முளைப்பாரி போடுவதால் ஏற்படும் நன்மைகள்!
கிராமப்புறங்களில் மாரியம்மன், காளியம்மன் கோயில்களில் திருவிழா கொண்டாடப்படும். ஒவ்வொரு கிராமங்களிலும் வெவ்வேறு விதமாக காளியம்மன், மாரியம்மன் கோயில்களில் வழிபாடு செய்யப்படும், சித்திரை, வைகாசி, பங்குனி மாதங்களில் இந்த வழிபாடு செய்யப்படும். அப்போது இயற்கை சீற்றங்களிலிருந்து கிராமங்களை பாதுகாத்து இயற்கை வளங்களை பெருக்க பெண்களால் செய்யப்படுவது தான் முளைப்பாரி வழிபாடு.
கிராமங்களில் பொங்கல் நடைபெறுவதற்கு ஒருவாரத்திற்கு முன்னதாக கொடியேற்றம் அல்லது பொங்கல் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். அன்று திருமணமான பெண்கள் ஒரு புதிய பானை அல்லது மண் பாத்திரத்தில் சுத்தமான் மண் நிரப்பி, அதில், சிறு பயிறு, சோளம், கம்பு, பருத்தி, பாசிப்பயிறு, மொச்சைப்பயிறு, தட்டைப் பயிறு விதைகளை தூவி வெயில் படாதபடி, தினந்தோறும் தண்ணீர் ஊற்றி ஒரு வாரம் வரையில் ஒரு வீட்டில் வளர்த்து வருவார்கள். அப்படி வளர்க்கும் அந்த வீட்டின் முன்பு தினந்தோறும் கும்மியடிப் பாடல்கள் பாடுவார்கள். இதனால், பயிர்கள் நன்கு வளரும். இதற்கு முளைப்பாரி என்று பெயர். முளைப்பாரியில், நெல் முளைப்பாரி, காவடி முளைப்பாரி, தட்டு முளைப்பாரி என்று பல வகைகள் உண்டு.
கோயிலில் திருவிழா கொடியேற்றம் நடக்கும் முதல் கொடி இறக்கம் வரை கிட்டத்தட்ட 10 நாட்கள் வரை முளைப்பாரி வளர்த்து திருவிழா முடியும் நாளில் முளைப்பாரி வளர்ந்துள்ள அந்த பானையை ஊர்வலமாக எடுத்து சென்று, கோயில் முன்பாக வைத்து கிராமத்தின் நலனுக்காகவும், மக்களை காத்தருள வேண்டியும், செல்வ செழிப்போடு வாழ வேண்டியும் கும்மிப் பாடல் பாடுவார்கள். அதன் பிறகு நீர் நிலைகளிலோ அல்லது குளக்கரையிலோ முளைப்பாரியை கரைத்துவிடுவார்கள்.
முளைப்பாரி பாடல்:
“பூக்காத மரம் பூக்காதோ – நல்ல
பூவுல வண்டு விழாதோ
பூக்க வைக்கும் காளியம்மனுக்கு
பூவால சப்பரம் சோடனையாம்
காய்க்காத மரம் காய்க்காதோ
காயில வண்டு விழாதோ
காய் காய்க்க வைக்கும் காளியம்மனுக்கு
காயால சப்பரம் சோடனையாம்”
முளைப்பாரி நன்கு வளர்வது போன்று அந்த ஆண்டு மழை பொழிந்து விவசாயம் செழித்து வளரும் என்பது நம்பிக்கை.
முளைப்பாரி முடிவு:
“வாயக் கட்டி வயித்தக்கட்டி
வளர்த்தேன்ம்மா முளைய – இப்ப
வைகாசி தண்ணியில
போரேயம்மா முளைய”
என்று பாடிக் கொண்டு முளைப்பாரியை போடுகின்றனர். பயிர் வகைகள் ஒரு பருவத்தில் அழிந்து மறுபருவத்தில் துளிர் விடுவதின் குறியீடாக முளைப்பாரியை நீர் நிலைகளில் போடுகின்றனர்.
முளைப்பாரி போட்டு அம்மனை வழிபாடு செய்வதால், திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.