விநாயகர் சதுர்த்தி நாளில் பூஜை செய்யும் முறை!

119

விநாயகர் சதுர்த்தி நாளில் பூஜை செய்யும் முறை!

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வரும் வளர்பிறை சதுர்த்தி நாளை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடி வருகிறோம். அந்த வகையில் இந்த ஆண்டு வரும் 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி நாளி, விநாயகர் சதுர்த்தி வரலாறு, பூஜை செய்யும் முறை, மந்திரங்கள், பலன்கள், 21 இலைகள் கொண்டு விநாயகரை வழிபாடு செய்வதால் ஏற்படும் நன்மைகள், விநாயகர் சிலையை வீட்டில் எங்கு வைக்க வேண்டும் என்பது குறித்து பதிவிட்டு வருகிறோம். இந்தப் பதிவில் விநாயகர் சதுர்த்தி நாளில் பூஜை செய்யும் முறை குறித்து பார்க்கப் போகிறோம்.

மேலும் படிக்க வேண்டியவை: –

விநாயகர் சிலையை வீட்டில் எங்கு வைக்க வேண்டும்?

21 வகை இலைகள் கொண்டு வழிபாடு செய்வதால் ஏற்படும் நன்மைகள்!

பிள்ளையார் பிடித்து வைப்பதன் பலன்கள்!

விநாயகர் சதுர்த்தி பூஜை செய்யும் முறை:

விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து வீட்டு பூஜையறையில் மாக்கோலமிட வேண்டும். வெள்ளிக்கிழமை என்பதால் ஒரு நாளுக்கு முன்னதாக வீட்டு பூஜையறையை சுத்தம் செய்திட வேண்டும். மாக்கோலமிட்ட பிறகு மணப்பலகையை வைத்து தலை வாழையிலையை (இலையின் நுனி வட து புறமாக இருக்கும்படி வைக்க வேண்டும்) வைத்து அதில், அரிசியை பரப்ப வேண்டும். அரிசியில் நமது வலது கை மோதிர விரலால் பிள்ளையார் சுழி போட்டு ஓம் என்று எழுத வேண்டும்.

மணப்பலகையின் இரு பக்கமும் குத்துவிளக்கு, பூஜை பொருட்கள், அபிஷேகப் பொருட்கள் ஆகியவற்றை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு களிமண்ணால் செய்யப்பட்ட வலஞ்சுழி விநாயகரை வாங்கி அதற்கு சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும். மேலும், விநாயகரின் தொப்பையில் காசு வைக்க வேண்டும். இதையடுத்து, பிள்ளையாருக்கு துண்டு கட்டி, அருகம்புல் மாலை போட்டு மணைப் பலகையில் வைக்க வேண்டும்.

குன்றி மணியால் விநாயகருக்கு கண்களைத் திறக்க வேண்டும். பின்னர் பிள்ளையார் குடை வைத்து, விளக்குகளை ஏற்றி பூஜையைத் தொடங்க வேண்டும். விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, சுண்டல், வடை முதலிய நிவேதனம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும். மேலும், 21 வகையான இலைகள் கொண்டு விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அப்படியில்லையென்றால் துளசி, வேம்பு, வன்னி, வில்வம், அருகம்புல் ஆகியவற்றை கொண்டு பூஜை செய்ய வேண்டும்.

பின்னர்,

ஓம் ஸ்ரீம், ஹ்ரீம், க்லீம், க்ளௌம் கம், கணபதயே

வர வரத ஸர்வ ஜனம்மே வஸமாயை ஸ்வாஹா

எனும் கணபதியின் மூல மந்திரத்தை 21 முறை அல்லது 51 முறை சொல்லி பூஜையை முடிக்க வேண்டும். பூஜையை செய்து முடித்த பிறகு விநாயகருக்கு படைக்கப்பட்ட நிவேதனப் பொருட்களை குழந்தைகளுக்கு கொடுத்து நீங்களும் சாப்பிடலாம். வீட்டில் பூஜை செய்து முடித்த பிறகு கோயிலுக்கு சென்று வரலாம். ஆனால், இந்த கொரோனா காலம் காரணமாக பெரிய பெரிய கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

எனினும், சிறிய சிறிய விநாயகர் கோயில்களில் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது. அதில், கலந்து கொண்டு விநாயகரை வழிபடலாம். விநாயகப் பெருமானின் சிலை வீட்டில் இருக்கும் வரை தினமும் இரு வேளை பூஜை செய்து வழிபட வேண்டும். மேலும், விநாயகர் சிலை சேதமடையாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

விநாயகர் சிலையை ஆண்கள் மட்டுமே கரைக்க வேண்டும். விநாயகரின் தொப்பையில் பதித்த காசை எடுத்து வீட்டு பூஜையறையில் வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும். மேலும், லட்சுமி கடாட்சமும் கிடைக்கும்.