வெள்ளி பௌர்ணமி: களத்திர தோஷம் நீங்க துர்க்கை வழிபாடு!
ஒவ்வொரு தமிழ் மாதங்களுக்கும் தனி முக்கியத்துவம் உண்டு. சித்திரை முதல் பங்குனி வரை பல்வேறு விசேஷங்கள் வருவதுண்டு. அதில், ஒரு சில மாதங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆடிப் போய் ஆவணி வந்தால் நன்மை கூடி வரும் என்பதைப் போல் ஆவணி மாதம் மிகச் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது.
ஆடியில் சில நிகழ்ச்சிகள் செய்ய மாட்டார்கள். ஆவணி தொடங்கியதும், உடனே அந்த நிகழ்ச்சியினை வைத்துவிடுவார்கள். ஆவணி மாதத்தில் சூரியன் சிம்ம வீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்ம வீடு பலமான வீடு. நமக்கு ஆத்ம பலத்தை தருபவர் சூரியனே. எனவே தான், ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியவை நிகழ்ந்ததாக சொல்வர்.
வெள்ளி பௌர்ணமி:
வெள்ளிக்கிழமை வரும் பௌர்ணமி நாள் சுக்கிர பகவானுக்கு உகந்த நாள். இந்த நாளில் களத்திர தோஷம் இருப்பவர்கள், திருமணத் தடை உள்ளவர்களும், சுக்கிர திசை நடப்பவர்களும் துர்க்கை அம்மனை வழிபட வேண்டும். அதோடு, ரிஷபம், துலாம் ராசிக்காரர்களும், பரணி, பூரம், பூராடம் நட்சத்திரகாரர்களும் மற்றும் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் துர்க்கை அம்மனை வழிபடலாம்.
அப்போது வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி கதம்ப மாலை அணிவித்து மல்லிகைப் பூ கொண்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இதன் மூலமாக பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவார்கள். பாதியில் நின்றிருந்த வீடு கட்டும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு சிறப்பாக நடந்து முடியும். வாழ்வில் சகல வளங்களும் பெறுவார்கள் என்பது ஐதீகம்.
வியாழன் பௌர்ணமி:
வியாழக்கிழமை வரும் பௌர்ணமி நாளில் குரு பகவானை வழிபட்டால் தன்னம்பிக்கை அதிகரிப்பதோடு, அறிவாற்றலும் பெருகும். இந்த நாளில் குரு திசை நடப்பவர்கள், தனுசு மற்றும் மீன ராசிக்காரர்கள் மட்டுமல்லாது புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரகாரர்கள் துர்க்கை அம்மனை வழிபட வேண்டும். அப்போது துர்க்கை அம்மனுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றுவதோடு மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை செய்தால் சகல வளங்களும் பெறலாம். மேலும், பொன் பொருள் சேர்க்கை உண்டு. மதிப்பும் மரியாதை உயரும். ராசி நட்சத்திரம் தெரியாதவர்களும், 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் இந்த பரிகாரத்தை மேற்கொள்ளலாம்.
புதன் பௌர்ணமி:
புதன் கிழமை அன்று வரும் பௌர்ணமியில் புதன் திசை நடப்பவர்கள் புதன் பகவான் வழிபாடு செய்தால் ஏராளமான நன்மைகள் நடக்கும். அதோடு மிதுனம், கன்னி ராசிக்காரர்களும், ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரக்காரர்களும் சிறந்த அறிவாற்றல் மற்றும் ஞாபகத்திறன் பெறவும், உறவுகள் பலப்படவும் துர்க்கை அம்மனை வழிபட வேண்டும். துர்க்கை அம்மனை வழிபடும் போது பச்சை நிறத்தில் வஸ்திரம் சாற்றி முல்லைப் பூ, மல்லிகைப் பூ, மரிக்கொழுந்து கொண்டு அர்ச்சனை செய்து வர சகல ஐஸ்வரியங்களும் கிட்டும். ஒருவேளை ராசி, நட்சத்திரம் தெரியாதவர்களும், 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் இந்த பரிகாரத்தை மேற்கொள்ளலாம்.
செவ்வாய் – பௌர்ணமி:
செவ்வாய்க்கிழமை வரும் பௌவுர்ணமி நாள் முருகப் பெருமானுக்கும், அங்காரகனுக்கும் உகந்த தினம். இந்த நாளில் மிருகசீரிஷம், அவிட்டம், சித்திரை நட்சத்திரக்காரர்கள், மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள், செவ்வாய் தோஷம், செவ்வாய் திசை நடப்பவர்கள் என்று அனைவரும் துர்க்கை அம்மனை வழிபட வேண்டும். அம்மனை வழிபடும் போது சிகப்பு வர்ண வஸ்திரம் சாற்றி, செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். இதன் மூலமாக அத்தனை எதிர்ப்புகளும் நீங்கும். செல்வ வளம் பெருகும். குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும் என்பது ஐதீகம். நட்சத்திரம் மற்றும் ராசி தெரியாதவர்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த பரிகாரத்தை மேற்கொள்ளலாம்.
திங்கள் – பௌர்ணமி:
திங்கள் கிழமையில் பௌர்ணமி வந்தால் சந்திர திசை நடப்பவர்கள், கடக ராசிக்காரர்கள், ரோகிணி, அஸ்தம் நட்சத்திக்காரர்கள் ஆகியோர் துர்க்கை அம்மனுக்கு வெள்ளை நிறம் அல்லது ஆரஞ்சு நிறத்தில் வஸ்திரம் சாற்றி வழிபட்டு வந்தால் சங்கடங்கள் தீரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு வந்து தடை ஏற்பட்டுக் கொண்டிருந்தால் தடை நீங்கும்.
மேலும், வாழ்க்கையில் செல்வ செழிப்பும் உண்டாகும் என்பது ஐதீகம். ஒருவேளை ராசி நட்சத்திரம் தெரியாவர்களும் 2, 11, 20, 19 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஞாயிறு பௌர்ணமி:
ஞாயிற்றுக்கிழமையில் பௌர்ணமி வந்தால் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமையில் பௌர்ணமி வந்தால் அது சூரியனுக்கு உகந்ததாகும். சூரிய தோஷம் உள்ளவர்களும், சூரியனால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க நினைப்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.
மேலும், உத்திராடம், உத்திரம், கிருத்திகை நட்சத்திரக்காரர்கள், சிம்ம ராசிக்காரர்கள் ஆகியோரும் இந்த பரிகாரத்தை மேற்கொள்ளலாம். அது என்னவென்றால், துர்க்கை அம்மனுக்கு சிகப்பு நிற வஸ்திரம் சாற்றி செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். இதன் மூலம் தீராத நோய்கள் தீரும், வாழ்வில் யோகம் உண்டாகும். அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்பது ஐதீகம். ஒருவேளை ராசி, நட்சத்திரம் தெரியாவர்களும் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் கூட இந்த பரிகாரத்தை செய்து வர பலன்கள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.