி, அரிசி, துவரம் பருப்பு மற்றும் சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து செய்த பொங்கலை நைவேத்தியமாக சாமிக்கு படைத்து அதன் பிறகு அதனையே பிரசாதமாக உண்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

தேவ ரிஷிகளில் முதன்மையானவரான நாரத மகரிஷி, விநாயகப் பெருமானின் உபதேசப்படி கார்த்திகை விரதத்தை அனுஷ்டித்தே முதன்மை சிறப்புப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.