ஆஷாட ஏகாதசி – பண்டரிபுரம் !

332

பண்டரிபுரத்தில் முக்கிய நாளாக ஆஷாட ஏகாதசி கொண்டாடப்படுகிறது .
இது ஆஷாட மாதத்தில் ( ஜூன்-ஜூலை ) வரும் வளர்பிறை ஏகாதசியாகும் .

என்ன இந்த நாளுக்கு பண்டரிபுரத்தில் விசேஷம் ?

ஸ்ரீ பாண்டுரங்கனின் சிறந்த பக்தர்களான ஸ்ரீ துக்காராம் மகாராஜ் அவர்களும் ஸ்ரீ ஞானேஸ்வரரும் தமது பக்தர்களுடன் ஸ்ரீ பாண்டுரங்கனை தரிசிக்க பல மைல்கள் பாத யாத்திரையாக ( 150 – 200 கிமீ மேல் ) வந்து பண்டரிபுரம் அடைந்த நாள் ஆஷாட ஏகாதசி நாளாகும் .

ஓவ்வொரு ஆண்டும் இந்த சமயத்தில் மராட்டிய மாநிலம் தேஹு என்னும் இடத்திலிருந்து ஸ்ரீ.துகாராம் அவர்களின் பாதுகைகளை தாங்கிய பல்லக்கு ஏராளமான பக்தர்களுடன் பண்டரிபுரம் நோக்கி வருகிறது . பக்தர்கள் பாத யாத்திரையாக ஸ்ரீ துக்காராம் மஹாராஜூடனேயே பாடிக்கொண்டு வருவதாக பாவித்து பாண்டுரங்கன் மேல் பல பாடல்களை பாடிக்கொண்டு ( இவற்றை அபங்கங்கள் என்று கூறுகிறார்கள் ) அந்த பல்லக்கை தொடர்ந்து வருகிறார்கள் .

இதுபோலவே மராட்டிய மாநிலம் ஆலந்தி என்னும் இடத்திலிருந்து ஸ்ரீ ஞானேஸ்வரரின் பாதுகைகளை தாங்கிய பல்லக்கு பக்தர்களுடன் புறப்படுகிறது. இவை சரியாக ஆஷாட ஏகாதசியன்று பண்டரிபுரம் சென்று சேரும் வகையில் பல நாட்களுக்கு முன்பாகவே புறப்பட்டு வருகிறது . ஆங்காங்கே பல ஊர்களிலிருந்தும் மக்கள் வழியில் சேர்ந்துகொள்ள பக்தர்கள் வெள்ளம் ஆஷாட ஏகாதசியன்று பண்டரிபுரத்தில் பிரவேசிக்கிறது , பாண்டுரங்கனின் பாடல்களை பக்தி பரவசத்துடன் பாடிக்கொண்டு.

ஸ்ரீ துக்காராம் மஹராஜ் கி ஜெய் !
ஸ்ரீ ஞானேஸ்வர் மஹராஜ் கி ஜெய் !
ஸ்ரீ ருக்மணி சமேத ஸ்ரீ பாண்டுரங்க மஹராஜ் கி ஜெய் !!