வாழ்வில் வசந்தம் வீச அசுரர் வழிபாடு!
சேலம் மாவட்டம் இளம்பிள்ளையிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலுள்ள திசவிளக்கு (தெசவிளக்கு) என்ற கிராமத்தின் கொல்லங்கரடு என்ற மலையில் உள்ள கோயில் ஸ்ரீ வைர முனீஸ்வரர் கோயில். கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இந்தக் கோயில் கருதப்படுகிறது. இந்தக் கோயிலில் ஸ்ரீவைர முனீஸ்வரர் தீராத நோய்களை தீர்க்கும் வைத்தீஸ்வரனாகவும், குழந்தை செல்வத்தை அருளும் வேந்தனாகவும் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
இந்த கொல்லங்கரடு மலையில் கிழக்கு நோக்கி சமயபுரத்தன், விநாயகர், ஸ்ரீ வைர முனீஸ்வரர், முருகர் ஆகிய தெய்வங்களும், மேற்கில் அசுரரும், வடக்கில் காமதேனு, வைர குருமணி உள்ளிட்ட தெய்வங்களும் உள்ளன. இதில், வைர குருமணி தனது வலது காலை தலையில் வைத்து யோக நிலையில் பக்தர்களுக்கு காட்சி தருகிறாள்.
மற்ற கோயில்களில் முனியப்பன் பல்வேறு ஆயுதங்களுடன் கம்பீரமாக காட்சி தருவார். ஆனால் இந்தக் கோயிலில் மட்டும் ஸ்ரீவைர முனீஸ்வரராக குழந்தை வடிவத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். வாரந்தோறும் திங்கள், வெள்ளி மற்றும் பௌர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் இந்தக் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.
தீராத நோயால் அவதிப்படும் பக்தர்கள் சுவாமியின் எலுமிச்சை, திருநீறு ஆகியவற்றை பய பக்தியுடன் பெற்றுச் செல்கிறார்கள். வீட்டிற்கு சென்றவுடன் அவற்றை பால் அல்லது தண்ணீரில் கலந்து குடித்தால் அந்த நோய் குணமாகும் என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கையாகும். குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் 5 பவுர்ணமிக்கு கோயிலுக்கு வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பாலை வாங்கி குடிக்கிறார்கள்.
மேலும் எலுமிச்சை மற்றும் சந்தனத்தை பிரசாதமாக வாங்கிச் செல்கிறார்கள். இதனை 3 முறை தொடர்ந்து குடித்து வந்தால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
மூலவரான ஸ்ரீவைர முனீஸ்வரர் தீராத நோய்களை தீர்க்கும் வைத்தீஸ்வரனாகவும், குழந்தை செல்வத்தை அருளும் வேந்தனாகவும் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக திருநீறு மற்றும் எலுமிச்சை மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் குழந்தைப்பேறு வேண்டி கோயிலுக்கு வரும் தம்பதியினருக்கு ஸ்ரீவைர முனீஸ்வரருக்கு அலங்காரம் செய்யப்பட்ட சந்தனம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இந்த பிரசாதத்தை பால் அல்லது தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் அந்த தம்பதியினருக்கு குழந்தைப்பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது. இதே போல் கால் வலி மற்றும் உடல் வலியால் அவதிப்படும் பக்தர்கள் சுவாமிக்கு அபிஷேகத்திற்கு பயன்படுத்திய எண்ணெயை வாங்கிச் செல்கிறார்கள். இந்த எண்ணெயை தங்களது உடலில் தேய்த்துக்கொண்டால் அந்த வலி காணாமல் போய்விடுகிறது என்பது இங்கு வந்து செல்லும் பக்தர்களின் அனுபவப்பூர்வமான உண்மையாக சொல்லப்படுகிறது.
குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெற்றவர்கள் தங்களது நிவர்த்திக் கடனை செலுத்தும் விதமாக குழந்தைகளுக்கு வைரமணி, வைரம், பட்டு வைரமணி, அஜய் வைரமணி, வைரமுத்து என்று பெயர்களை சூட்டி மகிழ்கின்றனர். சரியாக வாய் பேச முடியாத குழந்தைகள் மற்றும் படிப்பில் கவனம் செலுத்தாத குழந்தைகளுக்கு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட தேன் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. தேனை குடிக்கும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அதோடு, அவர்களுக்கு பேச்சுத்திறமையும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் இந்தக் கோயிலில் திருவிழாவானது கொண்டாடப்படுகிறது. மேலும், ஆடிப்பெருக்கு நாளிலும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. குறிப்பாக அன்று காலை 5 மணியளவில் பக்தர்கள் சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சித்தர் கோயிலுக்கு நடந்து செல்வார்கள். பின்னர், அருவி, கிணறுகளில் குளித்து முடித்து பால்குடம், தீர்த்தக்குடம், அக்னிசட்டி, அலகு குத்தி மேளதாளம் முழங்க ஊர்வலமாக ஸ்ரீ வைர முனீஸ்வரர் கோயிலுக்கு செல்வார்கள்.
பாத யாத்திரை செல்லும் பக்தர்களின் வசதிக்காக வியாபாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் அன்னதானம், பிஸ்கட், குளிர்பானம், நீர் மோர் என்று வழங்குவார்கள். மேலும், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம் என்று நடைபெறும். பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு செல்லும் பால் மற்றும் தீர்த்தக் குடத்தில் உள்ள புனித நீரில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும். இதனை தொடர்ந்து அசுரருக்கு ஆடு, கோழி ஆகியவை பலியிடப்படும்.
மற்ற தெய்வங்களுக்கு பொங்கல் படையலாக படைக்கப்படும். ஸ்ரீ வைர முனீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்தத்தை பக்தர்கள் தங்கள் வீடுகளுக்கு எடுத்து சென்று தெளிப்பார்கள். இதன் மூலம் ஐஸ்வர்யம் கிடைப்பதாக நம்பப்படுகிறது.
ஸ்ரீ வைர முனீஸ்வரருக்கு எதிரே அசுரர் அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு வருபவர்கள் முதலில் அசுரரை வணங்கி விட்டு அதன் பிறகு ஸ்ரீ வைர முனீஸ்வரரை வணங்கி செல்கிறார்கள். அசுரருக்கு ஆடு, கோழி ஆகியவை பலியிடப்படும். மற்ற தெய்வங்களுக்கு சைவமே பிரதானமாக படைக்கப்படுகிறது.
பேய், பிசாசு தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அசுரர் முன்பு வைத்திருக்கும் சாட்டை கொண்டு படம் போடப்படும். இதுவே உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 படமும், மற்றவர்களுக்கு ஒரு படமும் போடப்படும். அசுரரை வணங்கி எலுமிச்சை பழத்தால் விளக்கேற்றி வழிபாடு செய்து வர வாழ்வில் வசந்தம் உண்டாகும் என்பது ஐதீகம்.
ஸ்ரீ வைர முனீஸ்வரர், பக்தர்களால் அவதார புருஷர் என்றும், கலியுக தெய்வம் என்றும் போற்றப்படுகிறார். இந்தக் கோயிலில் முக்கிய நிவர்த்திக்கடனாக மரமனை உள்ளது. அதாவது, சாமிக்கு சீர் செய்யும் ஒரு பழக்கம். வாழைப்பழம், தேங்காய், எலுமிச்சை, பாக்கு, வெற்றிலை, பூ ஆகியவற்றை ஊர்வலமாக கொண்டு செல்வார்கள். முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீவைர முனீஸ்வரர் கொல்லங்கரடு மலையில் கிரிவலம் செல்வார்.
அவருக்கு முன்பாக பக்தர்கள் சீர் வரிசைகளை சுமந்துகொண்டு சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்வார்கள். அப்போது நடைபெறும் வாணவேடிக்கை கண்கொள்ளா காட்சியாக இருக்கும். மரமனை செய்யும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பொங்கல் பிரசாதமாக வழங்கப்படும்.