60, 80ஆவது கல்யாணம் நடக்க ஏற்ற கோயில்!

121

60, 80ஆவது கல்யாணம் நடக்க ஏற்ற கோயில்!

தேனி மாவட்டம் பெரியகுளம் என்ற ஊரில் உள்ள கோயில் பாலசுப்ரமணி (ராஜேந்திர சோழீஸ்வரர்) திருக்கோயில். இந்தக் கோயிலில் ராஜேந்திர சோழீஸ்வரர் மூலவராக காட்சி தருகிறார். அறம் வளர்த்த நாயகி அம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா, வைகாசி விசாகம், ஆடிப்பூரம், தைப்பூசம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, பங்குனி உற்சவம் ஆகிய நாட்களில் இந்தக் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

தேனி மாவட்டத்தில் இருக்கும் கோயில்களில் பெரிய கோயிலாக இந்தக் கோயில் கருதப்படுகிறது. இந்தக் கோயிலில் மூலவர் சிவனாக இருந்தாலும், முருகன் தான் பிரசித்தி. ஆகையால் இந்தக் கோயிலை பாலசுப்பிரமணியர் கோயில் என்று அழைக்கின்றனர். ஒரே கோயிலில் சிவன், அம்பாள், முருகன் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். சுற்றுப்பிரகாரத்தில் நடராஜர், தம்பதி சமேதராக சூர்ய, சந்திரன், தட்சிணாமூர்த்தி, ஜூரதேவர், சப்தகன்னிகள், பைரவர், ராகு கேது மற்றும் மகாவிஷ்ணு ஆகியோர் தனி சன்னதிகளில் அருள்புரிகின்றனர்.

இந்தக் கோயில் தூண்களில் அகோர வீரபுத்திரர், ருத்ர தாண்டவர், துர்க்கை, மன்மதன் ஆகியோரும் அமைந்துள்ளனர். இந்தக் கோயிலில் நீராடி, முருகப் பெருமானை வணங்கிட தீராத நோய்களும் தீரும் என்பது ஐதீகம். சுவாமிக்கு வஸ்திரம் சாற்றி பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

இந்தக் கோயிலானது காசியில் ஓடும் புண்ணிய கங்கைக்குச் சமமாக கருதப்படும் வராக நதியின் கரையில் அமைந்துள்ளது. இந்த நதியின் இரு கரையிலும் நேர் எதிராக ஆண் மற்றும் பெண் மருத மரங்கள் அமைந்திருக்கின்றன. இந்த நதியை பிரம்ம தீர்த்தம் என்று கூறுவர்.

பெரியகுளத்தில் ஊரின் எல்லையில் அமைந்திருக்கும் பாலசுப்பிரமணியர் ஆறுமுகங்கள் கொண்டு வள்ளி, தெய்வானை உடன் காட்சி தருகிறார். அருகில் லிங்க வடிவில் ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி ஆகியோர் கொடி மரங்களுடன் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

ராஜேந்திர சோழ மன்னன் கட்டியதால் இந்தக் கோயில் அப்பகுதியில் பேச்சு வழக்கில் பெரிய கோயில் என்ற சிறப்பு பெயருடன் அடையாளம் காணப்படுகிறது. முருகனுக்கு நேரே அமைந்துள்ள மயில் மண்டபத்தின் மேல் பகுதியில் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள் பதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் மரணத்தை வென்ற மிருத்யுஞ்சரின் சன்னதி இருப்பதால் அதிகளவில் 60, 80ஆவது திருமணங்கள் நடத்தப்படுகின்றன.

பெரியகுளம் உள்ளிட்ட பகுதியை கொண்ட நாட்டை ராஜேந்திர சோழன் ஆட்சி செய்து வந்தான். அப்போது ஒரு நாள், வராக நதிக்கரையில் உள்ள அகமலைக்கு வேட்டைக்கு சென்றான். அங்கு பன்றி தனது குட்டிகளுக்கு பால் கொடுத்து கொண்டிருந்தது. ராஜேந்திர சோழன் அம்பினால், தாய் பன்றி மீது குறி வைத்து எய்து கொன்றான். இதையடுத்து, தாயின் நிலை கண்டு கதறிய குட்டிகள் முன்பு தோன்றிய முருகப் பெருமான், அந்தக் குட்டிகளுக்கு பால் கொடுத்து, குட்டிகளின் பசியை போக்கினார்.

குட்டிகளை பசியால் துடிக்கச் செய்து பாவத்திற்கு ஆளான ராஜேந்திர சோழனின் பாவம் நீங்கவும், பன்றிகளுக்கும் அருள் புரிந்த முருகப் பெருமானின் திருப்பெருமையை உணர்த்தும் விதமாக ராஜேந்திர சோழன் இந்தக் கோயிலைக் கட்டினான்.