வால்மீகி செய்த சூழ்ச்சி – சுந்தர காண்டம்

117
சுந்தர காண்டம் பெயர் பிறந்த கதை ! வால்மீகி செய்த சூழ்ச்சி
ராமாயணம் நம் பாரத தேசத்துக்கு கிடைத்த அளப்பரிய பொக்கிஷம் . ஒரு மனிதன் மற்றும் அரசனின் கடமைகளை உலகிற்கு பறைசாற்றும் உன்னத காவியம் . குறிப்பாக இராமாயணத்தில் சுந்தர காண்டம் தனி சிறப்பு கொண்டது . ஒரு பக்தன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஹனுமானின் வீர தீர சாகசங்களின் பயணமே சுந்தர காண்டம் . தினமும் சுந்தர காண்டம் பாராயணம் செய்தால் , தீராத வினைகளும் தீரும் என்பார்கள் பெரியோர்கள் . ஏன் சுந்தர காண்டத்துக்கு இத்தனை சிறப்பு என்றால் , சுந்தர காண்டம் முழுவதும் ஹனுமானின் தன்னம்பிக்கை நிறைந்த நிகழ்வுகளும் , ராம நாமத்தின் சிறப்புகளும் கொண்ட ஒரு நேர்மறையான பகுதி , எனவே கவலைகள் கொண்ட மனிதர்கள் இதை படிக்கும் போது அவர்களை அறியாமல் மனம் ராம பக்தியில் லயித்து விடும் .
இந்த பகுதிக்கு வால்மீகி எவ்வாறு சுந்தர காண்டம் என்ற பெயர் வைத்தார் என்ற கதை சற்று சுவாரசியமானது . ராமாயணத்தை எழுதி முடித்த வால்மீகிக்கு இந்த பகுதிக்கு ஹனுமான் பெயரை வைக்கலாம் என்று மனதுக்குள் முடிவு செய்து வைத்து இருந்தார்  . அந்த சமயம் அவரை பார்க்க ஹனுமான் அங்கு  வரவே அவரிடம் இந்த முடிவை தெரிவித்தார் . ராமரின் புண்ணிய கதைக்கு என் பெயரை வைப்பதா என்று அவர் மறுக்கவே சரி என்று யோசித்த வால்மீகி தான் சுந்தர காண்டம் என்ற பெயரை வைப்பதாக கூறினார் . அனுமனும் சரி என்று திரும்பி  வந்து விட்டார் , நீண்ட நாளுக்கு பின்னர் தன் அன்னையை பார்க்க கிஷ்கிந்தா சென்ற அனுமனை அஞ்சனை தேவி வா சுந்தரா  என்று கூறி அழைத்த போது அவருக்கு தூக்கி வாரி போட்டது  . தன் அன்னையிடம் ஏன் தன்னை சுந்தரன் என்று கூப்பிடுகிறீர்கள் என்று விளக்கம் கேட்டார் . அனுமாருக்கு சிறு வயதில் சுந்தரன் என்று மற்றோரு பெயர் இருந்ததாகவும் , அவருக்கு ஏற்பட்ட சாபம் காரணமாக அந்த பெயர் அவருக்கு நினைவில் இல்லை என்றும் விளக்கம் கொடுத்தார் . அப்பொழுதான் அவருக்கு புரிந்தது , வால்மீகி சாமர்த்தியமாக தன்னை ஏமாற்றியதை தன் பெயரயே வைத்து விட்டார் என்று எண்ணி  தனக்கு தானே சிரித்து கொண்டார் . எவர் ஒருவர் வீட்டில் கடன் , குடும்பத்தில் சண்டை , சச்சரவு இருக்கிறதோ அவர்கள்  சுந்தர காண்டத்தை படித்து வந்தால் சூரியனை கண்ட பனி போல அனைத்தும் விலகும் எனவே , சுந்தர காண்டம் பாராயணம் செய்க , ராமர் அருள் பெறுக .