வாழையடி வாழையாக குலம் தளைக்க மகாதேவர் வழிபாடு!

63

வாழையடி வாழையாக குலம் தளைக்க திருப்பைஞ்ஞீலி மகாதேவர் வழிபாடு!

ஒவ்வொருவரும் வாழையடி வாழையாக தங்களது குலம் தளைக்க வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். அதோடு, தீர்க்காயுளுடன் வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி வேண்டும் ஒவ்வொருவரின் குலம் தளைக்கவும், நீண்ட ஆயுளுடன் வாழவும் வழிவகை செய்யும் இடம் தான் திருப்பைஞ்ஞீலி மகாதேவர் கோயில்.

திருப்பைஞ்ஞீலி மகாதேவர்:

முசுகுந்த சக்கரவர்த்தியால் திருப்பைஞ்ஞீலி மகாதேவர் கோயில் கட்டப்பட்டது. சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பு மகேந்திர வர்ம பல்லவர் ஆட்சி காலத்தில் திருப்பணி செய்யப்பட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது. ஆனந்த தாண்டவ கோலத்தை வசிட்ட மாமுனிக்கு காட்டியதால், இந்த கோயில் மேலச் சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும், வியாக்ரபுரி, அரம்பை வனம், சுவேதகிரி, தென்கைலாயம், ஞீலிவனம், கதலிவனம், விமலாரண்யம், தரளகிரி என்றும் அழைக்கப்படுகிறது.

ஞீலி என்பது மனிதர்கள் உண்ண இயலாத இறைவனுக்கு மட்டுமே படைக்கப்படுகின்ற ஒரு வகைக் கல்வாழை. வாழை தோப்பாக இருந்த இடத்தில் (வனம்) சிவபெருமான் லிங்க வடிவில் சுயம்புவாக எழுந்தியுள்ளார். ஆதலால், பைஞ்ஞீலி என்று இந்த கோயிலுக்கு திருநாமம் உருவானது. இந்த கோயிலில் தல விருட்சமே வாழை தான். இந்த கோயிலில் சிவனின் திருநாமம் ஸ்ரீஞீலிவனநாதர்.

கவுமாரி, வைஷ்ணவி, பிராம்மி, இந்திராணி, மாகேஸ்வரி, வாராகி, சாமுண்டி என்று 7 கன்னியரும் ஒன்று கூடி பார்வதி தேவியிடம் திருமண வரம் வேண்டி தவம் இருந்ததாகவும், அவர்கள் முன் தோன்றி பார்வதி தேவி அவர்களுக்கு வரம் கொடுத்து வாழை மர வடிவில் அந்த கோயிலிலேயே குடி கொண்ட தாகவும் வரலாறும் கூறப்படுகிறது. இங்கு அம்பிகை விசாலாட்சி என்றும், ஸ்ரீநீள்நெடுங்கண் நாயகி என்றும் எழுந்தருளி உள்ளார்.

வாழைவன நாதர், நீலகண்டேசுவரர், பைஞ்ஞீலி மகாதேவர், பைஞ்ஞீலி உடையார், சுவேத கிரியார், கதலிவசந்தர், ஆரண்யவிடங்கர் என்றும் கல்வெட்டுகள் சிவனைத் துதிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.