முருகனுக்கு சுருட்டு படையல் ஏன் தெரியுமா?

56

முருகனுக்கு சுருட்டு படையல் ஏன் தெரியுமா?

திருச்சியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலும், புதுக்கோட்டைக்கு வடமேற்காக சுமார் 40 கிலோமீட்டரிலும் விராலிமலை அமைந்துள்ளது. இந்த கோவில் வசிஷ்ட முனிவர் சாப விமோசனம் பெற்ற திருத்தலம். முனிவர்களும், தேவர்களும் இறைவனை வழிபட்டு வந்த மலை இது. ஆகவே விரவி மலை என்று அழைக்கப்பட்டு பின்னர் அது மருவி விராலிமலை என்று பெயர் பெற்றது. இந்த ஆலயத்திற்கு செல்வதற்கு 207 படிகள் பாறையிலே செதுக்கி உள்ளனர்.

சுருட்டு நைய்வேத்தியம் ஏன் தெரியுமா?

எந்த ஒரு முருகன் கோயிலிலும் அல்லாத ஒரு விசித்திர வழக்கம், சுருட்டை நிவேதனமாகப் படைக்கும் வழக்கம் ஒன்று இக்கோயிலில் உண்டு. இதற்குப் பின்னால் ஒரு கதையும் உண்டு. சூறாவளிக் காற்றிலும், வெள்ளத்திலும் துன்புற்று வீடு செல்ல இயலாது கருப்பமுத்து என்னும் அடியவர் நிற்கையில், அருகையில் மற்றொருவர் குளிரில் நடுங்கி நிற்பதைக் கண்டு, குளிருக்கு இதமாக இருக்கட்டும் என்று சுருட்டு ஒன்றைக் கொடுத்தாராம்.

பின்னர் இருவருமாக ஆற்றைக் கடந்து செல்கையில் அவர் காணாமற் போய்விட்டது கண்டு வியப்புற்ற கருப்பமுத்து, கோயிலை அடைந்ததும் அங்கு முருகனாருக்கு முன்னர் சுருட்டு இருப்பதைக் கண்டு, தம்மிடம் சுருட்டு பெற்றவர் எம்பிரானே என உணர்ந்தார் எனவும், அன்று முதல் சுருட்டு படைக்கும் பழக்கம் உருவானதாகவும் கூறுவர்.

ஒரு முறை, இதற்கு புதுக்கோட்டையை மன்னர் தடையிடவும், பெம்மான் அவர் கனவில் தோன்றி சுருட்டு நிவேதனம் பிறர் துன்பம் கண்டு அன்பை வளர்க்கும் குறியீடுதான் எனவும், புகைப் பழக்கத்தை ஊக்குவிப்பது அல்ல எனவும் கூறியதாகவும், மன்னர் தமது தடையை நீக்கிக் கொண்டதாகவும் கூறுவர்.

ஆலயச்சிறப்பு:

இந்தக் கோவிலில் ஆறுமுகப் பெருமான், மயில் மீது வீற்றிருக்கிறார். இது தெற்கு பார்த்த மயில் என்பதால் இதற்கு “அசுர மயில்” என்று பெயர். இங்கு தட்சணாமூர்த்தியின் சிலை அருகே ஜனகர், ஜனந்தர், ஜனாதனர், ஜனத்குமாரர் ஆகிய நான்கு முனிவர்களின் சிலையை அருகே காணலாம். இந்த முனிவர்களுக்கு குருபகவான் உபதேசம் செய்வதாக கூறப்படுகிறது. விராலிமலை முருகன் கோவில் அமைந்துள்ள இடத்தில், ஒரு காலத்தில் “குரா” என்ற மரம் இருந்தது.

ஒரு வேடன் ஒரு புலியை விரட்டி வந்த போது, குரா மரம் இருந்த இடத்தில் புலி காணாமல் போக, அந்த இடத்தில் தெய்வ சக்தி இருப்பதாக வேடன் கருதினான். அதன் பிறகு அங்கேயே இருந்து முருகனை வழிபடத் துவங்கினான். அங்கு வந்த முருகன் அவருக்கு அருள் பாலித்தார். சண்முகநாதன் என்ற பெயரில் அங்கேயே தங்கினார். திருப்புகழில் 18 இடங்களில், விராலிமலை பற்றி அருணகிரிநாதர் பாடியிருக்கிறார்.

மலைக்கு செல்லும் வழியில் “சந்தன கோட்டம்” என்னும் மண்டபத்தில் ஆறுமுகப் பெருமான் காட்சியளிக்கிறார். மேலும் இடும்பன் சன்னதி, பாறையில் குடைந்து அமைக்கப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதியும் அமைந்துள்ளன.

நீண்ட ஆயுளை பெற:

நோய் மற்றும் துன்பங்கள் நீங்க, கல்வி, செல்வம், மற்றும் ஆயுள் நீடிக்கவும் இங்குள்ள முருகனாரை வேண்டிச் செல்வர்.

தவிட்டுக்கு பிள்ளை:

பிள்ளைச் செல்வம் வேண்டுவோருக்கு நேர்த்திக் கடன் கழிக்கும் பழக்கம் இங்கு உள்ளது. பிள்ளை பிறந்ததும், அதை ஆறுமுகனாரிடமே அவரது பிள்ளையாகக் கொடுத்து விட்டுப் பிறகு பிள்ளையின் மாமன் அல்லது சிற்றப்பன்மார்கள் ஆறுமுகனாருக்குத் தவிட்டைக் கொடுத்துப் பிள்ளையை பெற்றுச் செல்லும் சடங்கு இங்கு பிரபலமானது.