நான்கு கால பூஜைகள் – சிவராத்திரி சிறப்பு பதிவு – 3

298

சிவராத்திரி இரவு முழுவதும் சிவாலயம் அல்லது குலதெய்வம் கோவிலில் பின்வரும் மந்திரங்களை ஜபிக்க வேண்டும்; சிவராத்திரிக்கு மறுநாள் பகல் முழுவதும் விழித்திருக்க வேண்டும்; அப்படி இருந்தால் மட்டுமே சிவராத்திரி விரதம் இருந்த பலன் கிட்டும்

முதல் கால பூஜை
சிவராத்திரி அன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பசும்பால்  தேன், பசுநெய், பசும் சாணம், கோஜலம் (பசுவின் சிறுநீர்) இவைகள் ஐந்துமே பஞ்சகவ்யம் என்று அழைக்கப்படுகிறது; சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய பஞ்ச கவ்யம் அளித்தவர்கள் யாரும் பஞ்சத்தால் வாடமாட்டார்கள்;
சிவலிங்கத்திற்கு சந்தனப்பூச்சு செய்து வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்; இதனால், வேத நாயகனின் ஆசி கிட்டும்; பச்சைப்பயிறு நைவேத்தியமாக வைக்க வேண்டும்; இதனால், பெரும் புண்ணியம் கிட்டும்; இதனால்,அவர்களுடைய பிள்ளைகள் நன்றாக வாழ்வார்கள்; எதிர்காலத்தில் தங்கள் பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் சரியாகச் செய்வார்கள்;

பஞ்சகவ்யம் வாங்கித்தர இயலாதவர்கள், சிவராத்திரி பூஜைக்கு உங்களால் முடிந்த உதவிகளை அருகில் உள்ள சிவாலயங்களுக்கு கொடுக்கலாம்;

இந்த முதல் ஜாமப் பூஜையில் ரிக் வேதம் பாராயணம் செய்ய வேண்டும்; ரிக் வேதம் சொல்லத் தெரியாவிட்டால், ரிக் வேதிகளை அழைத்து வந்து ஓதச் சொல்லலாம்;

அதுவும் இயலாதவர்கள் ஓம் நமசிவாய என்ற ஸ்தூல பஞ்சாட்சரத்த்தை இந்த முதல் ஜாமம் முழுவதும் ஜபிக்க வேண்டும்; இதனால்,ருத்ரம், ரிக் வேதம், சாம வேதம் சொன்ன பலன் கிட்டும்;

 

இரண்டாம் கால பூஜை
(
இரவு 9.01 முதல் நள்ளிரவு 12 வரை)

இரண்டாம் ஜாமத்தில் ஈசனை தரிசித்தால், நம்முடைய பிறவி முடிந்து, மீண்டும் மறுபிறவி எடுத்த பலன் கிட்டுகின்றது;

பால், தேன், சர்க்கரை, நெய், தயிர் கலந்த ரச பஞ்சாமிர்தம் ஆகும்; ஈசனாகிய சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்ய வேண்டும்;
இந்த அபிஷேகத்திற்கு, பால் கொடுத்தால் தாய்ப்பால் இல்லாதவள், தாய்ப்பால் பெறுவாள்; சுத்தமான பசும்பாலில் தான் அபிஷேகம் செய்ய வேண்டும்; காரம்பசுவின் பால் எனில் மிகவும் சிறப்பு

சர்க்கரை கொடுத்தவருக்கு சர்க்கரை நோய் வராது; தயிர் கொடுத்தவருக்கு தயிர் திரண்டு உருவாவது போல,செல்வம் பெருகும்;

சிவலிங்கத்திற்கு அகில் குழம்பு பூச்சு சார்த்த வேண்டும்; இதனால்,லட்சுமிதேவி நம்மைவிட்டு விலகாமல் இருப்பாள்; தாமரைப்பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்; நைவேத்தியமாக பாயாசம் வைக்க வேண்டும்; நைவேத்தியத்தை அனைவருக்கும் பகிர்ந்து தரவேண்டும்; இதன் மூலமாக நம்முடைய குழந்தைகள் நற்குணத்துடன் தானாய் வளரும்;

இந்த இரண்டாம் கால பூஜை சமயத்தில் (இரவு 9.01 முதல் நள்ளிரவு 12 வரை) யஜீர் வேதம் பாராயணம் செய்ய வேண்டும்; க்ருஷ்ண யஜீர்,சுக்ல யஜீர் என்று இரு பெரும் யஜீர் வேதப்பிரிவுகள் இருக்கின்றன; இருவருமே கூடி அவரவர் யஜீர் வேதத்தை ஓத வேண்டும்; ஒருவேளை,யஜீர் வேதம் தெரியாவிட்டால் அல்லது யஜீர் வேதம் தெரிந்தவர்கள் கிடைக்காவிட்டால் வருத்தப்படவேண்டியதில்லை; சிவாய நம என்ற சூக்சும பஞ்சாட்சரத்தை இந்த இரண்டாம் காலம் முழுவதும் ஜபிக்க வேண்டும்

 

மூன்றாம் கால பூஜை
(
நள்ளிரவு 12 முதல் பின்னிரவு 3.00 மணி வரை)

இந்த காலத்தில் சிவலிங்கத்திற்கு கொம்புத்தேனால் அபிஷேகம் செய்ய வேண்டும்;
சிவலிங்கத்திற்கு மேல் பூச்சு அரைத்த பச்சைக் கற்பூரம் சார்த்த வேண்டும்; வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்; நைவேத்தியமாக எள் சாதம் படையல் இடவேண்டும்;

சாம வேதம் பாடவேண்டும்; சாமவேதம் தெரியாவிட்டால், சிவயசிவ காரண பஞ்சாட்சரத்தை நள்ளிரவு 12 முதல் பின்னிரவு 3 மணி வரை ஜபிக்க வேண்டும்;

போகின்ற உயிரை நிறுத்தவும், விரும்பிய துவாரத்தின் வழியாக உயிரைச் செலுத்தவும் வல்லது இந்த சிவயசிவ என்ற மந்திரமாகும்;

இதில் இரவு 10.54 முதல் நள்ளிரவு 12.24 மணி வரையிலான நேரத்திற்கு லிங்கோத்பவ நேரம் என்று பெயர்;இந்த நேரத்தில் யார் “சிவயசிவ; சிவயசிவ” என்று ஓதுகிறார்களோ, அவர்களுடைய ஆவி பிரிகின்ற போது அளவற்ற சிவகடாட்சம் உண்டாகும்;

 

நான்காம் கால பூஜை
(
பின்னிரவு 3.01 முதல் மறுநாள் காலை 6 மணி வரை)

கரும்புச்சாறு கலந்த அபிஷேகம் சிவலிங்கத்திற்குச் செய்ய வேண்டும்; மேல் பூச்சு அரைத்த குங்குமப்பூ பூச வேண்டும்; வில்வத்தாலும், நீலோற்பவ மலர்களாலும் சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும்;  நைவேத்தியமாக சுத்தமான அன்னம் படையல் இடவேண்டும்; பச்சரிசி சாதம் வடித்து, அதில் குறைந்தது இரண்டு கரண்டி பசுநெய் விடவேண்டும்; இதுவே சுத்த அன்னம் ;

அதர்வண வேதம் பாடவேண்டும்; அதர்வண வேதத்தை எட்டு வருடங்கள் குரு அருகில் இருந்தே ஜபித்துப் பழகவேண்டும்; குரு அருகில் இல்லாமல் இந்த அதர்வண வேதத்தின் ரகசிய மந்திரத்தை ஜபித்தால்,உடனே உயிர் உடலைவிட்டுப் பிரிந்துவிடும்;

அதர்வண வேதம் தெரியாவிட்டால், பின்வரும் திருமூலரின் திருமந்திரப் பாடலைப் பாடினால் போதுமானது;

சிவசிவ என் கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிட தீவினை மாளும்
சிவசிவ என்றிட தேவரும் ஆவர்
சிவசிவ என்றிட சிவகதி தானே!

இதையும் பாட இயலாதவர்கள் சிவசிவ என்ற அதி சூக்சும பஞ்சாட்சரத்தை ஜபித்தாலே போதுமானது; பின்னிரவு 3 மணி முதல் விடிகாலை 6 மணி வரை இப்படி ஜபிக்க வேண்டும்;

இவ்வாறு நான்கு கால பூஜைகளையும், சிவராத்திரி விரதங்களை யாரொருவர் ஆண்டுகள் செய்கின்றார்களோ, அவர்கள் இறுதியாக வேதியர்களுக்கு ஸ்வர்ண தானம், பூ தானம், கோதானங்களை அன்புடன் செய்ய வேண்டும்; அனைவருக்கும் அன்னதானம் போன்ற தான தருமங்களைச் செய்ய வேண்டும். அதுவும் சிவ தலங்களில் அன்னதானம் செய்ய வேண்டும்; இப்படிச் செய்து முடிப்பவர்கள் முக்தி அடைவார்; அவர்களின் பரம்பரையும் அகத்தியர் பெருமானின் குருவருளோடு சொர்க்கத்தை அடைவார்கள்;

சிவராத்திரியின் மகிமையை சுக்ரதேசாத்திரியில் சாஸ்திரம் கூறுகின்றது; இதன் படி, மகாசிவ ஆகமங்களும்,சிவபுராணங்களும் விவரிக்கின்றன;
சிவராத்திரி மகிமைகளைக் கேட்டவர் சிவனாய் ஆவார்;
சொன்னவர் சிவன் நாமத்தில் என்றும் திளைப்பார்;
கேட்டு மகிழ்கின்றவரும் சிவனாய் ஆவார்;
இதனைச் செய்கின்றவர்களுக்கு சிவலோகப் பிராப்தம் உண்டு;