வழக்கு பிரச்சனை சரியாக வழிபட வேண்டிய கோயில்!

114

வழக்கு பிரச்சனை சரியாக வழிபட வேண்டிய கோயில்!

தஞ்சாவூர் மாவட்டம் திருப்புறம்பியம் என்ற ஊரில் உள்ள கோயில் தான் சாட்சிநாதேஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் சாட்சிநாதேஸ்வரர் மூலவராக காட்சி தருகிறார். தாயார் கரும்பன்ன சொல்லி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்தில் 10 நாட்கள், சிவராத்திரி, மார்கழி, திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம் ஆகிய நாட்களில் இந்தக் கோயிலில் திருவிழா நடைபெறுகிறது.

இங்குள்ள சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இந்தக் கோயிலில் உள்ள பிரளயங்காத்த விநாயகருக்கு, விநாயகர் சதுர்த்தி நாளில் தேன் அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் செய்யப்படும் தேன் வெளிவராது என்று சொல்லப்படுகிறது. மற்ற நாட்களில் திருமுழுக்கு இல்லை. இந்தக் கோயிலானது மதுரை திருஞானசம்பந்தரின் ஆதீனத்திற்கு சொந்தமானது.

திருமண வரன் வேண்டியும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இங்குள்ள இறைவனை வேண்டிக் கொள்கின்றனர். பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதும், அபிஷேகம் செய்தும், இறைவனுக்கு புது வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். தட்சிணாமூர்த்திக்குரிய 24 முக்கிய கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

அகத்தியர், சனகாதி நால்வர், விசுவாமித்திரர், பிரமன் ஆகியோர் இந்தக் கோயிலில் வழிபட்டுள்ளனர். அரித்துவசன் என்ற அரசனுக்கு துர்வாச முனிவர் சாபத்தால் ஏற்பட்ட முயலக நோய் நீங்கிய தலம் இது. கோயிலுக்கு விறகு கொண்டு வந்த ஒரு ஏழைக்கு இறைவன் தெட்சிணாமூர்த்தி ரூபமாக காட்சி கொடுத்துள்ளார். கோயிலுக்கு கிழக்குப் பகுதியிலுள்ள குளக்கரையில் இத்தெட்சிணாமூர்த்தியுள்ளார். கோயிலின் முதல் பிரகாரத்தில் அகத்தியர், சனகாதி நால்வர், விசுவாமித்திரர், பிரமன், புலஸ்தியர், சனகர், சனந்தனர் ஆகியோர் வழிபட்ட லிங்கங்கள் உள்ளன.

கோயிலின் 2ஆவது பிரகாரத்தில் அம்பாள் சன்னதி உள்ளது. குளத்திற்கு தென்கரையில் தெட்சிணாமூர்த்தி கோயில் இருக்கிறது. இதற்கு மேலாக சட்டை நாதர் சன்னதியும் உள்ளது.

பிரளயத்திற்கு புறம்பாய் இருந்தமையால் (புறம்பு – அயம்) திருப்புறம்பயம் என்ற பெயர் பெற்றது. இந்த ஊருக்கு கல்யாண மாநகர், புன்னாகவனம் ஆகிய புராணப் பெயர்களும் உண்டு. பிரளய வெள்ளம் வந்த போது புறம்பாய் இருந்தமையால் புறம்பயம் என்று பெயர். பிரளயம் ஏற்பட்ட போது சப்த சாகரத்தின் நீரையும் இத்தலத்திலுள்ள கிணற்றில் அடங்கிவிடும்படி விநாயகப் பெருமான் செய்தமையால் இந்தக் கோயிலில் உள்ள விநாயகர் பிரளயம் காத்த விநாயக என்று அழைக்கப்படுகிறார்.

அதுமட்டுமல்லாமல், வருண பகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தாக சொல்லப்படும் இந்த விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி நாளில் தேன் அபிஷேகம் செய்யப்படுகிறது. மற்ற நாட்களில் விநாயகருக்கு அபிஷேகம் என்று எதுவும் கிடையாது. விநாயகர் சதுர்த்தி நாளில் மட்டும் விநாயகருக்கு விடிய விடிய தேன் அபிஷேகம் நடந்த வண்ணம் இருக்குமாம். அப்படி செய்யப்படும் தேன் அபிஷேகமானது அப்படியே விநாயகர் திருமேனியில் உறிஞ்சப்படுமாம். அந்த வேளையில் விநாயகப் பெருமான் செம்பவள மேனியராய் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

கரும்படு சொல்லியம்மை (கரும்பன்ன சொல்லி)

எப்போதும் கடுமையான சொற்களை பேசுபவர்கள் இந்த கோயிலில் உள்ள கரும்படு சொல்லியம்மையை வழிபட இனிமையான சொற்களைப் பெறுவர். வாக்கு வன்மை பெறுவர். திக்குவாய், வாய் குழறி குழறி பேசும் குழந்தைகள் கரும்படு சொல்லியம்மையை வழிபட்டு அபிஷேகம் செய்த தேனை நாக்கில் தடவி வர இனிமையான சொல்லாற்றல் பெறுவர் என்பது ஐதீகம். குரல் வளம் இல்லாத குழந்தைகளுக்கு அவர்களது நட்சத்திர நாளின் போது அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

இரத்தினவல்லி என்ற ஒரு வணிக குலத்து கன்னிப் பெண் ஒருவள் இருந்தாள். அவளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அவள், தனக்கென்று நிச்சயிக்கப்பட்டிருந்த வருங்கால கணவருடன் இந்த ஊருக்கு வந்தாள். அப்போது, அவளது வருங்கால கணவனை பாம்பு கடித்து இறந்துவிட்டான். இதனால், மனம் வருந்தினாள்.

இதையடுத்து, அந்த ஊருக்கு திருஞானசம்பந்தர் வந்திருந்தார். அவர், நடந்தவற்றை அறிந்து கொண்டு, திருப்பதிகம் பாடி இரத்தினவல்லியின் வருங்கால கணவனை எழுப்பியருளி அவளுக்கு திருமணம் செய்து வைத்தார். இதற்கு இறைவன் சான்றாக நின்று அருளினார். இரத்தினவல்லியின் திருமணத்திற்கு சான்றாக இறைவன் இருந்ததால், இறைவனுக்கு சாட்சி நாதர் என்ற பெயர் வந்தது. இந்த திருமணத்திற்கு ஒரு வன்னிமரமும் சான்றாக சொல்லப்படுகிறது. அந்த வன்னிமரம் கோயிலின் 2ஆவது பிரகாரத்தில் உள்ளது. இறைவன் சாட்சி சொன்ன வரலாறு திருவிளையாடல் புராணத்திலும், தல புராணத்திலும் வருகிறது.