ருபியா நோட்டில் பிள்ளையார்!

117

ருபியா நோட்டில் பிள்ளையார்!

இந்து கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள் பிள்ளையார் அல்லது விநாயகர். தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் குறிப்பாக மும்பை, நேபாளத்தில் விநாயகர் வழிபாடு முக்கியமானதாக கருதப்படுகிறது. கணபதி, ஆனைமுகன், கஜமுகன், விக்னேஸ்வரன் என்று பல பெயர்களால் அறியப்படுகிறார்.

விநாயகரை முழு முதல் கடவுளாக வழிபடும் சமயம் காணாதிபத்தியம் எனப்படும். வைணவர்கண் விநாயகப் பெருமானை தும்பிக்கை ஆழ்வார் என்று அழைக்கின்றனர். கணங்களின் அதிபதி என்பதால், கணபதி என்றும், யானையின் முகத்தினை கொண்டுள்ளதால் யானைமுகன் என்றும் அழைக்கப்படுகிறார்.

மேலும் படிக்க: விநாயகர் பிறந்த கதை!

காணாதிபத்தியம்:

காணாதிபத்தியம் என்ற பிரிவு விநாயகரை மையப்படுத்திய சமயம். இந்துக்களின் புராணங்களில், சிவன் மற்றும் பார்வதி ஆகியோரின் பிள்ளையாகவும், முருகப் பெருமானின் அண்ணனாகவும் விநாயகர் அறியப்படுகிறார். மேலும், விநாயகரின் வாகனமாக மூஞ்சூறு விளங்குகிறது.

கிருத, திரேதா, துவாபர, கலி ஆகிய 4 யுகங்களிலும், 4 அவதாரங்களாக அவதரிப்பதாக கணேச புராணம் கூறுகின்றது.

விநாயகர் பிறப்பு:

விநாயகரின் பிறப்பு பற்றி பல்வேறு கதைகள் இருக்கிறது. ஆனால், சிவமகா புராணத்தில் உள்ள கதை தான் பரவலாக அறியப்படுகிறது. பழங்காலத்தில் யானை முகம் கொண்ட கஜாசுரன் என்ற அசுரன் சிவபெருமானை நோக்கி பல வருடங்களாக தவம் புரிந்தான். கஜாசுரனின் தவத்தைக் கண்டு மனம் மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு காட்சியளித்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு கஜாசுரன் சிவபெருமான் தனது வயிற்றில் லிங்க வடிவமாக தங்கியிருக்க வேண்டும் என்று கேட்டுப் பெற்றார்.

இதனால், அதிர்ச்சியடைந்த பார்வதி தேவி, விஷ்ணுவிடம் உதவி கோரினார். அதன் பின்னர் விஷ்ணு பகவான் மற்றும் நந்தி ஆகியோர் தெருக்கூத்து நடத்துபவர்கள் போன்று உருவம் கொண்டு கஜாசுரனின் அரண்மனைக்கு சென்றனர். அப்போது, நந்தி பகவான் நடனம் ஆடினார். இவரது நடனத்தில் மெய் மறந்த கஜாசுரன் வேண்டும் வரம் அளிப்பதாக கூறினான்.

இதற்கு நந்தி பகவானோ சிவபெருமானை விடுவிக்க வேண்டும் என்று கேட்கிறார். உடனே கஜாசுரன் சிவபெருமானை விடுவித்தான். மேலும், இந்த பிரபஞ்சத்தில் தனது நினைவு என்றும் அழியாமல் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு சிவபெருமான், கஜாசுரனின் யானைத் தலையை கொய்த்து, பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியிலிருந்து விடுவிக்கிறார். அதோடு, யானைத் தோலை உடுத்திக் கொண்டு கஜசம்ஹார மூர்த்தியாக காட்சியளித்தார்.

அதன் பின்னர், நந்தி மீது அமர்ந்து கொண்டு கயிலாயம் புறப்பட்டார். சிவபெருமான் வருவதை அறிந்த பார்வதி தேவி, அவரை வரவேற்க தயாரானார். இதற்காக, நந்தி இல்லாததால், அங்கு பாதுகாப்பிற்கு யாரும் இல்லை. பார்வதி தேவி குளிப்பதற்கு முன்னதாக, மஞ்சள் விழுது மூலமாக ஒரு சிறுவனை செய்து அதற்கு உயிர் கொடுத்தார்.

அவனுக்கு விநாயகர் என்று பெயர் சூட்டினார். மேலும், தான் தயாராகி வரும் வரையில் யாரையும் உள்ளே அனுமதிக்க கூடாது என்றும் விநாயகரிடம் அறிவுறுத்தினார். விநாயகரும் அவ்வாறு செய்வதாக கூறினான். அந்த நேரம் பார்த்து கஜாசுரன் அரண்மனையிலிருந்து சிவபெருமான் வந்தார். ஆனால், அவரை விநாயகர் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த சிவபெருமான், தான் வைத்திருந்த திரிசூலத்தால் விநாயகரின் தலையை கொய்தார். இதையடுத்து, குளித்துமுடித்து விட்டு சிவபெருமானை வரவேற்க வந்த பார்வதி தேவி, விநாயகரின் தலை கொய்த்தை அறிந்து ஆவேசப்பட்டார். மேலும், இந்த பிரபஞ்சத்தையே அழிக்க முடிவு செய்தார். ஆனால், பிரம்மதேவர் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

அதற்கு பார்வதி தேவியோ, விநாயகரை மீண்டும் உயிர்தெழச் செய்ய வேண்டும். அதோடு, விநாயகரையே முழு முதல் கடவுளாக அனைவரும் வணங்க வேண்டும் என்று இரு நிபந்தனைகள் விதித்தார். இதனை ஏற்றுக் கொண்ட சிவபெருமான், வடக்குப் பக்கமாக தலை வைத்து இறந்தநிலையில் படுத்திருப்பது போன்று முதலில் எது தென்படுகிறதோ, அவற்றின் தலையை எடுத்து வருமாறு சிவகணங்களை அனுப்பி வைத்தார்.

பிறகு விநாயகருக்கு சிவபெருமான் உயிரிழத்தார். மேலும், முழு முதல் கடவுள் என்று பட்டமும், கணங்களுக்கு அதிபதி என்பதால், கணபதி என்றும் பெயர் சூட்டினார். இவ்வாறு பிறந்தவர் தான் விநாயகர்.

வெயில், மழையில் நனையும் ஒரே கடவுள்:

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும், எந்தப் பக்கம் திரும்பினாலும் பிள்ளையார் கோயில் இருப்பது சிறப்பு. பொதுவாக கோயில் என்றால், மேற்கூரை அதாவது கோபுரம் இருக்க வேண்டும். ஆனால், விநாயகப் பெருமானுக்கு அப்படிகூட இல்லாமல், அரச மரத்தடி, குளக்கரை, முச்சந்தி நாற்சந்தி, தெருமுனை என்று எங்கு பார்த்தாலும் வெயில், மழையிலும் நனைந்தபடி அமர்ந்திருக்கும் ஒரே கடவுள் பிள்ளையார்.

ரூபாய் நோட்டில் பிள்ளையார்:

பொதுவாக ரூபாய் நோட்டுகளில் அந்தந்த நாடுகளின் சிறப்பம்சம், பாரம்பரியம் ஆகியவற்றை குறிப்பிடுவது போன்று தேச தலைவர்கள், பாராளுமன்றம், தேசிய பறவை, உலக அதிசயங்கள் என்று ஏதாவது ஒன்று இடம் பெற்றிருக்கும். ஆனால், இந்தோனேசியா நாட்டின் ருபியா நோட்டில் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானின் திருவுருவம் அமையப்பெற்றிருப்பது சிறப்பு வாய்ந்தது.