வியாபாரம் செழிக்க வழிபட வேண்டிய கோயில்!

25

வியாபாரம் செழிக்க வழிபட வேண்டிய கோயில்!

நாகப்பட்டினம் மாவட்டம் நல்லாடை பகுதியில் உள்ளது அக்னீஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் மூலவர் அக்னீஸ்வரர், தாயார் சுந்தரநாயகி காட்சி தருகின்றனர்.

சிறப்பு:

இந்தக் கோயிலில் அக்னீஸ்வரர் மேற்கு நோக்கி அருள்பாலிப்பு சிறப்பு அம்சமாகும். மூலஸ்தானத்தில் உள்ள லிங்கத்தை சுற்றிலும் ஒரு தாழ்வான பகுதி உள்ளது. அக்னீஸ்வரர் அக்னி சொரூபமாக உள்ளதால், அதனை தணிக்கும் வகையில் அந்த தாழ்வான பகுதியில் தண்ணீர் ஊற்றப்பட்டு இருப்பது தலத்தின் முக்கிய அம்சமாகும்.

பரணி நட்சத்திரக்காரர்களின் குணம்:

நன்றி உணர்வு கொண்டவர்கள். எதிரிகளை எளிதில் வெற்றி கொள்ளும் திறமை இவர்களிடம் உண்டு. தான தர்மங்களை செய்யும் குணம் கொண்டவர்கள். தொட்டது எல்லாம் துலங்கும். தனது வேலைகலை தானே சாதித்துக் கொள்ளும் திறமை இவர்களிடம் உண்டு.

கிபி 1146 ஆம் ஆண்டு முதல் 1163 ஆம் ஆண்டு வரை 2 ஆம் குலோத்துங்க சோழனின் மகனான இரண்டாம் ராஜராஜசோழன் இந்தப் பகுதியை ஆட்சி செய்தான். அவனது ஆட்சி காலத்தில் இந்தக் கோயிலின் கருவறை கருங்கல் கொண்டு கட்டப்பட்டது. தற்போது நல்லாடை என்று அழைக்கப்படும் இந்த ஊரானது, பழங்காலத்தில் ஜெயங்கொண்ட சோழநாட்டில் குறும்பூர் நாட்டில் நல்லாடை மங்களமான குலோத்துங்க சோழபுரம் என்று வழங்கப்பட்டதாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது அக்னீஸ்வரர் என்று அழைக்கப்பட்ட மூலவர் புராண காலத்தில் திருவன்னீஸ்வரம் உடையார் என்ற பெயரில் வணங்கப்பட்டுள்ளார். இந்தக் கோயிலின் பிரகாரத்தில் துவார விநாயகர், பால முருகன், செல்வ விநாயகர், மகா விஷ்ணு, சோமாஸ்கந்தர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், புவனேஸ்வரி, கல்யாணி, சனி பகவான், கைலாசநாதர், சூரியன், பைரவர், துர்க்கை சன்னதிகள் உள்ளன.

இந்தக் கோயிலில் சிவபெருமான் நவக்கிரக நாயகனாக இருப்பதால், கோயிலில் நவக்கிரகத்திற்கு என்று தனியாக சன்னதியும் கிடையாது. பரணி நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க அக்னீஸ்வரரை வழிபாடு செய்கின்றனர். மேலும், திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும், வியாபாரம் செழிக்கவும் இங்கு வந்து அக்னீஸ்வரரை வழிபாடு செய்து கோரிக்கைகள் நிறைவேற வேண்டிக் கொள்கின்றனர்.

தல பெருமை:

கார்த்திகை மாத பரணி:

பரணியில் பிறந்தோர் தரணி ஆள்வர் என்பது பழமொழி. பரணி நட்சத்திரக்காரர்கள் தங்களது வாழ்நாளில் அடிக்கடி நல்லாடை அக்னீஸ்வரர் கோயிலுக்கு சென்று விசேஷ வழிபாடு செய்து சிறப்பு. இந்தக் கோயிலில் சிவபெருமான் அக்னி சொரூபமாக திகழ்வதால், பரணி நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் இவருக்கு ஹோமம் செய்து வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

ஒவ்வொரு ஆண்டும் வரும் கார்த்திகை மாதம் பரணி நட்சத்திர நாளில் சிவபெருமானுக்கு ஹோமம் செய்தால் பலன் இரட்டிப்பாக கிடைக்கும் என்பது ஐதீகம். பொதுவாக மேற்கு நோக்கி அமைந்திருக்கும் கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்யப்படும் போது அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும். இந்தக் கோயிலில் சிவபெருமான் அதிக உக்கிரத்துடன் காணப்படுவார். இங்கு அக்னீஸ்வரர் மேற்கு நோக்கியும், அம்மன் சுந்தரநாயகி தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர்.

அக்னீஸ்வரர் அக்னி சொரூபமாக உள்ளதால், அதனை தணிக்கும் வகையில் அந்த தாழ்வான பகுதியில் தண்ணீர் ஊற்றப்பட்டு இருப்பது தலத்தின் முக்கிய அம்சமாகும். இறைவனுக்கே ஆடை நெய்து கொடுத்த காரணத்தினால் இத்தலம் நெய்தலாடை என்று வழங்கப்பட்டு நாளடைவில் அது நல்லாடை என்றானது.

தல வரலாறு:

மிருகண்ட மகரிஷி இந்த தலத்தில் அட்சயபுரீஸ்வரருக்கு யாகம் நடத்த ஏற்பாடு செய்தார். மேலும், இதற்கான பொருட்களை மக்கள் தாராளமாக கொடுக்கலாம் என்று அறிவித்தார். அதற்கு மக்கள் தங்கம் கலந்த பட்டாடை மூன்றை நெய்தனர். அதில், ஒன்றை அட்சயபுரீஸ்வரருக்கும், மற்றொன்றை மிருகண்ட மகரிஷிக்கும், 3ஆவதை தங்கள் நாட்டு மன்னனுக்கும் வழங்கினார்கள்.

யாகம் முடிந்த பிறகு இறைவனுக்கு கொடுத்த பட்டாடையையும், தனக்கு சாற்றப்பட்ட பட்டாடையையும் மிருகண்ட மகரிஷி யாக குண்டத்தில் போட்டார். அப்படி போடப்படும் பட்டாடைகள் இறைவனை அடைந்துவிடுமா என்று மக்கள் அனைவரும் மிருகண்ட மகரிஷியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு நீங்கள் மூலஸ்தானத்திற்கு சென்று பாருங்கள் உங்களுக்கே புரியும் என்றார்.

மக்களும் ஆர்வமுடன் சென்று பார்த்தனர். அப்போது, யாக குண்டத்தில் போடப்பட்ட பட்டாடைகள் சிவலிங்கத்தின் மீது போர்த்தப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இவை எப்படி அங்கு வந்தன என்று ஆச்சரியத்துடன் மிருகண்ட மகரிஷியிடம் கேள்வி எழுப்பினர்.

அக்னியின் பல வகைகளில் பரணி என்னும் ருத்ராக்னியும் ஒன்று. அந்த அக்னியே இறைவனுக்கு நாம் இடும் பொருட்களை அவரிடம் கொண்டு சேர்க்கிறது என்றார். இதன் காரணமாக இத்தலம் பரணி நட்சத்திரத்திற்குரிய கோயிலாக திகழ்கிறது. இந்தக் கோயிலில் விருட்சமாக வில்வ மரம் உள்ளது. இந்த தல விருட்சத்திற்கு என்று தனி வரலாறும் உள்ளது.

ஒரு முறை இந்தப் பகுதியை ஆண்ட சோழ மன்னனும், சிவனேச நாயன்மாரும் சிவபெருமானை தரிசிக்க வந்தனர். அப்போது புலி ஒன்று சிவனேச நாயன்மாரை துரத்த, அவர் உடனே இத்தல விருட்சத்தின் மீது ஏறிக் கொண்டார். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு நாயன்மார் அருகிலுள்ள குண்டாங்குளம் சென்ற போது புலியும் வந்தது. நாயன்மார் அங்கு வைத்து புலியை சம்ஹாரம் செய்தார். இதையடுத்து சிவபெருமான் அவருக்கு தரிசனம் கொடுத்தார் என்று வரலாறு கூறுகிறது.