அப்பர் பெருமான் கரையேறிய வரலாற்று

52

கடலுாரில், அப்பர் பெருமான் கரையேறிய வரலாற்று சிறப்புடைய கரையேறவிட்ட குப்பம் கிராமம் அருகே வண்டிப்பாளையம் எனும் ஊரில் குரு சித்தானந்த சுவாமிகள் பிறந்தார். வீர சைவ மரபை சேர்ந்த இவர், பிள்ளையார் வீடு என்று அவ்வூர் மக்களால் அழைக்கப் பெற்ற வீட்டில் அவதரித்தார்.பெரியவரானதும், திருப்பாதிரிபுலியூர் ஸ்ரீபாடலீஸ்வரர் ஆலயத்தில், அம்பாள் சன்னதியில் சுவாமிக்கு மலர் தொடுக்கும் பணியில் ஈடுபட்டார்.இந்நிலையில், புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த முத்துக்குமாரசாமி பிள்ளை என்பவரின் மனைவிக்கு நீங்காத நோய் இருந்தது.

இவரது இல்லத்திற்கு வந்த ஒரு சாது, திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் சன்னதியில் மலர் தொடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் சித்தானந்த சுவாமிகள் மூலமே உனது மனைவிக்கு நோய் தீரும் என கூறியுள்ளார்.அதையடுத்து, கடலுார் சென்று சித்தானந்தா சுவாமியை, புதுச்சேரிக்கு அழைத்து வந்தார். சித்தானந்த சுவாமி, முத்துக் குமாரசாமி பிள்ளை வீட்டில் எழுந்தருளியதும், அவரது மனைவிக்கு நோய் நீங்கியது.இந்த நிகழ்வு, முத்தியால்பேட்டை எங்கும் பரவியதால், அப்பகுதி மக்கள், சுவாமிக்கு பணிவிடை செய்ய துவங்கினர்.

ஒருமுறை முத்துக்குமாரசாமி பிள்ளையுடன் கருவடிக்குப்பம் வழியாக பேசிக் கொண்டே நடந்து சென்ற சுவாமிகள், முத்துக்குமாரசாமி பிள்ளைக்கு சொந்தமான தோப்புக்குள் சென்றார். அங்கு ஒரு இடத்தை காட்டி, ‘இது இங்கு தான் இருக்கப் போகிறது’ என்று தனது உடலை காட்டினார்.மயிலம் முருகனின் மயில் வாகன சேவையை இருந்த இடத்தில் இருந்து சிறுவர்களுக்கு காட்டியது; பலருக்கு நோய் தீர்த்தது; கடன் தீர்த்தது போன்ற அருள் செயல்களால், அனைத்து பகுதி மக்களுக்கும் பரிசித்தமானார்.

சமாதி அடைவதற்கு பத்து நாட்களுக்கு முன்பே, தனது இறப்பை கூறிவிட்டார். அவர் கூறியபடியே, 1837ம் ஆண்டு மே மாதம் 28ம் தேதி, சுவாமிகள் சமாதியானார்.முறைப்படி கருவடிக்குப்பத்தில் முத்துக்குமாரசாமி பிள்ளை தோட்டத்தில், அவர் காட்டிய இடத்திலேயே சமாதி அமைத்தார். அதுதான். சித்தானந்த சுவாமி கோவில். அன்று முதல் இன்று வரை துன்பப்பட்டு வந்தவர்கள், குரு சித்தானந்த சுவாமியின் சமாதியை தரிசித்து பயனடைந்து செல்கின்றனர்.