தீபாவளி ஸ்பெஷல் !

122

“கிருபாவலம்பநகரீ காசிபுராதீச்வரி
மாதா அன்னபூர்ணேசுவரி பிஷாம்தேஹி!’
என்று “அன்னபூர்ணாஷ்டக’த்தில் ஆதிசங்கரர் அன்னையை வேண்டுகிறார். உலகத்தில் ஒரு மனிதன் அடையக் கூடிய சகல பாக்கியங்களையும் அடைந்து கரை கண்ட அவதார புருஷரான சங்கரர் அன்னையிடம் பிச்சை கேட்கிறார்.
காசியின் எஜமானியாக விளங்கும் தேவியை அன்னம் அளிப்பவளாகவும், முக்தியைத் தருபவளாகவும், சகலசம்பத்துகளையும் அருளுபவளாகவும், வெற்றியை அளித்து வாழ்த்தும் மாதாவாகவும், கருணையின் வடிவமாக விளங்கும் உலகத் தாயாகவும் வைத்து வழிபடுகிறார் சங்கரர்.
உலகத்தாய் தீபாவளியன்று ஒளி வடிவமாகப் பிரகாசிக்கிறாள்.
நவரத்தினங்களும் இழைத்த அணிகலன்கள் தவழ்கின்றன; அருள்பாலிக்கும் கரங்களை அலங்கரிக்கின்றன; தண்ணொளி வீசும் மணிமகுடமாகத் திகழ்கின்றன. பொன்னும் மணியும் நவரத்தினங்களும் பூட்டி, பொன் உருவிலேயே ஜகன்மாதாவை வைத்துப் பூஜிக்கிறார்கள்.
ஈசனுக்கே உணவளிக்கும் அன்னை தங்கக் கிண்ணமும் தங்கக் கரண்டியுமாகக் கொலுவிருக்கிறாள்.
உலகத்தையே ஆளும் மகேசுவரன் அங்கே பிச்சை கேட்டு, உலகத்தாரில் முதல்வனாய் உணவருந்த திருவோடு ஏந்தி நிற்கும் காட்சியைக் காண்கிறோம்.
ஆலகாலத்தையும் அமுதமாய் விழுங்கிய எம்பிரானுக்கு அப்படி ஓர் எளிய தோற்றமா? அத்தனை பசியா? “உலகக் குழந்தைகளைக் காப்பாற்று; அதற்கு ஒரு பாவனையாக எனக்கு உணவு கொடு!’ என்று கேட்கிறார் கைலாசபதி.
அன்னபூரணியின் இருபுறமும் ஸ்ரீதேவியும் பூதேவியும் தங்கத்தில் செய்த விக்கிரகங்களாகத் தரிசனம் தருகிறார்கள்.
அந்தத் தோற்றம், கையை உயர்த்தி அபயமளித்து ஆசீர்வாதம் கூறும் விதமாகவே இருக்கிறது.
காசி விசுவேசுவரர், வெண்ணீறணிந்த பெருமான்- வெள்ளி மலையமர்ந்த ஈசன் வெள்ளி விக்கிரகமாக ஜொலிக்கிறார்.
லட்டுகளால் செய்த தேரில் அன்னை பவனி வருகிறாள். அந்த இனிப்பையே பிரசாதமாகவும் வழங்குகிறார்கள். பக்தர்கள் அன்னபூரணிக்கு காணிக் கையை ரூபாய் நோட்டு களாக மழைபோலப் பொழிகிறார்கள்.
அன்னம் மலைபோலக் குவித்து வைக்கப்படுகிறது. வகை வகையான இனிய பணியாரங்கள் குவியல் குவியலாக வைக்கப்படுகின்றன.
எங்கும் பசியாற்றும் உணவு இறைவனின் அருளாகப் பொங்கி நிறைகிறது. காசியில் அன்ன விசாரமே இல்லை! அதுவும் தீபாவளித் திருநாளில் துளியும் இல்லை!