வெற்றி தரும் வெள்ளைப் பிள்ளையார் வழிபாடு!

121

வெற்றி தரும் வெள்ளைப் பிள்ளையார் வழிபாடு!

சோழ மன்னன் ராஜராஜன் என்றதும் நம் அனைவரின் நினைவுக்கும் வருவது தஞ்சைப் பெரியகோயில். சிவபெருமானிடம் கொண்ட பக்தியின் காரணமாகத் தன் தேசமெங்கும் சிவாலயங்கள் பலவற்றைக் கட்டியவன் ராஜராஜன். சிவபக்தியின் காரணமாக அவனுக்கு, ’சிவபாத சேகரன்’ என்னும் பட்டப்பெயர் ஏற்பட்டது. காண்போர் வியக்கும் வண்ணம் கவின்மிகு கோயில்கள் பலவற்றை எழுப்பிய ராஜராஜ சோழனின் குலதெய்வம் எது தெரியுமா?

கும்பகோணத்துக்கு அருகே உள்ள ‘திருவலஞ்சுழி’ என்னும் அமைந்திருக்கும் கபர்தீஸ்வரர் ஆலயத்தில் அருள்புரியும் க்ஷேத்திர பாலர்தான் ராஜராஜ சோழனின் குலதெய்வம். இந்தத் தலம், தென்காவிரிக்கரைத் தலங்களில் 25-வது தலமாக விளங்குகிறது. ஏரண்ட மகரிஷி வழிபட்டதாகக் கருதப்படும் இந்த ஆலயத்தில் லிங்கத் திருமேனியாக ‘கபர்தீஸ்வரர்’ மூலவராக எழுந்தருளியுள்ளார். இவரே ‘திருவலஞ்சுழிநாதர்’ என்றும் போற்றப்படுகிறார்.

இங்கு அம்பிகை, ‘பெரிய நாயகி’ என்கிற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். கோஷ்டத்தில் பிட்சாடனர், நடராஜர், நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மன், அர்த்தநாரீஸ்வரர், துர்கை, சனீஸ்வரர் ஆகிய கடவுளர் காட்சிகொடுக்கின்றனர். மண்டபத்தில் லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவியர் தரிசனம் தந்து அருள்புரிகின்றனர்.

பிரகாரத்தில் பாலமுருகன், 32 லிங்கங்கள், நான்கு விநாயகர்கள், மகாவிஷ்ணு, துர்கை, பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வராகி, இந்திராணி, சாமுண்டி, விநாயகர், வலஞ்சுழி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், கஜலட்சுமி ஆகியோர் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். தேவாரப் பாடல்பெற்ற தலமாக விளங்கும் இந்த ஆலய வளாகத்துக்குள்ளேயே விநாயகருக்கும் க்ஷேத்திரபாலருக்கும் தனித்தனிக் கோயில்கள் காணப்படுகின்றன.

தேவர்கள் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடையும்போது, தடங்கல் ஏற்பட்டது. விநாயகரை வணங்காததால்தான் தடங்கல் உண்டானது என்பதை உணர்ந்த தேவர்கள், பாற்கடலைக் கடைந்ததால் ஏற்பட்ட நுரையைக் கொண்டே விநாயகர் திருவுருவம் செய்து வழிபட்டனர். விநாயகரின் ஆசியுடன் மீண்டும் பாற்கடலைக் கடைந்து அமிர்தம் பெற்றனர். பின்னர், அந்த விநாயகரை இந்தத் தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.

பாற்கடல் நுரையால் செய்யப்பட்ட விநாயகர் என்பதாலேயே அவர் வெள்ளை நிறத்தில் இருக்கிறார் என்றும், இவரை வழிபட்டால் காரியத் தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது. வெள்ளை விநாயகருக்கு அருகிலேயே க்ஷேத்திர பாலர் கோயில் அமைந்துள்ளது. பொதுவாக ‘க்ஷேத்திர பாலர்’ என்கிற பெயர் பைரவரையே குறிக்கும்.

சிவபெருமானின் 64 திருவடிவங்களுள் பைரவ மூர்த்தி மிகவும் விசேஷமானவர். பகைவரை அழித்து தம் பக்தர்களைக் காக்கும் ரூபமே பைரவ மூர்த்தி வடிவம். எல்லா ஆலயங்களிலும் வடதிசை நோக்கி அருள்புரியும் பைரவ மூர்த்தியே க்ஷேத்திர பாலராவார். சிவனின் ரிஷபம் வாகனமே பைரவருக்கு நாய் வாகனமாக மாற்றம் கொண்டது. ‘க்ஷேத்திர பாலர் பூஜையை விடச் சிறந்த செயல், இதுவரை இல்லை, இனி வரப்போவதுமில்லை என அறிக’ என்கின்றன ஆகமங்கள்.

இத்தகைய சிறப்புகளையுடைய க்ஷேத்திர பாலருக்குத் தனி ஆலயம் எடுத்து வழிபட்டாள் சோழ மாதேவி. இதுவே ராஜராஜனின் குலதெய்வக் கோயில் என்று கூறப்படுகிறது. ராஜராஜ சோழனின் பட்டத்து அரசியான உலகமாதேவி எனப்படும் தந்திசக்தி இந்த க்ஷேத்திரபாலர் கோயிலை எழுப்பியதாகக் கல்வெட்டுச் செய்தி கூறுகிறது.

ஆலயத்தின் வடக்குச் சுவரில் காணப்படும் ‘ஸ்ரீ ராஜ ராஜ தேவர் மகாதேவியார் தந்திசக்தி விடங்கியாரான ஸ்ரீஒலோகமாதேவியார் உய்யக்கொண்டார் வளநாட்டுப் பாம்பூர் நாட்டுத் திருக்குட மூக்கின்பால் திருவலஞ்சுழி நாம் எடுப்பித்த திருக்கற்றளிப் பிள்ளையார் க்ஷேத்திர பால தேவர்க்கு…’என்ற கல்வெட்டுச் செய்தி இதை உறுதிப்படுத்துகிறது. க்ஷேத்திரபாலரே ராஜராஜனின் குலதெய்வமாக வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது.

ராஜராஜன் தனக்கு வழங்கப்பட்ட பொன்னின் ஒரு பகுதியைக் கொண்டு க்ஷேத்திரபாலருக்கு ஆபரணங்கள் செய்வித்ததாகவும் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. ராஜராஜன் மறைவுக்குப் பின் சோழமாதேவி பொன்பூக்களைக் கொண்டு க்ஷேத்திரபாலரை வழிபட்ட செய்திகளும் கல்வெட்டில் காணக்கிடைக்கின்றன. இந்த ஆலயத்தில் காணப்படும், ‘அஷ்ட புஜ காளி’ திருவடிவம் சிறப்புமிக்கது. இவளை, ‘ஏகவீரி’ என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. அஷ்டபுஜ காளியை வணங்க எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறார்கள் பக்தர்கள்.

பராமரிப்பின்றிக் கிடந்த இந்த ஆலயம், பத்து ஆண்டுகளுக்கு முன்பு, பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் புனரமைக்கப்பட்டது. ராஜராஜ சோழன் வழிபட்ட திருவலஞ்சுழிநாதரை வணங்கி வேண்டிக்கொள்ளத் திருமணப்பேறு கிட்டும். வெள்ளை விநாயகரை வணங்க மன விருப்பங்கள் நிறைவேறும். க்ஷேத்திர பாலரையும் அஷ்டபுஜக் காளியையும் தரிசித்து வழிபடப் பகைவர்களால் உண்டாகும் தொல்லைகள் நீங்கி போட்டி பந்தயங்களில் வெற்றி கிட்டும் என்கின்றனர் பக்தர்கள்.

எப்படிச் செல்வது? கும்பகோணத்துக்கு அருகே, திருவலஞ்சுழி பேருந்து நிலையத்திலிருந்து சுவாமிமலை செல்லும் வழியில், இந்த ஆலயம் அமைந்துள்ளது.