வரதட்சணை கொடுக்க முடியாத தாய்மார்கள் வழிபட வேண்டிய கோயில்!

63

வரதட்சணை கொடுக்க முடியாத தாய்மார்கள் வழிபட வேண்டிய கோயில்!

விருதுநகர் மாவட்டம் மாந்தோப்பு என்ற ஊரில் உள்ள கோயில் அங்காள ஈஸ்வரி திருக்கோயில். இந்தக் கோயிலில் அங்காள ஈஸ்வரி மூலவராக காட்சி தருகிறாள். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி 4ஆம் தேதி இந்தக் கோயிலில் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதர விசேஷ நாட்களிலும் சிறப்பு அபிஷேக வழிபாடு நடக்கிறது.

இந்தக் கோயிலில் விநாயகர், வீரபத்திரசாமி, மாயாண்டி, இருளப்பர், இருளாயி, லாடசன்னாசி, சப்தகன்னியர், பேச்சி, காளி, கருப்பர், என்று 21 பந்தி தெய்வங்களும் அருள் பாலிக்கிறார்கள். கன்னிப் பெண்களின் காவல் தெய்வமாக திகழும் அங்காள ஈஸ்வரி மாந்தோப்பு கிராமத்தில் வாலகுருநாத சுவாமியுடன் அருள் பாலித்து வருகிறாள். இவளைப் பார்த்தால் பெற்ற தாயைப் பார்த்தது போன்ற உணர்வு ஏற்படும்.

வரதட்சணை கொடுக்க முடியாத நிலை, மகளை கடைசி வரை வைத்து பாதுகாக்க வேண்டுமே என்ற கவலை, பல கோயில்களுக்கு சென்றும், பரிகாரங்கள் பல செய்தும் திருமணம் ஆகவில்லையே என்ற கவலையில் உள்ள பெற்றோர் சர்வ சக்திகளுக்கும் தலைவியாக விளங்கும் இந்த அம்பிகையை வழிபாடு செய்கின்றனர்.

குழந்தைப் பாக்கியம் கிடைக்க, குடும்ப பிரச்சனை தீர, வழக்குகளில் நியாயமான தீர்ப்பு கிடைக்க, தீராத நோய் தீர, செல்வ வளம் கிடைக்க, சர்ப்ப தோஷம், கிரக தோஷம் உள்ளவர்கள், சொத்து வாங்க நினைப்பவர்கள் என்று அனைவரும் அங்காள ஈஸ்வரியை வழிபட்டு வந்தால் அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்பது ஐதீகம்.

தங்களது கோரிக்கை நிறைவேறியவுடன் அம்பாளுக்கு அபிஷேகம் ஆராதனைகள் செய்து நிவர்த்திக்கடனை செலுத்துகின்றனர். பல நூற்றாண்டுகளாக இத்தலத்தில் அன்னை அருளாட்சி புரிந்து வந்தாலும், 50 ஆண்டுகளுக்கு முன்பு தான் முறைப்படி கோயில் கட்டி வழிபாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு புள்ளி மான்கள் விளையாடி திரிந்ததால் மான்தோப்பு என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் அது மாந்தோப்பு என்றானது.