யாரெல்லாம் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடலாம்?

174

யாரெல்லாம் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடலாம்?

விஷ்ணுவின் 9ஆவது அவதாரம் ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரம். ஆண்டுதோறும் ஆவணி மாதம் வரும் அஷ்டமி திதி ரோகிணி நட்சத்திர நாள் கிருஷ்ண ஜெயந்தியாக (கோகுலாஷ்டமி) கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் (கிருஷ்ண ஜெயந்தி) அவதரித்த நாளில் அதான் கோகுலாஷ்டமி நாளில் உறியடி விழா சிறப்பாக கொண்டாப்படுகிறது. எந்த நேரத்தில் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடுவது? எப்படி வழிபடுவது? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்…

கோகுலாஷ்டமி கொண்டாட வேண்டிய நேரம்:

காலண்டரின்படி, ஆகஸ்ட் 29 ஆம் தேதி இரவு 11.57 மணி முதல் அஷ்டமி திதி தொடங்கி ஆகஸ்ட் 30 ஆம் தேதி அதாவது கிருஷ்ணர் ஜெயந்தியான இன்று நள்ளிரவு 1.57 வரையில் அஷ்டமி திதி நீடிக்கிறது. ஆகையால், ஆகஸ்ட் 30 ஆம் தேதியான இன்று நல்ல நேரம், கௌரி நல்ல நேரத்தில் பூஜையை தொடங்கலாம். அந்த வகையில், இன்று இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரையில் தான் கௌரி நல்ல நேரம். அந்த நேரத்தில் கிருஷ்ணரை வழிபாடு செய்யலாம்.

கோகுலாஷ்டமி யாரெல்லாம் கொண்டாடலாம்?

தர்மத்தை நிலைநாட்டவும், அதர்மத்தை அழிக்கவும் விஷ்ணு பகவான் எடுத்த 10 அவதாரங்களில் முக்கியமானவை ராம அவதாரம் மற்றும் கிருஷ்ண அவதாரம். இந்த இரண்டுமே தர்மத்தை நிலைநாட்டவே நிகழ்ந்துள்ளதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. எப்போதும் நேர்வழியில் நடப்பவர்கள், எல்லா செல்வங்களும் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள், மழலைச் செல்வம் வேண்டும் என்று எண்ணுவர்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

கோகுலாஷ்டமி விரதம் இருப்பது எப்படி?

கிருஷணர் பிறந்த நாளான இன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து காலை முதல் மாலை வரை உணவு ஏதும் எடுத்துக் கொள்ளாமல் விரதம் இருக்க வேண்டும். அப்படி விரதம் இருக்க முடியாதவர்கள், பால், பழம், ஜூஸ் இந்த மாதிரி எடுத்துக் கொள்ளலாம். அதாவது, அரிசியைத் தவிர்த்து மற்ற உணவுகளை எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம்.

கோகுலாஷ்டமியில் நைவேத்தியம் படைப்பது எப்படி?

கண்ணன் பிறந்தநாளான இன்று அவருக்கு பிடித்தமான அப்பம், தட்டை, பால் திரட்டு, வெண்ணெய், நாட்டு சர்க்கரை, அவல், லட்டு, முறுக்கு, சீடை, விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபடுவது சிறப்பு. எதுவுமே செய்ய முடியாதவர்கள், அவல் மற்றும் வெண்ணெய் ஆகிய இரண்டை மட்டுமே வைத்து வழிபட்டால் கிருஷ்ணரின் பரிபூரண அருள் கிடைக்கும்.

கோகுலாஷ்டமி வழிபடும் முறை:

கிருஷ்ணர் பிறந்த நாளான இன்று இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரையில் உள்ள கௌரி நல்ல நேரத்தில் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு கிருஷ்ணரின் படம் அல்லது விக்கிரகம் ஆகியவற்றைக் கொண்டு வழிபட வேண்டும். மேலும், கிருஷ்ணருக்கு முன்பாக ஒரு வாழை இலையில் பச்சரிசியை பரப்பி வைத்து அதன் மீது தண்ணீர் நிரம்பிய செம்பு கலசம் வைக்க வேண்டும். கலசத்தின் மீது மாவிளை வைத்து அதன் மீது தேங்காயை கலசம் போல் வைக்க வேண்டும். கலசத்திற்கு அருகில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து அதற்கு குங்குமம் வைக்க வேண்டும். கிருஷ்ணருக்கு பிடித்தமான நைவேத்தியங்களை இலையில் படைத்து வழிபாடு செய்யலாம்.

கிருஷ்ணரின் பாதம்:

கிருஷ்ணரின் பாதச்சுவடுகளை உங்களது வலது கை உள்ளங்கையை மடித்து பக்கவாட்டு பகுதியை நாமத்தில் நனைத்து கீழே வைத்து பதித்தால் அழகான விரல்களை பாதச்சுவடுகளாக பெறலாம். எப்பொழுதும் வீட்டின் வாசல் படியிலிருந்து பூஜையறை வரையில் கிருஷ்ணரின் பாதச்சுவடுகள் செல்ல வேண்டும். இந்த பாதசுவடுகள் வழியாக கிருஷ்ண பகவானே நமது வீடுகளுக்கு வருவார் என்பது நம்பிக்கை.

பூஜையை எப்படி நிறைவு செய்வது?

கலசத்தை ஒரு ஓரமாக நகர்த்தி வைத்து எல்லாவற்றையும் கலைத்துக் கொள்ளலாம். கிருஷ்ணருக்காக படைக்கப்பட்ட நைவேத்திய பலகாரங்களை ஏழை, எளியவர்களுக்கு கொடுத்துவிடலாம். நீங்களும் பிரசாதமாக பகிரலாம். நோட்டு, புத்தகங்களை ஏழை குழந்தைகளுக்கு தானமாக கொடுக்கலாம். பூஜையை முடித்த பிறகு குழந்தைகளுக்கு கிருஷ்ணர் பிறந்த கதை, கிருஷ்ணனின் லீலைகள் ஆகியவற்றை சொல்லித் தர வேண்டும். அதன் மூலமாக குழந்தைகளுக்கு நல்ல எண்ணங்களே அதிகரிக்கும். இறைவன் மீது நம்பிக்கை மேம்படும்.

ஜென்மாஷ்டமி:

கிருஷ்ணர் பிறக்கும் போது தாய் தேவகி தந்தை வாசுதேவர் ஆகியோருடன் சந்திரன் மட்டுமே இருந்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. எனவே ஜென்மாஷ்டமி (ஜன்மாஷ்டமி) நாளில் சந்திர தரிசனம் செய்வது அனைத்து நன்மைகளையும் பெற்றுத் தரும். எப்போதும் நமது உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும்.