வாழ்க்கை வளமாக கார்த்திகையில் முருகன் வழிபாடு!

121

வாழ்க்கை வளமாக கார்த்திகையில் முருகன் வழிபாடு!

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் என்ற ஊரில் உள்ள கோயில் கருநெல்லிநாத சுவாமி திருக்கோயில். இந்தக் கோயிலில் கருநெல்லிநாதர் (சொக்கநாதன்) மூலவராக காட்சி தருகிறார். சொக்கி அம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். திருத்தங்கால் என்பதே இந்த ஊரில் புராணப் பெயராக இருந்துள்ளது.

சித்திரை திருவிழா, திருக்கார்த்திகை திருவிழா, பழநியாண்டிக்கு பெருவிழா, பௌர்ணமி தோறும் மீனாட்சி அம்மனுக்கு திருவிளக்கு பூஜை, பிரதோஷம் தோறும் சுவாமி புறப்பாடு, செவ்வாய் தோறும் துர்க்கைக்கு அபிஷேகம் ஆராதனை தவிர பௌர்ணமி, அமாவாசை, தமிழ் மற்றும் ஆங்கில வருடப்பிறப்பு, தீபாவளி, பொங்கல் ஆகிய விசேஷ நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.

பழனியில் முருகப் பெருமான் ஆண்டி கோலத்தில் அருள் பாலிப்பது போல் இங்கும் அதே கோலத்தில் காட்சியளிக்கிறார். செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் வழிபட்டால் திருமணம் கை கூடுகிறது. பிரதோஷம் தோறும் இந்த ஆலயம் வந்தால் பிணிகள் நீங்குகிறது. பௌர்ணமி பூஜையில் கலந்து கொண்டால் மாங்கல்ய பலம் பெருகும். கார்த்திகையில் முருகனைக் கண்டால் விதியின் வேகம் குறைந்து வாழ்க்கை வளமாகிறது.

முருகனுக்கு முடி இறக்குதல், சுவாமி அம்பாள் ஆகியோருக்கு வேஷ்டி சேலை படைத்தல், இது தவிர வழக்கமான அபிஷேக ஆராதனைகளும் செய்யலாம். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைக்கலாம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்யலாம். பஞ்ச பாண்டவர்கள் 13 ஆண்டுகள் வன வாசம் செய்த போது மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான சதுரகிரி மலைக்காடுகளில் சில காலம் தங்கியிருந்தனர்.

அந்தக் காலத்தில் தினசரி காலை மாலை நீராடி இறைவனை பூசனை செய்ய நீர் ஊற்று இல்லாமல் வருந்திய போது அதிகாலை வேளையில் சூரியன் உதிக்கும் வேளை கங்கா தேவியை நினைத்து வணங்கி தன்னுடைய அம்பினால் பூமியை பிளக்கவே புனிதநீர் கொப்பளித்து பூமியெங்கும் பரவி ஓடியது.

பஞ்சபாண்டவர்கள் அந்த புனித நதிகளில் நீராடி பூஜைகளை முடித்த மகிழ்ந்தனர். அந்த நதியே அர்ச்சுனா நதி என்ற புண்ணிய நதியாகும். இந்த புண்ணிய நதிகளில் நீராடினால் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். இந்தக் கோயிலில் உள்ள முருகப் பெருமான் சன்னதி ஆறுமுகத் தம்பிரான் என்ற முருகப் பக்தரால் அமைக்கப்பட்டுள்ளது. இவர் ஆண்டுதோறும் பழநிக்கு சென்று தண்டாயுத பாணிக் கடவுளை தரிசிப்பது வழக்கம்.

ஒருநாள் தம்பிரான் தங்கை வீரலட்சுமி அம்மாள் பழநி முருகனைத் தரிசிக்கும் ஆவலைத் தெரிவித்தார். போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்த காலத்தில் பழநிக்கு சென்று வரும் இன்னல்கள் குறித்து தங்கை வீரலட்சுமிக்கு எடுத்துரைத்தார். ஆனால், முருகப் பெருமானை தரிசிக்கப் பிடிவாதமாக இருந்து ஒரு தைப்பூச நாளில் அண்ணனுடன் கிளம்பிவிட்டார். தங்கையுடன் செல்வதால் பழநி சென்றடைய காலதாமதமாகிவிட்டது.

தாமதமாக வந்த ஆறுமுகனார் முருகப் பெருமானை தரிசிக்க இயலவில்லை. ஆண்டுதோறும் இந்த நாளில் உன்னை தரிசிக்க வேண்டும் உன் புகழ் பாட வேண்டும் என்ற தீராத வேட்கையுடன் வரும் எனக்கு இன்று தரிசனம் கிட்டவில்லை. உன் முன்னாள் உள்ளம் உருகி பாடவும் இயலவில்லை. உன் பெருமைகளை பாட இயலாத என் நா எதற்கு? என்று கூறி தனது நாக்கை துண்டித்தார்.

அவரது பக்தியைக் கண்ட தண்டாயுதபானி ஆறுமுகனாருக்கு காட்சியளித்து ஆறுமுகத்தம்பிரானே கலக்கம் வேண்டாம். உமக்கு தனிமையில் காட்சி தரவே இப்படியொரு திருவிளையாடல் புரிந்தோம். உனது பக்தியினால் சோதனைகளை கடந்து வெற்றி பெற்றாய். இனி எம்மை தரிசிக்க பழநி வர வேண்டாம். உனது ஊரான திருத்தங்கல் குன்றின் மீது எமக்கு கோயில் கட்டி என்னை வழிபடு. தைப்பூச நாளில் அங்கேயே காவடி செலுத்தினாலும் கூட போதும் என்று கூறி அவரது நாவினை பழையபடி இருக்கும்படி செய்தார்.

ஆனால், கோயில் கட்டும் அளவிற்கு அவரிடம் பணம் இல்லாததை நினைத்து வருத்தம் கொண்டார் ஆறுமுகனார். முருகப் பெருமானோ சென்று வாய் மகனே வழி பிறக்கும் என்று ஆசி கூறி மறைந்தார். இறைதரிசனம் பெற்று பிறவிப்பயனடைந்த ஆறுமுகத் தம்பிரான் தம் தங்கையுடன் திருத்தங்கல் நோக்கி புறப்பட்டு சென்றார். இரவு துவங்கிய போது ஒட்டன்சத்திரம் என்ற இடத்தில் தங்கினர்.

அங்கு அடுப்பு வைக்க குழி தோண்டிய போது பானை ஒன்று தென்பட்டுள்ளது. அந்த பானை முழுவதும் பொன் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்த ஆறுமுகனார், முருகப் பெருமானின் அருளால் நிதி கிடைத்துள்ளதாக எண்ணி ஆனந்த பரவசமடைந்தார். அதன் பிறகு சமையல் செய்து சமைத்து உணவருந்திவிட்டு களைப்பில் அயர்ந்து தூங்கினார். அந்த நேரம் பார்த்து கள்வர்கள், ஆறுமுகனார் வைத்திருந்த பொன் புதையலை களவாடிச் சென்றனர்.

ஒரு சில நேரங்களுக்குள்ளாக முருகப் பெருமானின் திருவிளையாடல்களால் கள்வர்களது கண்ணொளி பறிக்கப்பட்டு அலறியது. அவர்களது குரல் கேட்டு தம்பிரான் எழுந்தார். தவறை உணர்ந்த கள்வர்கள், அவர்கள் களவாடிச் சென்ற புதையலை திரும்ப கொடுத்து தங்களை மன்னித்தருளும்படி வேண்டிக் கொண்டு மீண்டும் தங்களுக்கு கண் பார்வை கிடைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். முருகப் பெருமானை அருளால் வியந்த ஆறுமுகனார் கள்வர்களுக்கு பார்வை கிடைக்க முருகனை பிரார்த்தனை செய்ய அவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைத்தது.

அதன் பிறகு திருத்தங்கல் திரும்பிய ஆறுமுகனார் முருகப் பெருமானின் திருவருளால் கிடைத்த புதையலை கொண்டு திருத்தங்கல் குன்றின் மீது பழநி தண்டாயுதபாணிக் கோயிலை போன்று ஒரு கோயிலைக் கட்டினார். பழநி முருகன் போன்று திருத்தங்கல் பழநியாண்டி அருள் சக்தி கொண்டவராய் இந்தப் பகுதி மக்களால் கொண்டாடப்படுகிறார்.