கர்மா!!

44

 

“அரச மரம்” என்ற அற்புதமான நாவலில் இருந்து.

“கர்மா என்று ஒன்று இருக்கிறது. போன ஜென்மத்து பாவங்கள் என்பவை தனியாக இருக்கின்றன. அவற்றுக்கான தண்டனையாகத்தான் இந்த பிறப்பு இருக்கிறது.

இந்த பிறப்பு தண்டனையாக இருக்கிறபோது தண்டனையிலிருந்து காப்பாற்றுவது என்பது எங்கனம்? தண்டனையை அனுபவிப்பது நல்லதா, தண்டனையிலிருந்து தப்பிப்பது நல்லதா?”

“நல்ல கேள்வி. ஐயா, காயத்ரீ ஜபம் செய்பவரே உமக்கு பதில் சொல்கிறேன் கேளும். ஒருமுறை ஒரு தவறு செய்துவிட்டீர், ஒருவனை கொலை செய்து விட்டீர்.

கோபத்தாலோ அல்லது சந்தர்ப்ப சூழ்நிலையினாலோ அது நிகழ்ந்துவிட்டது. கொலை பாவமான காரியம். அதற்கு நிச்சயம் தண்டனை உண்டு. ஆனால், நீர் அது குறித்து வருத்தப்படுகிறீர்.எப்படி நடந்துவிட்டது என்று வேதனைப்படுகிறீர்,

செய்திருக்க வேண்டாமே என்று மனம் மருகுகிறீர் எனில், உம்மைக் கவனித்து உமக்கு தண்டனை அளித்த அரசனே அந்த தண்டனையை ரத்து செய்வதில்லையா?

சிறை தண்டனை என்று சொன்னவன், ‘இதுநாள் வரை நீர் சிறையிலிருந்தது போதும். விடுதலையாகி விடுங்கள்’ என்று சொல்வதில்லையா? இரண்டு சவுக்கடி கொடுத்துவிட்டு வெளியே அனுப்பி விடுவதில்லையா?

‘உமக்கு சிறை தண்டனை வேண்டாம். நாடு கடத்துங்கள்’ என்று உயிரோடு உம்மை சுதந்திரமாக வெளியேற்றி விடுவதில்லையா?

எனது எல்லைக்குள் நீ வர வேண்டாம் என்று உத்தரவிட்டு உம்மை அப்புறப்படுத்துவது போல தண்டனை இருந்தாலும், தண்டனை குறையவும் அரசனுக்கு அதிகாரம் இருப்பதைப் போல கடவுளும் செய்வதுண்டு.

ஒரு மதியூக மந்திரி அரசனிடம் பேசி தண்டனையைக் குறைப்பது போல, குருவானவர் இறைவனிடம் பேசி உமக்கு தண்டனையை மாற்றிவிடுகிறார். இன்னும் இலகுவான ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள்.

இன்றைக்கு அதோ, அந்த வீட்டுத் திண்ணையில் தூங்குகிறானே அவனுக்கு, விடிந்து மூன்று நாழிகைக்குள் செருப்படி விழ வேண்டும் என்று ஒரு விதி இருக்கிறது.

அது போன ஜென்மத்தில் அவன் ஒரு நாயை எட்டி உதைத்ததன் விளைவு. ஒரு நாயை எட்டி உதைத்ததற்காகவே அவன் செருப்படி வாங்கப் போகிறான்.

ஆனால், அவன் இறை பக்தி உடையவன். குரு பக்தி உடையவன். தன் கனவுகளினூடே, தான் செய்த பாவங்களை கண்டுபிடித்து விடுகிறான். அதிகம் பாவம் செய்யாமலிருக்க முயற்சிக்கிறான்.

இடைவிடாது இறைவன் நாமம் சொல்லிக் கொண்டிருக்கிறான். உரத்துப் பேசாதிருக்கிறான். எனவே, அவனுடைய தண்டனை வேறுவிதமாக மாற்றப்படும்.

அவன் பேரக் குழந்தை இன்று முதல் நாழிகையில் ஓடி வந்து அவன் மீது உட்கார்ந்து கொள்ளும். அவனைச் சுற்றி ஆடும்,பாடும், தலை முடியைப் பிடித்து இழுக்கும்.

முகத்தில் குத்தும், கடிக்கும். பிறகு அருகே இருக்கின்ற செருப்பைத் தூக்கிக் கொண்டு ஓடிவந்து அவன் தலையில் போடும். இவன் என்ன செய்வான். ஒரு வயதுப் பேரக் குழந்தையை செருப்புத் தூக்கிப் போட்ட அந்த செல்வக் குழந்தையை வாரி முத்தமிட்டு மிக்க நன்றி என்று சொல்வான்.

செருப்படியும் விழும். அது இதமாகவும் இருக்கும். குருவின் திருவருளால் தண்டனையானது இப்படித் திருப்பி விடப்படும்.”