முருகனுக்கு 6 என்றால், விநாயகருக்கு 10: அதென்ன 10?

116

முருகனுக்கு 6 என்றால், விநாயகருக்கு 10: அதென்ன 10?

முருகப் பெருமானுக்கும் இருக்கும் ஆறுபடைகளைப் போன்று விநாயகருக்கும் இந்தியா முழுவதும் 10 படைகள் இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 7 படைகள் இருக்கிறது. அதுவும், திருவண்ணாமலை, விருத்தாச்சலம், திருக்கடவூர், மதுரை, பிள்ளையார்பட்டி, திருநாரையூர், திருவலஞ்சுவலி (தஞ்சாவூர் மாவட்டம்) ஆகியவை ஆகும்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள விநாயகரின் பெயர் அல்லல் போம் விநாயகர். இவரை வழிபட்டால் அல்லல்கள் (துன்பங்கள்) அனைத்தும் தீரும். இந்த விநாயகரைக் குறித்து போற்றப்படும் பாடலே அல்லல் போம் வல்வினை போம், அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம் ஆகும்.

விருத்தாசலம்:

இந்த 2ஆவது படை வீட்ட்டில் எழுந்தருளியுள்ள விநாயகர் ஆழத்துப் பிள்ளையார் என்று பெயர். பெயருக்கு ஏற்ப ஆழத்தில் அமைந்திருக்கிறார். இவரை வழிபட்டால், செல்வமும், கல்வியும் மற்றும் சீரான வாழ்வும் நம்மை வந்து சேரும் என்பது ஐதீகம்.

திருக்கடவூர்:

திருக்கடவூர் படை வீட்டில் அமைந்திருக்கும் விநாயகர் கள்ள வாரணப் பிள்ளையார். வாழ்வில், நோய், நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு கள்ள வாரணப் பிள்ளையாரை வழிபட வேண்டும்.

மதுரை:

சித்தி விநாயகர் என்று போற்றப்படுகிறார். இவர், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் எழுந்தருளியுள்ளார். மீனாட்சி அம்மன் சன்னதிக்குள் நுழையும் முன்னர் இவரின் தரிசனத்தைப் பெறலாம். எண்ணிய காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிய சித்தி விநாயகரை வழிபட வேண்டும்.  பாண்டிய நாட்டு மன்னருக்காக மாணிக்கவாசகர் குதிரை வாங்கப் சென்ற போது இந்த சித்தி விநாயகரை தரிசித்துச் சென்றதாக புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிள்ளையார்பட்டி:

இங்குள்ள விநாயகர் கற்பக விநாயகர். யார், ஒருவர் பிள்ளையார்பட்டி வந்து கற்பக விநாயகரை மனமுருகி வழிபடுகிறாரோ அவருக்கு தீட்சையும், ஞானமும் கிடைக்கப் பெறும் என்பது ஐதீகம். ஏனென்றால், சிவலிங்கத்தை தனது கையில் தாங்கிக் கொண்டிருக்கிறார். சிவலிங்கத்தை கையில் ஏந்தி சிவபூஜை செய்பவராக திகழ்கிறார்.

திருநாரையூர்:

இவர் பொள்ளாப் பிள்ளையார். புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது இந்தப் பிள்ளையாரை தரிசனம் செய்துவிட்டு சென்றால் முயற்சிகளுக்கு கை மேல் பலன் கிடைக்கும்.

திருவலஞ்சுலி:

பாற்கடலில் உள்ள அமுதமயமான கடல் நுரையினால், உருவானதால் சுவேத விநாயகர் (வெள்ளை விநாயகர்) என்று பெயர் பெற்றார். மேலும், வெள்ளை நிறத்திலேயே பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இவரை வழிபாடு செய்தால், திருமணத் தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இதையும் படிங்க: சுவேத விநாயகர் திருமணம் நடந்த கோயில்!