வேலை கிடைக்க நாகேஸ்வரர் வழிபாடு!

68

வேலை கிடைக்க நாகேஸ்வரர் வழிபாடு!

நாமக்கல் மாவட்டம் பெரியமணலி என்ற ஊரில் உள்ள கோயில் நாகேஸ்வரர் திருக்கோயில். இந்தக் கோயிலில் நாகேஸ்வரர் மூலவராக காட்சி தருகிறார். சிவகாமி அம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை, மகா சிவராத்திரி மற்றும் பிரதோஷம் ஆகிய நாட்களில் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

நாகம் நேரில் வந்து மூலவரை வழிபட்டதால் இத்தல இறைவன் நாகேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இங்கு துர்க்கை, தட்சிணாமூர்த்தி, பிரம்மா, கால பைரவர், கல்யாண சுப்ரமணியர், சூரிய – சந்திரர்கள் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கின்றனர்.

இந்தக் கோயிலுக்கு வந்து சிவனாரை வழிபட நாக தோஷம் உள்பட அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதே போன்று திருமணத் தடை நீங்க, கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ இந்தக் கோயிலில் வழிபாடு செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி தங்களது நிவர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை என விழாக்கள் விமரிசையாக நடைபெறும் இந்தக் கோயிலில் மாசி மாதத்தின் மகா சிவராத்திரி சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது. அன்னாபிஷேக விழாவின் போது தருகிற பிரசாதத்தை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறும். மகாசிவராத்திரி நாளின் போது இரவில் 4 கால பூஜைகள் விமரிசையாக நடைபெறும்.

வேலை கிடைக்காமல் தவிப்பவர்கள், குடும்பத்தில் கருத்து வேறுபாடு உள்ளவர்கள், தொழிலில் பின்னடைவு இருப்பவர்கள் இந்த நாளின் போது சிவபெருமானை வழிபட எல்லா நன்மைகளும் கிடைக்கப் பெறுவார்கள் என்பது ஐதீகம். மகாசிவராத்திரி பூஜையின் போது பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர நாகேஸ்வரரை தரிசிக்க நன்மை உண்டாகும்.

கிட்டத்தட்ட பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்கு பாப்பாத்தி என்னும் ஒரு பெண்மணி கணவரை இழந்து தனியாக வாழ்ந்து வந்தாள். சிவன் மீது அதிக பக்தி கொண்டவள். தினந்தோறும் கோயிலுக்கு சென்று சிவதரிசனம் செய்வது அவளது வழக்கம். இவளது பக்தியில் மகிழ்ந்த சிவபெருமான், ஒருநாள் அவளுக்குத் காட்சி தந்தருளினார் என்கிறது தல வரலாறு.

தனது பக்தைக்கு காட்சி தந்த நாகம் ஒன்று சன்னதியின் லிங்கத் திருமேனியில் இருந்து வெளியே வந்து பிறகு மீண்டும் சன்னதிக்கு சென்று லிங்கத் திருமேனியை சுற்றியபடி காட்சி தந்தது. ஆகையால், இந்த தலத்து இறைவனுக்கு ஸ்ரீ நாகேஸ்வரர் எனும் திருநாமம் உண்டானது என்று பக்தர்கள் கூறுகின்றனர்.