எமலோகத்தை அடையாதவன் – காரடையான் நோன்பு

219

கணவனை எமனிடமிருந்து மீட்டெடுத்த சத்தியவான் சாவித்திரி கதை தெரியும்தானே. அவள், பக்தியுடனும் முழு ஈடுபாட்டுடனும் செய்து, கணவனை மீட்டாள். கணவனின் உயிர் காத்தாள். தீர்க்கசுமங்கலி வரம் பெற்றாள். கணவனுக்கு நீண்ட ஆயுள் வரக்காரணமானாள். தாலி நிலைக்கப் பெற்றாள். அவளின் அடியொற்றி காலகாலமாக பெண்கள் இருக்கும் விரதம்தான் ‘காரடையான் நோன்பு’ எனும் மகத்துவம் மிக்க விரதம்.

*‘காரடையான் நோன்பு’ என்றால் கார அடை செய்வார்கள். ஆனால் கார அடை படையலிடுவதால், காரடையான் நோன்பு எனும் பெயர் அமையவில்லை. கார் என்றால் கருமை. இருள். எமலோகம் எப்படியிருக்கும் என்பதன் குறியீடு. அடையான் என்றால் அடையாதவன். அதாவது எமலோகத்தை அடையாதவன். அப்படி, எமனால் அழைத்துச் செல்லமுடியாதபடி, தங்கள் கணவன்மார்களை காரடையானாக எமலோகத்தை அடையாதவனாக வைத்திருக்கவேண்டி, அம்பாளை, சக்தியைப் பிரார்த்தனை செய்வதுதான், விரதம் மேற்கொள்வதுதான் ‘காரடையான் நோன்பு’.*

இந்தநாளில், அதிகாலையில் எழுந்து, வீட்டைச் சுத்தம் செய்யவேண்டும். தலைக்குக் குளித்துவிட்டு, பூஜையறையில் கோலமிடவேண்டும். அதேபோல், வீட்டு வாசல், வீட்டின் முக்கியமான வாசல் முதலான இடங்களிலும் கோலமிடவேண்டும். அந்தக் கோலமாகவும் மாக்கோலமாகவும் காவியுடன் கூடிய கோலமாகவும் இருப்பது சிறப்பு.

நிலைவாசலில், மாவிலைத் தோரணங்கள் கட்டவேண்டும். பூஜையறையில் உள்ள சுவாமிப் படங்களுக்கு சந்தனம், குங்குமமிட்டு, பூக்கள் வைத்து அலங்கரிக்கவேண்டும். சுவாமிப் படங்களுக்கு எதிரில், மஞ்சள் சரடு வைத்து, பழங்கள் வைத்துக்கொள்ளுங்கள்.

அன்றைய தினம், கார அடை, வெல்ல அடை படையல் ரொம்பவே மகத்துவம் வாய்ந்தது. காராமணி அடை என்றும் சொல்லுவார். இவற்றை வெண்ணெயுடன் கலந்து நைவேத்தியம் செய்வார்கள். நைவேத்தியம் செய்து, மனதார கணவருக்காக வேண்டிக்கொள்வது ஐதீகம்.

அப்போது, விரலி மஞ்சள் கலந்த மஞ்சள் சரடை கட்டிக்கொள்வார்கள் சுமங்கலிகள். அதேபோல், கன்னிப்பெண்கள், ‘நல்ல கணவன் அமையவேண்டும், இனிய வாழ்க்கைத் துணை அமையவேண்டும்’ என வேண்டிக்கொண்டு மஞ்சள் சரடை அணிந்துகொண்டு, நமஸ்கரிப்பார்கள்.