48 நாள் ஒரு மண்டலம் கணக்கு தெரியுமா?

59

48 நாள் ஒரு மண்டலம் கணக்கு தெரியுமா?

சூரிய ஒளியானது எப்படி நம் மீது விழுகிறதோ அதே போன்று தான் பூமியை சுற்றிலும் உள்ள கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சுகளும் நம் மீது விழுகின்றன. சூரியனிடமிருந்து வரும் ஒளியின் மூலமாக தான் அனைத்து உயிர்களும் வாழ்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அது போலத்தான் கோள்கள், நட்சத்திரங்களின் கதிர் வீச்சுகளும் நம்மை தொடர்பு கொண்டுள்ளன என்பதையும் ஒவ்வொருவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஆனால், சூரியனிடமிருந்து வரும் ஒளியானது நம் கண்களுக்கு தெரிவதைப் போன்று கோள்கள் மற்றும் நட்சத்திரங்களின் கதிர் வீச்சுக்கள் நம் கண்களுக்கு தெரிவதில்லை. இந்த கதிர்வீச்சு ஒளிகளுக்கு சொந்தமாக 12 ராசி நட்சத்திர கூட்டங்களையும், 27 நட்சத்திர கூட்டங்களையும், 9 கோள்களையும் கண்டுபிடித்து அதனை வகைப்படுத்தியுள்ளனர்.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கிரகத்திற்கு உரியது என்பதை அதன் பெயர்களை வைத்து நாம் அறியலாம். ஒரு வருடத்திற்கு 365 நாட்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், எந்த நாளை எடுத்துக் கொண்டாலும் சரி, அன்றிலிருந்து தொடங்கி சரியாக 48 நாட்களுக்குள் 9 கிரகங்கள், 12 ராசிகள், 27 நட்சத்திரக் கூட்டங்கள் ஆகியவற்றின் கதிர்வீச்சு ஆதிக்கம் பெற்ற அனைத்து நாட்களும் வந்து விடும்.

எப்படி என்றால், கிரகங்கள் 9, ராசிகள் 12, நட்சத்திரங்கள் 27. இந்த மூன்றையும் கூட்டிப் பார்த்தால் (9+12+27) 48 வரும். சூரியனிடமிருந்து வரும் ஒளியில்லாமல் நம்மால் விவசாயம் செய்ய முடியாது. அது போன்று தான், கிரகங்கள், ராசிகள் மற்றும் நட்சத்திரங்களின் கூட்டமைப்புகள் இல்லாமல் எந்த ஒரு காரியமும், செயலும் நடைபெறாது. இந்த மூன்றும் தாம் நமது செயல்களுக்கு காரணமாக இருக்கின்றது என்பது அறிவியல் உண்மை.

ஆதலால் தான் எந்தவொரு காரியத்திற்கும் பரிகாரம் என்று சொல்லும் போது தொடர்ந்து 48 நாட்கள் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். பரிகாரம் மட்டுமல்லாமல் மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் ஒரு மண்டலம் 48 நாட்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். யாராக இருந்தாலும், தொடர்ந்து 48 நாட்கள் செய்யும் வேண்டுதல்களுக்கு கை மேல் பலன் உண்டு. ஆகையால் தான் 48 நாட்கள் ஒரு மண்டலம் வரை நமது பிரார்த்தனையாக இருக்கட்டும், வழிபாடாக இருக்கட்டும், பரிகாரமாக இருக்கட்டும், மருந்து மாத்திரைகளாக இருக்கட்டும் எது செய்தாலும் ஒரு மண்டலம் வரை விடாமல் தொடர்ந்து செய்ய வேண்டும் என்கிறார்கள்.