தோஷ நிவர்த்திக்கு அருமையான பரிகார தினம் மாசிமகம்

90

மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளே மாசிமகம் ஆகும். எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம் மட்டுமே பெருமை பெற்றதாக திகழ்கிறது.
மேலும் இந்நாள் மகத்துவம் மிக்கது. சிவபெருமானுக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளாக மாசிமகம் திகழ்கிறது. கடலுக்கு அடியில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிக்கொண்டு வந்ததும் இந்த மாசி மகத்தன்று தான் என புராணங்கள் கூறுகின்றன.
அந்த வகையில், வரும் (27.02.2021) சனிக்கிழமை அதாவது, மாசி 15ஆம் தேதி மாசிமகம் வருகிறது. இந்நாளில் இறைவனை தரிசனம் செய்தால் நற்பலன்கள் கிடைக்கும்.
பித்ருக்கள் என்ற சொல்லிற்கு முன்னோர்கள் என்று பொருள். தோஷம் என்றால் குற்றம். எனவே பித்ருதோஷம் என்ற சொல்லிற்கு முன்னோர்கள் சம்பந்தப்பட்ட குற்றம் என்று பொருள்.
இந்த தோஷ நிவர்த்திக்கு அருமையான பரிகார தினம் மாசிமகம். அன்றைய தினம் கும்பகோணம் மகா மக குளத்தில் பிதுர் தர்ப்பணம் செய்தால் பித்ரு தோஷம் நீங்கும்.
பிரசித்திப்பெற்ற புண்ணிய தலங்கள் :
மாசிமகத்தன்று பிரசித்திப்பெற்ற புண்ணிய தலங்களில் உள்ள ஆறு, கடல், குளம் போன்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும்.
குறிப்பாக ராமேஸ்வரம், தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள திருவையாறு, கும்பகோணம், நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள வேதாரண்யம் போன்ற இடங்களில் நீராடி தர்ப்பணம் மற்றும் பிதுர்க்கடன் செய்வதன் மூலம் பித்ரு தோஷம் நீங்கும்.
புத்திர பாக்கியம் கிடைக்கும் :
மாசிமகம் நாளில் புனித நீர் நிலைகளில் நீராடினால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.
ஆண் குழந்தை வேண்டுபவர்கள் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கி வேண்டிக் கொண்டால் ஆண்குழந்தை நிச்சயம் பிறக்கும் என்பது நம்பிக்கை.