கங்கை நதிக்கு நன்றிக் கடனாக செய்யப்படும் கங்கா ஆரத்தி !

112

கங்கை நதிக்கு நன்றிக் கடனாக நாள்தோறும் மாலை வேளையில் நேரடியாகச் செய்யப்படும் பூஜையே ‘கங்கா ஆரத்தி’ ஆகும்.
கங்கை புனித நதியாக உருவானவள். ஏழு புண்ணிய நதிகளில் முதலிடம் பெறுவது கங்கைதான். பாரதத்தின் புண்ணிய நதியாக விளங்கும் மகாநதி கங்கை மட்டுமே.
சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் உதித்த ஆறு தீப்பொறிகளும் வாயு மற்றும் அக்னி தேவரால் கங்கையில் சேர்க்கப்பட்டன. அதை கங்கா தேவி சுமந்து சென்று சரவணப் பொய்கையில் சேர்ப்பித்ததால் ஆறுமுகப் பெருமான் அவதரித்தான்.
கங்கையில் நீராடினால் பாவங்கள் நீங்கி புனித மடையலாம் என்ற நம்பிக்கை இந்துக்கள் மனதில் ஆழப்பதிந்துள்ளது. பெருமைகள் பல பெற்ற கங்கை நதிக்கு நன்றிக் கடனாக நாள்தோறும் மாலை வேளையில் நேரடியாகச் செய்யப்படும் பூஜையே ‘கங்கா ஆரத்தி’ ஆகும். இந்த மாபெரும் பூஜை திறந்த வெளியில் கங்கைக் கரையில் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த பூஜையைக் காணவும், தரிசனம் செய்யவும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கங்கை நதிக்கரையில் கூடுகிறார்கள். பிரசித்தி பெற்ற இந்த பூஜை காசி மாநகரிலேயே கங்கைக் கரையில் பல இடங்களில் நடைபெற்றாலும் ‘தஸாஸ்வமேத’ கட்டத்தில் நடைபெறும் பூஜையே மிகவும் பிரசித்தி பெற்றது.
ஒரே நேரத்தில், ஒரே மாதிரி வெண்ணிற ஆடை அணிந்த பத்து பூசாரிகளால் மிக மிக நிதானமாக இந்தப் பூஜை செய்யப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்வதற்கு ஏதுவாக பத்து உயர்ந்த மேடைகள் இங்கே அமைக்கப்பட்டுள்ளன. அந்த மேடைகளின் மேல் நின்று பூசாரிகள் நிதானமாக தூபம், தீபம், அலங்கார தீபம், புஷ்பம், சாமரம் போன்ற நானாவித உபசாரங்களுடன் ‘கங்கா மாதா’ வுக்கு சிறப்பாகப் பூஜை செய்கிறார்கள். மின் ஒளி விளக்குகளின் ஒளி வெள்ளத்தில் நடைபெறும். ‘கங்கா ஆரத்தி’ பூஜையைக் கண்டு பக்தர்கள் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கிக் களிக்கிறார்கள்.
ஏராளமான பக்தர்கள் படகுகளில் ஏறி நதிக்குள் அமர்ந்து கங்கா ஆரத்தி பூஜையைக் கண்டு மகிழ்கிறார்கள். இந்த பூஜை சுமார் ஒரு மணி நேரம் நடைபெறுகிறது. அப்பொழுது ஒலி பெருக்கிகள் ‘கங்கா மாதா’வின் புகழைப் போற்றிப் பாடுகின்றன. புனித கங்கை நதிக்கரையில் ஆரத்தி பாட்டு என்பது ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும்.