வேலை வாய்ப்பு கிடைக்க வழிபட வேண்டிய கோயில்!

102

வேலை வாய்ப்பு கிடைக்க வழிபட வேண்டிய கோயில்!

தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் பகுதியில் உள்ளது மாரியம்மன் கோயில். இந்தக் கோயிலில் மூலவராக மாரியம்மன் (முத்துமாரி), (துர்க்கை) காட்சி தருகிறார். இந்தக் கோயிலில் அம்மன் புற்று வடிவில் சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். சோழர்களால் கட்டப்பட்ட இந்தக் கோயிலில் சதாசிவ பிரம்மேந்திரரால் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

பொதுவான அம்சம்:

பசுமையான வயல் வெளிகளுக்கு மத்தியில் இந்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரின் ஆட்சிக் காலத்தில் மகா மண்டபம், நர்த்தன மண்டபம், கோபுரம் மற்றும் 2ஆவது பெரிய சுற்றுச்சுவர் கட்டப்பட்டு திருப்பணி செய்யப்பட்டது.

மராட்டிய மன்னர் சத்திரபதி சிவாஜி இந்தக் கோயிலுக்கு 3ஆவது திருச்சுற்று கட்டிக் கொடுத்துள்ளார். இதே போன்று ராணி காமாட்சியம்பா பாயி சாகேப் உணவுக் கூடம் மற்றும் வெளிமண்டபம் கட்டிக் கொடுத்துள்ளார். புற்று வடிவில் சுயம்புவாக இருந்த அம்மனுக்கு சதாசிவ பிரம்மேந்திர சுவாமி ஸ்ரீ சக்கரம் கொடுத்து மாரியம்மன்னாக பிரதிஷ்டை செய்துள்ளார்.

கோயில் பிரகாரத்தில் விநாயகர், முருகன், காத்தவராயன், மதுரை வீரன், லாட சன்னதி, அய்யனார், பேச்சியம்மன் ஆகியோரது சன்னதிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நடைபெறும் முத்துப்பல்லக்கு திருவிழா தான் இந்தக் கோயிலின் பெரிய திருவிழா. இந்த முத்துப்பல்லக்கின் நீளம் 35 அடி, அகலம் 12 அடி, உயரம் 55 அடி. இதுதான் பக்தர்களை அதிகளவில் ஈர்க்கிறது. இந்த முத்துப்பல்லக்கினை உருவாக்கிட 7 நாட்கள் ஆகிறது. பூச்சரங்கள் மற்றும் பூமாலைகள் கொண்டு முத்துப்பல்லக்கு அலங்காரம் செய்யப்படுகிறது.

பிரார்த்தனை:

அம்மை நோய் உள்ளவர்கள் இத்தலத்தில் உள்ள மாரியம்மனை வழிபட்டு சென்றால் ஒரு சில நாட்களிலேயே அம்மை இறங்கிவிடும் என்பது ஐதீகம். இது தவிர தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வயிற்று வலி பிரச்சனை உள்ளவர்கள், உடம்பில் சொறி, சிரங்கு உள்ளவர்கள், உடம்பில் கட்டி பிரச்சனை உள்ளவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவர்களால் கூட குணப்படுத்த முடியாதவர்கள் என்று அனைவரும் இத்தலத்தில் உள்ள மாரியம்மனை வழிபட்டு சென்றால் அனைத்து நோய்களும் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மேலும், வேலை வாய்ப்பு, சம்பள உயர்வு, பணியிடம் மாற்றம், தொழில் விருத்தி ஆகியவற்றிற்காகவும் இந்தக் கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர்.

நிவர்த்திக்கடன்:

அம்மை போட்டவர்கள், அம்மை இறங்கியவுடன் இந்தக் கோயிலுக்கு வந்து அம்மனுக்கு மாவிளக்கு போடுகின்றனர்.

கண் நோயால் பாதிக்கப்பட்டு அது குணமடைந்தவர்கள் கண்ணில் மாவிளக்கு போடுகின்றனர்.

வயிற்று வலி பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் வயிற்றில் மாவிளக்கு போடுகின்றனர்.

உடம்பில் கட்டிகள் வந்து குணமடைந்தவர்கள் வெல்ல குளத்தில் வெல்லம் வாங்கி போடுகிறார்கள். மேலும், மாடு, ஆடு ஆகியவற்றை காணிக்கையாக தருகின்றனர்.

கணவருக்காக வேண்டிக் கொண்ட பெண்கள் திருமாங்கல்யத்தை நேர்த்திக்கடனாக சாற்றுகின்றனர்.

இது தவிர, முடிக்காணிக்கை செலுத்துதல், பால் குடம் எடுத்தல், பால் காவடி, அக்னி சட்டி எடுத்தல் ஆகியவற்றையும் நிவர்த்திக்கடனாக பக்தர்கள் செலுத்துகின்றனர்.

திருமணம் வேண்டுவோர் அம்மனுக்கு நிலைமாலை சாற்றி அம்மனை வழிபாடு செய்கின்றனர்.

தல பெருமை:

மூலஸ்தானத்தில் உள்ள அம்மன் புற்று மண்ணால் ஆனது. மூலஸ்தானத்தில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் ஆனது என்பதால், அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. மாறாக தைலக்காப்பு சாற்றப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அம்பாளுக்கு ஒரு மண்டலம் வரையில் தைலக் காப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. அந்த ஒரு மண்டலம் மட்டும் அம்பாளை வெண் திரையில் வரைந்து ஆவாகனம் செய்து அதற்குதான் அர்ச்சனை ஆராதனைகள் செய்யப்படுகிறது. அந்த 48 நாட்களும் அம்பாளுக்கு சாம்பிராணி தைலம், ஜவ்வாது, புணுகு, அரகஜா ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

அம்பாளுக்கு தைலாபிஷேகம் செய்யப்படும் போது அவளுக்கு உக்ரம் அதிகமாக இருக்கும். இதனை தவிர்ப்பதற்காக இளநீர், தயிர் பள்ளயம் வைத்து நைவேத்தியம் படைக்கப்படுகிறது.

அம்மை நோய் – தண்ணீர் தொட்டி நிரப்புதல்:

அம்மன் சன்னதிக்கு அருகில் உள்ள தொட்டி உள் தொட்டி என்றும், பிரகாரத்தை சுற்றியுள்ள தொட்டி வெளித்தொட்டி என்றும் அழைக்கப்படுகிறது. அம்மை போட்டவர்கள், இந்த இரு தொட்டிகளிலும் குடம் குடமாக தண்ணீர் ஊற்றி அம்மனின் உஷ்ணத்தை தணிக்கின்றனர்.

முத்துமாரி:

ஒவ்வொரு ஆண்டும் கோடை நாட்களில் அம்மனுக்கு முகம் மற்றும் சிரசம் முழுவதும் முத்து முத்தாக வியர்வை வியர்த்து தானாக மாறிவிடும். இதன் காரணமாக அம்மனை முத்துமாரி என்றும் அழைக்கின்றனர்.

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வைசூரி வார்க்கும் சமயத்தில் அம்மனுக்கு பிரார்த்தனை செய்யப்படும் போது இரு தண்ணீர் தொட்டிகளிலும் தண்ணீர் நிரப்பினால் விரைவில் எந்தவித சிரமமின்றி குணமடைந்து வருவதை காணலாம். கோயில் உள் பிரகாரத்தில் எழுந்தருளியிருக்கும் இராமலிங்க சுவாமிகள் பைரவ உபாசராக இருந்து அன்னதானம் செய்ததுடன் அனைவருக்கு திருநீறு பிரசாதம் வழங்கி அவர்களது தீராத நோய்களை குணப்படுத்துகிறார்.

இயற்கை வடிவிலான வாகனங்கள், பறவைகள், விலங்குகள், ஊர்வன வகை வாகனங்கள் என்று பல வகையான வாகனங்கள் உண்டு. இந்த வாகனங்கள் அல்லாமல் பல்லக்கு என்ற வாகனமும் இறைவனுக்கும், இறைவிக்கும் காலங்காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் தஞ்சாவூர் அரண்மனையைச் சேர்ந்த 88 கோயில்களில் ஒன்று. தமிழகத்தில் அதிகளவில் முத்துப்பல்லக்கு விழா நடைபெறுவது இந்த புன்னைநல்லூர் மாரியம்மனின் கோயிலில் மட்டும் தான். அதுவும் கடந்த 30 ஆண்டுகளாக அம்மனுக்கு இந்த முத்துப்பல்லக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தல வரலாறு:

கீர்த்தி சோழன் என்ற அரசன் இந்த மாரியம்மனின் அருளால் அழகான ஆண் மகனை பெற்றான். அவனுக்கு தேவ சோழன் என்று பெயரிட்டான். இந்த தேவசோழன் பல ஆண்டுகள் சோழ சாம்ராஜ்ஜியத்தை ஆண்டு வந்தான். தஞ்சையை ஆண்ட வெங்கோ மகாராஜா செய்யுங்கால் கண்ணபுரம் என்ற சமயபுரத்தில் தங்கி வழிபாடு செய்தார். அப்போது வெங்கோ மகாராஜாவின் கனவில் வந்த அம்பிகை, தஞ்சைக்கு கிழக்கில் 7 கிமீ தொலைவில் உள்ள புன்னகை காட்டில் புற்று உருவாய் உள்ள தன்னை வணங்கும்படி கூறினாள்.

இதையடுத்து தஞ்சைக்கு வந்த புன்னைக் காட்டுக்கு பாதை அமைத்து அம்மன் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து அம்மனுக்கு சிறியதாக கூரை அமைத்து புன்னைநல்லூர் என்று அந்த பகுதிக்கு பெயர் வைத்து, அந்த பெயரிலேயே அம்மனையும் அழைத்தார். அப்படி உருவானது தான் புன்னைநல்லூர் மாரியம்மன்.

கடந்த 1728 – 1735 ஆம் ஆண்டுகளில் தஞ்சையை ஆண்ட துளசி ராஜாவின் புதல்வி வைசூரியால் கண் பாதிக்கப்பட்டாள். இதையடுத்து, தனது கண் நோய் குணமாக இந்த கோயிலில் உள்ள அம்மனை வழிபட்டு கண் நோய் குணமாக்கப் பெற்றாள். அம்மனின் அருளினால், தனது மகளின் கண் நோய் குணமானதைத் தொடர்ந்து அவளுக்கு சிறிய அளவில் கோயில் கட்டினாள். நாளடையில் இந்தக் கோயிலானது பெரிய கோயிலாக மாறியது.

பழங்காலத்தில் தஞ்சையை ஆண்ட சோழ மன்னர்கள் தஞ்சையைச் சுற்றிலும் எட்டு திக்குகளிலும் அஷ்ட சக்திகளை காவல் தெய்வங்களாகவே அமைத்தனர். அப்படி தஞ்சைக்கு கிழக்குப் பகுதியில் அமைக்கப்பட்ட காவல் தெய்வம் தான் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில். இந்தக் கோயிலைத் தொடர்ந்து சிவபெருமானையும் வழிபட வேண்டும் என்ற நோக்கத்தில் வெங்கோஜி மகாராஜா இந்தக் கோயில் இருக்கும் இடத்திலிருந்து சற்று தொலைவில் கைலாசநாதர் கோயிலை கட்டினார்.