ஸ்ரீரங்கத்தில் நோய் தீர்க்கும் தன்வந்திரி பகவான்

80

புதன் கிழமைகளில் தன்வந்திரி பகவானை ஸ்ரீரங்கம் திருத்தலத்துக்கு வந்து தரிசியுங்கள். நீண்டகால நோயையெல்லாம் தீர்த்து, ஆரோக்கியத்தை வழங்குவார் தன்வந்திரி பகவான்.

சிவ வழிபாடு செய்பவர்கள் கோயில் என்று சொன்னால் சிதம்பரம் கோயிலைத்தான் சொல்லுவார்கள். அதேபோல், கோயில் என்று வைணவர்கள் சொன்னால், அது ஸ்ரீரங்கத்தைத்தான் குறிக்கும் என்பார்கள்.

பிரமாண்டமான கோயிலாகத் திகழ்கிறது ஸ்ரீரங்கம். காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் நடுவே அமைந்துள்ள அற்புதமான திருத்தலம்.

பலப்பல புராணத்தொடர்புகளைக் கொண்டது ஸ்ரீரங்கம் திருத்தலம். ஒருமுறை கிருஷ்ண ஜயந்தி உத்ஸவத்தின் போது, அரங்கனும் கிருஷ்ண பரமாத்மாவும் திருவீதி உலாவாக எழுந்தருளினர். தன்னுடைய அரண்மனைக்கு முன்னே ஸ்வாமிக்கு உபயம் ஒன்றை ஏற்படுத்தினார் விஜயநகரப் பேரரசின் அச்சுதராயர். அதற்காக, ஏராள மானியங்களை வழங்கினார். அந்த உபயம் இன்று வரை தொடர்கிறது.

ஸ்ரீரங்கம் திருத்தலத்தின் சந்திர புஷ்கரணியைச் சுற்றி அதன் அங்கமாக தெற்கே அஸ்வ தீர்த்தம் உள்ளது. தென் கிழக்கில் ஜம்பு தீர்த்தம் அமைந்துள்ளது. கிழக்கில் பில்வ தீர்த்தமும் வடமேற்கே வகுள தீர்த்தமும் வடக்கே கதம்ப தீர்த்தமும் அமைந்துள்ளன. வட கிழக்கில் ஆம்ர தீர்த்தமும் மேற்கில் புன்னாக தீர்த்தமும் தென் மேற்கே பலாச தீர்த்தமும் என மொத்தம் எட்டு தீர்த்தங்கள் அமைந்திருக்கின்றன என்கிறது ஸ்தல புராணம்.

ஸ்ரீரங்கத்தில் தாயார் சந்நிதிக்குச் செல்லும் வழியில், அரங்கனுக்கே வைத்தியம் பார்க்கும் வைத்தியனாக, ஸ்ரீமந் நாராயணப் பெருமாள், தன்வந்திரியாக காட்சி தருகிறார். திருக்கரத்தில் அட்டைப்பூச்சி, அமிர்தகலசம் முதலானவற்றுடன் காட்சி தருகிறார்.

தன் வந்திரி பகவான் மிகுந்த சாந்நித்தியத்துடன் திகழ்கிறார், ஸ்ரீரங்கம் திருத்தலத்தில். இவரை வழிபட்டால், தீராத நோயும் தீரும் என்பது ஐதீகம்.

புதன் கிழமைகளில் தன்வந்திரி பகவானை ஸ்ரீரங்கம் திருத்தலத்துக்கு வந்து தரிசியுங்கள். நீண்டகால நோயையெல்லாம் தீர்த்து, ஆரோக்கியத்தை வழங்குவார் தன்வந்திரி பகவான்.