வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல் !

287

வைணவக் கோயில்களில் நடைபெறும் ஒருவகை நடனம் அரையர் சேவை. இது எல்லா வைணவக் கோயில்களிலும் இருந்திருக்க வேண்டும்.

ஆனால், தற்போது ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆழ்வார்திருநகரி ஆகிய ஊர்களில் மட்டும் நடைபெறுகிறது. இருப்பினும், இது இன்று அருகி வருகிறது.

நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்களை இசையோடு பாடி, அபிநயம் பிடித்து விளக்கம் சொல்லும் ஆட்டம் இது. இதனை இயல், இசை, நாடகம் ஆகியன கலந்த ஆட்டம் என்று கூறுவர்.

நாலாயிர திவ்யப் பிரபந்த ஏடுகளை மிகுந்த சிரமத்தின் பேரில் கண்டெடுத்தவர் நாதமுனிகள் என்ற வைணவப் பெரியார். திருமங்கை ஆழ்வார் காலத்திற்குப் பிறகு நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்கள் வைணவத் தலங்களில் இசைப்பது நின்றுவிட்டது.
பின்னர் அந்த ஏடுகள் காணாமல் போய்விட்டன

. இதனைக் கண்டெடுத்தவர் நாதமுனிகள். அவர் ஒரு இசை வல்லுனர். அப்பாடல்களுக்கு பண், தாளம் ஆகியன அமைத்து வகைப்படுத்தியவர். அவரது சகோதரியின் மக்களான கீழையகத்தாழ்வாள், மேலையகத்தாழ்வாள் ஆகியோருக்கு இவற்றைக் கற்றுக் கொடுத்தார்.

இவர்கள் பிரபந்தப் பாடல்களை பெருமாள் வீதிவலம் வரும்பொழுது பாடினர். இவர்களுக்குப் பின் ஆளவந்தாரின் மகனான “திருவரங்கத்துப் பெருமாள் அரையர்’ என்பவர் இத்துடன் நடனத்தையும் சேர்த்து இதனை வளர்த்தார். இந்தப் பரம்பரையினர் அரையர் எனப்படுகின்றனர்.

அரையர்கள் ஆடுவதற்கென்று பெரிய மேடை கிடையாது. அலங்கார ஆடைகள் கிடையா. பெருமாள் முன்பு, வெறும் தரையில், குறைந்த வெளிச்சத்தில் பிரபந்தப் பாடல்களைப் பாடி நடிப்பது இவர்களது வேலை.

இவர்கள் அணிந்து கொள்ளும் குல்லாய் சற்று வினோதமானது. இது வெல்வெட் துணியால் ஆனது. ஓரடி உயரமுள்ளது. அதன் மேல் பகுதியில் கலச வடிவிலான பித்தளை குமிழ்கள் இருக்கும். அவை காதுகளை மறைக்கும் வண்ணம், குல்லாவின் இருபுறங்கள் தொங்கிக் கொண்டிருக்கும்.

முன்புறம் தென்கலை திருமண் காப்பும், சங்கு, சக்கரமும் இருக்கும். இதனை அரையர்கள் மட்டுமே அணிவர்.
இந்த அரையர் ஆட்டத்தினை ஆண்கள் மட்டுமே செய்வர். ஆண் வாரிசு இல்லையென்றால் சுவீகாரம் எடுத்துக் கொள்ளலாம். இக் கலைக்குரிய பயிற்சிக் காலம் பன்னிரெண்டு ஆண்டுகள். தந்தைதான் இங்கு குரு.

நாலாயிரம் பாடல்களை மனப்பாடம் செய்வது ஒரு பயிற்சி. சிறு வெண்கலத் தாளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் ஒரு தாளம் நம்மாழ்வார் என்றும், மற்றொரு தாளம் நாதமுனிகள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தாள ஓசையுடன்தான் பாசுரங்கள் பாடப்படுகின்றன.

வைணவக் கோயில்கள் (108 திருப்பதிகளில் மட்டும்) மார்கழி மாதம் சிறப்பான உற்சவம் உண்டு. இதற்கு பகல் பத்து, இராப் பத்து என்று பெயர்.
மார்கழி மாதம் வளர்பிறை முதல் நாள் தொடங்கி பத்து நாள் இராப் பத்து நடைபெறுகிறது. இந்த நாள்களில் அரையர் ஆட்டம் இடம் பெறுகிறது.

பெருமாள் முன்பு அரையர்கள் தாளத்துடன் பிரபந்தப் பாடல்களைப் பாடி அபிநயம் பிடிப்பர். பெருமாளின் அனுமதி பெற்ற பின்னரே இது தொடங்கும்.
இந்த அனுமதிக்கு அருளப்பாடு என்று பெயர். இது கிடைத்தவுடன் அரையர்கள் “நாயிந்தே’ என்று கூறி ஆட்டத்தினைத் தொடங்குவர்.

இந்த ஆட்டம் மூன்று பகுதிகளாக உள்ளது. முதலில் திருமாலின் புகழ் பாடுவது. இதற்கு “கொண்டாட்டம்’ என்று பெயர். இதன் பிறகு அன்றைக்குரிய பாசுரங்களைப் பாடி அபிநயம் பிடிக்கும் நிகழ்ச்சி இடம்பெறுகிறது. இதன் பிறகு விளக்கம் சொல்லும் (வியாக்கியானம்) நிகழ்ச்சி இடம் பெறுகிறது.

ஒரு அரையர் வியாக்கியானத்தினைக் கூற, மற்றொருவர் ஏட்டைக் கையில் வைத்துக் கொண்டு அதனைச் சரிபார்ப்பார். இந்த விளக்கமும் இசை வடிவத்திலேயே இருக்கும். இது முடிந்ததும் மறுபடியும் “கொண்டாட்டம்’ சொல்லப்படுகிறது.

இந்த முறைப்படி பிரபந்தப் பாடல்கள் நாள்தோறும் அபிநயம் பிடிக்கப்படும். இது முத்தமிழும் கலந்த நிகழ்ச்சி.
இதில் மற்றொரு விசேடமும் உள்ளது. ஆழ்வார் பாடல்களில் – குறிப்பாக திருங்கையாழ்வார், நம்மாழ்வார் பாடல்களில் – பல அகத்துறை சார்ந்தவை. இதில் நாயக – நாயகி பாவம் அதிகம்

இதில் ஒன்பதாம் நாள் அரையர் ஆட்டத்தில் “முத்துக்குறி’ என்ற நிகழ்ச்சி இடம் பெறுகிறது.
தலைவியின் தாய், தன் மகளுக்கு மன நோய் உள்ளது என்று கண்டு, அதனைப் போக்க குறி பார்க்கும் ஒரு கட்டுவிச்சியை (குறத்தி) அழைத்து குறி பார்க்கச் சொல்
கிறாள்.

அவள் சோழிகளுக்குப் பதிலாக முத்துக்களை வைத்துக் குறி பார்க்கிறாள். இதற்கு “முத்துக்குறி’ என்று பெயர்.

இந்த நிகழ்ச்சியில் ஒரே அரையர் தலைவி, தாய், கட்டுவிச்சி என்ற மூன்று நிலைகளையும் அபிநயம் பிடித்துக் காட்டுவார். இதற்கு திருநெடுந்தாண்டகத்தில் உள்ள “பட்டுடுக்கும்’ என்ற பாசுரம் பயன்படுத்தப்படுகிறது.
இதேபோன்று, இராப் பத்து காலத்திலும் அரையர் ஆட்டம் இடம் பெறுகிறது. இராப் பத்து பத்தாம் நாள் அன்று நம்மாழ்வாருக்கு மோட்சமளிக்கும் நிகழ்ச்சியை செய்து காட்டுவர்.
அரையர் சேவை பற்றி என்.சி. சீனிவாசன் பின்வருமாறு கூறுகிறார்.

“அரையர்கள் பிரதிபலன் ஏதுமில்லாமல், அரங்கனுக்கு செய்யும் சேவையான அரையர் சேவை பகவத் கைங்கரியத்திற்கு ஒரு சிறந்த சான்றாகும்.
அரையர்கள் ஆழ்வார்களாகவே போற்றப்படுகிறார்கள். அரையர் சேவை ஒரு தெய்வீகக் கலை சாதாரணக் கலை அல்ல’.
இந்தத் தமிழ்க் கலை இன்று மறையும் தருவாயில் உள்ளது. இதனைப் பாதுகாக்க வேண்டியது தமிழர்களுடைய கடமை ஆகும்.