வேண்டுதலை நிவர்த்தி செய்யும் வேங்கடவன்!

71

வேண்டுதலை நிவர்த்தி செய்யும் வேங்கடவன்!

ஆவணி முடிந்து வரும் மாதம் மாதவனின் (புரட்டாசி) மாதம், பெருமாளின் பெருமை பாடும் புண்ணிய மாதம். புரட்டாசி மாதம் புதன் கிரகத்திற்கு உரியதாகப் போற்றப்படுகின்றது. புதன் கிரகம் கன்னி ராசியில் நுழைவதும், உச்சம் பெறுவதும் புரட்டாசியில்தான் நடைபெறும். புதனின் அதி தேவதை மகா விஷ்ணு. இதனால் புரட்டாசி மாத விரதமும், வழிபாடும் மகாவிஷ்ணுவின் அருளைப் பெற்று தரும் என்பதால் கலைகளில் தேர்வுகளில் தேர்ச்சியைப் பெற்றுத் தரும் என்பதும் நம்பிக்கை. திருச்சியின் புகழ்மிக்க வைணவத் தலங்களில் குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் மிகவும் முக்கியமானது.

கோயிலின் வரலாறு:

இந்தக் கோயில் வரலாறு குறித்து பவிஷ்ய புராணத்தில் கூறப்பட்டுள்ளது. திருப்பைஞ்ஞீலி வனத்தில் எழுந்தருளிய தால்பிய மகரிஷிக்கு சீடரானார் குணசீல மகரிஷி. இவர்கள் அனைவரும் வட தேசங்களுக்கு தரிசனம் செய்து திருப்பைஞ்ஞீலி திரும்பும் வழியில் திருமலை திருப்பதி திருவேங்கடமுடையானையும் தரிசித்தனர். அப்போது திருவேங்கடமுடையானின் திவ்ய தரிசனத்தில் மனதை பறிகொடுத்த குணசீலர் அவரை விட்டுப்பிரிய மனமின்றி வருத்தத்தோடு குருவோடு திருப்பைஞ்ஞீலி திரும்பினார்.

ஊர் திரும்பியும் வேங்கடவனை மறக்காத குணசீலர் காவிரி நீராடி, வேங்கட வாசனை நினைத்து கடும் தவம் செய்தார். காலம் உருண்டோட கடும் மழையிலும், வெயிலிலும் தவம் தொடர்ந்தது. குணசீலரின் இடைவிடாத தவத்துக்கு பெருமான் மகிழ்ந்தார். காவிரியின் கரையில் குணசீல மஹரிஷியின் ஆசிரமத்திற்கு தேவியர் சூழ எழுந்தருளினார். கோடி சூர்யப் பிரகாசத்துடன் கருடாரூடராக எழுந்தருளிய வேங்கடவாசனின் திருக்காட்சி கண்டு வணங்கினார் குணசீலர்.

திருக்காட்சி தந்த பெருமாள்:

வேங்கடவனின் திருக்காட்சி கண்ட குணசீல மகரிஷி அப்போது வரமாக மத்திய திருப்பதி எனும் பெயரில் எப்போதும் பெருமாள், பிரசன்ன வேங்கடேசராக அங்கேயே எழுந்தருள வேண்டும் என்று விண்ணப்பித்துக் கொண்டார். வேண்டுவோரின் விண்ணப்பங்களை நிறைவேற்றும் வேங்கடவன் மகரிஷியின் வேண்டுதலை ஏற்று, கலியுக வரதனாக ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் என்ற திருநாமம் தாங்கி பஞ்சலோக விக்ரஹ வடிவினராக சங்கு, சக்கரம், வரத ஹஸ்தம், கடிக ஹஸ்தம் கொண்டவராக எழுந்தருளினார்

சிறப்பினும் சிறப்பாக கையில் செங்கோல் தாங்கி அரச வேங்கடநாதனாக இங்கு அருள்கிறார். திருமார்பில் திருமகளைத் தாங்கி நின்று, அர்ச்சாவதாரத் திருக்கோலத்தில் எழுந்தருளி இன்றும் என்றும் பக்தர்கள் மனம் கனிய அருள் பாலிக்கிறார்.

பெருமாளின் சிறப்பம்சங்கள்:

குணசீல மஹரிஷிக்கு என்று பெருமாள் எழுந்தருளிய தலம் ‘குணசீலம்’ என்றானது. மூலவர் ‘ஶ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி’ என்ற திருநாமத்துடன் அருள் பாலிக்கிறாாா். உற்சவப் பெருமான் தேவியர் இருவருடன் ‘ஶ்ரீதேவி பூமிதேவி சமேத ஶ்ரீனிவாசப் பெருமானாக திருவருள் புரிகிறார்.

குணசீல மகரிஷிக்குப் பிறகு முற்கால சோழ மன்னன் ஞானவர்மன் இந்த ஆலயத்தத சீர்படுத்தியுள்ளான் என்கிறது வரலாறு. கையில் ஏந்திய செங்கோல் வலிமையால் தன்னுடைய பக்தர்களின் தீராத வினைகளை எல்லாம் தீர்க்கும் வைத்தியநாதராகவும் பெருமாள் இங்கு விளங்குகிறார். ஆம், மனநலம் காக்கும் குணநல மூர்த்தியாக பெருமாள் இங்கே வீற்றிருக்கிறார். மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்றும் நலம் தரும் புனித தலமாக குணசீலம் விளங்குகிறது.

குணநலமும், மனநலமும் காக்கும்:

முந்தைய வினையாலோ, தீர்க்க முடியாத பிரச்சனைகளாலோ மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை இங்குள்ள பெருமாள் பூரணமாக குணப்படுத்துகிறார் என்பது நம்பிக்கை. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு 48 நாட்கள் தங்கி காவிரியில் நீராடி, குணசீல ஸ்ரீ பிரசன்ன வேங்கடாஜலபதியை வழிபட்டு பூரண நலம் பெறுகிறார்கள்.

உச்சிகால பூஜை, அர்த்தஜாம பூஜை வேளைகளில பெறப்படும் பெருமாளின் திருவடிப் புனித தீர்த்தத்தை பாதிக்கப்பட்டவர்களின் முகத்திலும் தெளிக்கிறார்கள். இதனால், சகல மனநலக் குறைகளும் நீங்கி அவர்கள் குணமாகிறார்கள் என்று குணமடைந்தவர்கள் சொல்வதாக கூறப்படுகிறது. அதே போன்று ஒரு யந்திரத்தில் பெருமாள், மந்திரம் எழுதி அதை பெருமாள் பாதத்தில் வைத்து வணங்கிய பிறகு அதைத் தாயத்தாக அணிந்து கொள்கிறார்கள். இதனால், எல்லா விதமான மன நோய்களும் நிவர்த்தியாகிவிடும் என்பது நம்பிக்கை.

வேண்டுதலை நிவர்த்தி செய்யும் வேங்கடவன்:

திருப்பதிக்குச் செல்ல முடியாத திருச்சி, அதன் சுற்றுவட்டார மக்கள் இங்கு வந்து பெருமாளை தரிசித்து புண்ணியமும் புது வாழ்வும் பெறுகிறார்கள். அங்கப் பிரதட்சணம், அடிப் பிரதட்சணம், முடி காணிக்கை செலுத்துதல், திருமஞ்சனம், சந்தனக் காப்பு, புஷ்பாங்கி சேவை, கருட சேவை உற்சவம் என இந்த கோயில் எப்போதும் பக்தர்களின் வருகையாலும், விழாக்களாலும் சிறப்புற்று விளங்கி வருகிறது.

புரட்டாசி பிரம்மோற்ச விழா இங்கு மிகவும் விசேஷம். பொதுவாக சனிக்கிழமை பெருமாளுக்கு விசேஷ நாள் என்பார்கள். இங்கு புதன்கிழமை விசேஷமாக இருந்து வருகிறது. ஸ்ரீ தேவி – பூதேவி சமேதராக சாளக்கிராம மாலை சூடி, தங்கச் செங்கோலுடன் காட்சி தரும் இந்த வேங்கடவனை தரிசித்து வழிபட சுக்கிர பலம் கூடும் என்பதும் ஐதீகம்.

இப்படி மனநலமும், உடல் நலமும், சௌபாக்கிய நலமும் ஒருங்கே அளித்து நம்மை எல்லாம் வாழ்விக்கும் மத்திய திருப்பதி ஸ்ரீ பிரசன்ன வேங்கடேச பெருமாளை எல்லோரும் வணங்கி வாழ்வில் உயர்வைப் பெறுவோம். திருக்கோயில் அமைந்துள்ள இடம் – திருச்சியிலிருந்து நாமக்கல் செல்லும் வழியில் சுமார் 28 கிமீ தொலைவில் குணசீலம் அமைந்துள்ளது.