ரிஷப விரதம் மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்!

172

ரிஷப விரதம் மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்!

மும்மூர்த்திகளில் ஒருவர் சிவபெருமான். சைவ சமயத்தின் முழு முதல் கடவுள். பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருள் என்பதால், பரமசிவன் என்று அழைக்கப்படுகிறார். சிவன் என்பதற்கு சிவந்தவன் என்றும், வடமொழியில் சிவம் என்பதற்கு முழுமையானது, மங்களகரமானது என்று பொருள் உண்டு.

சைவர்கள் சிவபெருமானுக்கு 8 வகையான விரதங்களை இருந்து வழிபாடு செய்கின்றார்கள். மேலும், இந்த 8 வகையான விரதங்களை வழிபடுவதன் மூலமாக சிவனின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது சைவர்களின் நம்பிக்கை.

சிவனுக்குரிய 9 விரதங்கள்:

  1. பிரதோஷ விரதம்
  2. சோமவார விரதம்
  3. உமா மகேஸ்வர விரதம்
  4. திருவாதிரை விரதம்
  5. மகாசிவராத்திரி விரதம்
  6. கல்யாண விரதம் (கல்யாண சுந்தரர், கல்யாண சுந்தர விரதம்)
  7. பாசுபத விரதம்
  8. அஷ்டமி விரதம்
  9. கேதாரகௌரி விரதம்

இந்த 9 முக்கியமான விரதங்களை ஒவ்வொன்றாக பார்த்து வருகிறோம். தற்போது சிவனுக்குரிய முக்கிய விரதமான ரிஷபம் விரதம் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

ரிஷப விரதம்:

சிவனின் வாகனமாக இருப்பவரும், அவரது தொண்டரும் ரிஷபமாகிய நந்திதேவரும் சிவபெருமான் ரிஷபாரூடர் என்ற பெயரில் அழைக்கப்படும் சிவனுக்கு இருக்கும் விரதம் தான் ரிஷப விரதம் எனப்படும். சூரியன் ரிஷப ராசியில் இருக்கும் வைகாசி மாதம் தான் இந்த விரதம் அனுஷ்டிப்பதற்கு சரியான மாதமாகும்.

வைகாசி மாத த்தில் வரும் மாத சிவராத்திரி மற்றும் பிரதோஷம் ஆகிய நாட்களில் இந்த விரதத்தை மேற்கொள்வது சிறந்தது. இந்த விரதம் மேற்கொள்ளும் போது அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து நந்தி பகவான் மீது ரிஷபாரூடராக வீற்றிருக்கும் சிவபெருமானை நினைத்து மனமுருக வேண்ட வேண்டும்.

எதுவும் சாப்பிடாமல் வெள்ளியால் செய்யப்பட்ட சிறிய அளவு ரிஷபாரூடர் விக்ரகம் இருந்தால் பூஜையறையில் வைத்து சிவனுக்கு பிடித்த அரிசியால் செய்யப்பட்ட அன்னம் மற்றும் பாயாசத்தை நைவேத்தியமாக படைத்து சிவனின் மந்திரங்களை சொல்லி வழிபட வேண்டும். அப்படி ரிஷப விரதம் இருக்கும் போது உண்ணாவிரதம் இருக்க முடியாதவர்கள் பால், பழங்கள் சாப்பிடலாம்.

ரிஷப விரதம் மேற்கொள்ளும் அன்று காலை அல்லது மாலையில் சிவன் கோயிலுக்கு சென்று பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்து வழிபட்டால் சிறந்த நன்மைகள் உண்டாகும். அதன் பிறகு அன்னதானம் செய்து பக்தர்களுக்கு கொடுத்து விட்டு நீங்களும் அந்த பிரசாதங்களை சாப்பிட வேண்டும். இரவு பால் மற்றும் பழங்கள் சாப்பிட்டு ரிஷப விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

ரிஷப விரதம் பலன்கள்:

இந்த விரதம் மேற்கொள்பவர்களுக்கு ஆயுள் அதிகரிக்கும். தீராத நோய்கள் தீரும். அதோடு, நோய்களும் அண்டவே அண்டாது. செல்வ நிலை உயரும். அனைத்து விதமான ஆசைகளும் பூர்த்தியாகும். கருட பகவான், அஷ்டதிக் பாலகர்கள் ஆகியோர் இந்த விர த த்தை மேற்கொண்டு சிவனிடம் வரங்களை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓம் நம சிவாய

தென்னாடுடைய சிவனே போற்றி…

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…