விருச்சிக ராசியும் வாழ்க்கை அமைப்பும்

295

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை )
விருச்சிக ராசியின் ராசியாதிபதி முருகனின் அவதாரமாக விளங்கும் செவ்வாய் பகவானாவார். கால் புருஷனின் அங்க அமைப்பில் ஜனனேந்திரியங்களை குறிக்கும் இது மூன்றாவது ஸ்திர ராசியாகும். விசாகம் 4, அனுஷம், கேட்டை நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் விருச்சக ராசியில் பிறந்தவர்களாக கருதப்படுவார்கள். இது ஒரு பாப ராசியும், பகலில் வலுபெற்றதுமாகும்.
உடலமைப்பு,
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு எலும்புகள் வெளியே தெரியா வண்ணம் தகைமூடி சற்று உருண்டை உடலமைப்பு கொண்டிருப்பார்கள். நடுத்தர உயரமும், அகன்ற நெற்றியும், அமைதியான உருவ அமைப்புடன் தோன்றினாலும், தேளின் விஷயத்தை போன்று தன்னுடைய பேச்சால் மற்றவர் மனதை புண்படுத்தி விடுவார்கள். மாநிறமும் மேல் புருவங்கள் சற்று உயர்ந்தும் காணப்படும். நடை , உடை பாவனைகளில் ஒரு கம்பீரமான தோற்றம் இருக்கும்.
குண அமைப்பு,
விருச்சிக ராசிகாரர்கள் நியாய அநியாயங்களை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்டவர்கள். தேளின் குணத்¬த் கொண்டவர் என்பதால் குறும்பு தனமும், விஷமத் தனமும் அதிகமிருக்கும். தனக்கு பிடிக்காதவர்களை அடிக்கடி கொட்டிக் கொண்டேயிருப்பார்கள். பார்ப்பதற்கு அப்பாவி போல இருந்தாலும் விளையாட்டு போட்டிகளில் முதலிடத்தை வகிப்பார்கள். பிடிவாத குணம் அதிகம் கொண்டவர் என்பதால் இவர்களை மாற்றுவது அரிதாகும். பிறருக்கு எதையும் விட்டு கொடுக்க மாட்டார்கள். இவர்களை யாரும் எளிதில் ஏமாற்றிவிட முடியாது. பிறர் தவறு செய்தால் வன்மையாக கண்டிக்கும் இவர்கள், தன்னுடைய குற்றங்குறைகளை மறந்து விடுவார்கள். துப்பறியும் தொழிலை திறமையாக செய்வார்கள். இவர்களிடத்தில் எளிதில் பேசி வெற்றி பெற்றுவிட முடியாது. முன்கோபமும், எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாகவும் இருப்பதால் இவர்களிடத்திலிருந்து ஒரு அடி விலகியே இருப்பது நல்லது. முன் பின் யோசிக்காமல் தூக்கி எறிந்து பேசி விடுவார்கள். இவர்கள் பேசுவது கஷ்டமாக இருந்தாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை மறுக்க முடியாது. எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடுவார்கள். என்னதான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சிகளில் விட்டு கொடுக்காமல் வெற்றி பெறுவார்கள். மற்றவர்களில் எதிர்ப்புகளுக்கு அஞ்சாது பிறர் போற்றும் வகையில் வெற்றி பெற்று முன்னேறுவார்கள்.
மணவாழ்க்கை,
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கை துணை வகையில் நிறைய அனுகூலங்களைப் பெறமுடியும் என்றாலும் திருமணத்திற்குப் பின் படிப்படியாக குறைந்த விடும். எது எப்படியிருந்தாலும் வாழ்க்கைத் துணையுடன் நல்ல வசதி, வாய்ப்புகளுடனும் புகழ், அந்தஸ்து, கௌரவம் போன்றவற்றுடன் சிறப்பாக வாழ்வார்கள். இவர்களது விருப்பு வெறுப்புகளை அனுசரித்து செல்லும் குணமுடைய வாழ்க்கைத் துணை அமையும், வரவுக்கேற்ற செலவுகள் செய்து குடும்பத்தை அக்கறையுடன் நடத்துவார்கள். எந்த சிரமங்களும் யாருக்கும் ஏற்படாதவாறு மண வாழ்க்கையானது மகிழ்ச்சிகரமானதாக அமையும். திருமணம் ஆகும் வரை பெற்றோரின் ஆதரவுடன் இருந்தாலும் திருமணத்திற்கு பின் தனித்து வாழ வேண்டிய நிலை உண்டாகும்.
பொருளாதார நிலை,
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு பண வசதியை பொறுத்தவரை தேவையான அளவுக்கு அமையும். இவர்களுக்கு பற்றாக்குறையோ, பணத் தடையோ ஏற்படுவதில்லை. மற்றவர்களுடைய பணமாவது இவர்கள் கையில் புழங்கிக் கொண்டேதான் இருக்கும். ஆடம்பர வசதிகளுக்கு ஆசைபடுபவர்கள் பூர்வீக சொத்துக்களை விற்றாவது தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள். இளமை பருவத்தில் கஷ்டப்பட்டாலும் நடு வயதில் நல்லபடியாக சம்பாதித்து வயோதிக வயதில் உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு சேமித்து வைப்பார்கள். சொந்த வீடு இருந்தாலும் அது பழைமையானதாக இருக்கும். அல்லது மற்றவர்களின் சொத்தாக இருக்கும். ஆனால் தக்க வயதில் வீடு, மனை, வண்டி, வாகன வசதிகளும், ஒரு சிலருக்கு பசு, கன்று போன்றவற்றையும் பெற்று ஆடம்பரமாக வாழ்வார்கள். அயல்நாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் அதிகமில்லை. அப்படியிருந்தாலும் அதனால் பண விரயங்கள் ஏற்படாது. பொருளாதார நிலையானது இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு இல்லாமல் தாராள தன வரவு உண்டாகும்.
புத்திர பாக்கியம்,
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு பெரும்பாலும் புத்திர பாக்கியத்தில் தெய்வ அருள் நிறைய இருக்கும். இவர்களுக்கு குறைந்த அளவிலேயே பிள்ளைகளாகும், பெண்களும் பிறந்தாலும் அவர்களால் இந்த ராசிக்கரர்களுக்கு நற்பலன்களும், சமுதாயத்தில் பெயர், புகழும் ஏற்படுமே தவிர ஒரு நாளும் கெட்ட பெயர் உண்டாகாது.
தொழில்
சிறு வயதிலிருந்தே விருச்சிக ராசிக்காரர்கள் சமூக நல சேவைகளில் ஈடுபட்டு தளராது மற்றவர்களுக்காக பாடுபடுவார்கள். எதிரிகள் தன்னை கண்டால் அஞ்சி நடுங்கும்படி கிடுக்கிபிடி போட்டு வைத்திருப்பார்கள். பிடித்ததை விடாத பிடிவாதகார்கள் என்பதால் எதையும் சாதித்தே தீருவார்கள், அரசாங்க வேலையோ, அரசியல் துறைகளிலோ பணபுரியும் வாய்ப்பு பெற்றிருப்பார்கள். வாசனை திரவியங்கள், தேன், கோதுமை போன்றவற்றையும் வாங்கி விநியோகம் செய்வார்கள். மருத்துவ அறிஞராகவும், இரசாயன துறையில் புகழ் பெற்றவர்களாகவும் விளங்குவார்கள். சுதந்திரமாக இருப்பதையே விரும்புபவர்கள் என்பதால் எல்லோரும் தனக்கு கீழ் படிந்து நடக்க வேண்டும் என நினைப்பார்கள்.
உணவு வகைகள்,
உணவு வகையில் அதிக கவனம் செலுத்தும் இவர்கள் சத்து பொருள் அடங்கிய, உடல் நலத்திற்கேற்ற பொருளையே சாப்பிடுவார்கள். சிகப்பு முள்ளங்கி, வெங்காயம், சிவப்பு கோஸ், காலி பிளவர், நாவல் பழம், முந்திரி பழம், கீரை வகைகள், பழ வகைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை,
எண் – 1,2,3,9,10,11
நிறம் – ஆழ்சிவப்பு, மஞ்சள்
கிழமை – செவ்வாய், வியாழன்
திசை -தெற்கு
கல் – பவளம்
தெய்வம் – முருகன்