ராகவேந்திரர் ஆராதனை தினம் ஸ்பெஷல் !

174

ஒரு முறை ஸ்ரீராகவேந்திரர்
சுவாமிகள் கும்பகோணத்தில் தங்கியிருந்தபோது,
மூன்று ஜோதிடர்கள் மடத்துக்கு வந்து தரிசிக்க விரும்பினர்.

“என்ன வேண்டும்?’’ என்று சுவாமிகள் கேட்டார்.
அதற்கு அவர்கள்,
”நாங்கள் ஜோதிடம் சொல்பவர்கள். எங்களுக்கு இங்கே ஒரு வாய்ப்பு கிடைத்தால், அதை எங்களுடைய பாக்கியமாக நினைப்போம்” என்றனர்.

சற்று யோசித்த சுவாமிகள், ”உங்களிடம் ஒரு ஜாதகம் தருகிறேன்.
அந்த ஜாதகத்துக்கு உரியவரின் ஆயுள் காலம் என்ன என்று கணித்துச் சொல்ல முடியுமா?” என்று கேட்டார்.

அதன்படியே மூன்று ஜோதிடர்களிடமும் ஜாதகம் தரப்பட்டது.
அவர்களும் தாங்கள் சொல்லியபடியே ஜாதகத்தைக் கணித்துப் பார்த்தனர்.

பின்னர்,
தங்கள் கருத்துகளை ஒப்பிட்டுப் பார்த்த போது,
மூவரின் கணிப்பும் வேறு வேறாக இருந்தது.

‘`ஜாதகரின் ஆயுள் காலம் நூறு ஆண்டுகள்’’ என்றார் ஒருவர்.

‘`இல்லை, முந்நூறு ஆண்டுகள் என்றார் அடுத்தவர்.

‘`இல்லையில்லை,
எழுநூறு ஆண்டுகள் என்பதே சரி’’ என்றார் மூன்றாமவர்.

சுவாமிகளுடன் இருந்தவர்கள் அனைவரும் திகைத்துப் போனார்கள்.

ஆனால், சுவாமிகளோ,
‘`உங்களை சோதித்துப் பார்க்கவே இப்படிக் கேட்டேன்.
நீங்கள் மூவரும் கணித்த கணிப்பு சரிதான்’’ என்றார்.

‘`சுவாமி, தங்கள் கட்டளைப்படி எங்கள் கடமையைச் செய்து விட்டோம்.
ஆனால், தங்களிடம் ஒரு விளக்கம் பெற விரும்புகிறோம்.
தனித்தன்மை வாய்ந்த இந்த ஜாதகத்துக்கு உரியவர் யார்?’’ என்று கேட்டனர்.

ராகவேந்திர மகான் புன்னகைத்தபடி, ‘அது என்னுடைய ஜாதகம் தான்’’ என்றார்.

என்னுடைய ஆயுள் காலத்தை மூன்று பேரும் மூன்று விதமாக கணித்தது சரிதான்.
எப்படி என்பதை நான் விளக்குகிறேன்.

ஒருவர் ஆயுள்காலம்
நூறு வயது என்று கூறியிருக்கிறார்.
நான் சரீரத்துடன் இருக்கும் காலத்தைத்தான் அவர் கணித்திருக்கிறார். எனவே, அவருடைய கணிப்பு சரி.

அடுத்தவர் முந்நூறு ஆண்டுகள் என்று கூறியிருக்கிறார்.
அவர், எனது கிரந்த நூல்கள் பிரகாசம் அடைந்து பரவும் காலத்தைக் கணித்துக் கூறினார்.

மூன்றாமவர் எழுநூறு ஆண்டுகள் என்று கூறியிருப்பது,
நான் எழுநூறு ஆண்டுகள் பிருந்தாவன வாசத்தின் மூலம் என் பக்தர்களைக் காப்பாற்றுவேன் என்பதைத் தான்.

ஆக, மூவருடைய கணிப்பும் சரிதான்’’ என்று கூறி, மூவருக்கும் பிரசாதம் கொடுத்து ஆசீர்வதித்தார்.

ஸ்ரீ குருப்யோ நமஹ !