முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமை வழிபாடு!

56

முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமை வழிபாடு!

செவ்வாய் கிழமை என்றாலே அது முருகனுக்கு உரிய நாள். ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் விரதமிருந்து முருகனை வழிபட்டு வர குடும்ப அமைதி, மன நிம்மதி அனைத்தும் தேடி வரும். முருகனுக்கு விரதம் இருக்க நினைப்பவர்கள் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் இருக்கலாம். அப்படி இருப்பதன் மூலமாக என்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

முருகா, முருகா என்றாலே அனைத்து துன்பங்களும் பறந்துவிடும். அப்படிப்பட்ட முருகனை நினைத்து ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் விரதம் இருந்தால் வருமானம் இரட்டிப்பாகும். குடும்பத்தில் குதூகலம் பிறக்கும். வாழ்க்கையில் ஒருவரது செல்வ நிலைக்கு முக்கியமாக காரணமாக இருப்பவர் அங்காரகன் என்ற செவ்வாய் பகவான். அந்த செவ்வாய் பகவானுக்குரியவர் தான் தமிழ் கடவுளான முருகப் பெருமான் மற்றும் சக்தி தேவி.

அதனால், செவ்வாய் கிழமையை மங்களகரமான நாள் என்றும் முருகனுக்கு உகந்த நாள் என்றும் சக்தி தேவியையும் வழிபட்டு வருகின்றனர்.

எப்படி விரதம் இருப்பது?

முருகனுக்கு பிடித்த நிறம் என்னவென்றால் அது செந்நிறம் தான். இந்த நிறத்திலான ஆடையை அணிந்து முருகனுக்கு வழிபடவும், செந்நிறத்தில் நைவேத்தியம், கனிகள் வைத்து வழிபட்டு வருவதல், தடைகள் நீங்கி வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள். மேலும், பேரும், புகழும் பெறுவீர்கள்.

முருகனின் வேல் வழிபாடு:

முருகனின் வேலை வணங்குவதே என் வேலை என்று வீட்டில் வேல் வைத்து வழிபடுவது சிறப்பு. வீட்டு பூஜையறையில் வேல் வைத்து அதனுடைய இரு பக்கங்களிலும் விளக்கேற்றி வழிபட்டு வருவதால் வாழ்வில் சீரும், சிறப்புகளும் வந்து சேரும்.

வள்ளி, தெய்வானை:

வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் முருகனின் படத்தை வீட்டில் வைத்து வணங்குவது நன்மை பயக்கும். விரதத்தை தொடங்குவதற்கு முன்னதாக விநாயகரை வழிபட்டு அதன் பின் விரதத்தை தொடங்க வேண்டும்.

அன்னதான பிரபு:

அன்னதான பிரபு என்பதால், இந்த விரதம் கடைபிடிக்கும் போது உங்களால் முடிந்த அளவிற்கு அன்னதானம் செய்வது சிறப்பான பலனைக் கொடுக்கும்.

எந்த நட்சத்திரம் விசேஷமானது?

முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம் கார்த்திகை மற்றும் விசாக நட்சத்திரம். இந்த நட்சத்திர நாளில் நாம் விரதமிருந்து முருகப் பெருமானை வழிபட்டால் அந்த விரதத்திற்கு கூடுதலான பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

கார்த்திகை மற்றும் விசாக நட்சத்திரம் எப்படி முருகனுக்கு சிறப்பு வாய்ந்ததோ அதே போன்று தான் சஷ்டி திதியும் முருகனுக்கு சிறப்பு வாய்ந்தது. சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பையில் முருகனைப் போன்று அழகான குழந்தை வரும் என்பது நமது முன்னோர்களின் வாக்கு. விரதம் இருக்கும் போது கந்த சஷ்டி உள்பட முருகனுக்கு பிடித்தமான பாடல்களைப் பாடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.